முதலமைச்சர் வேட்பாளர்கள் ஆரோக்கியமானவர்கள் தானா ? என கேட்கும் விகடன் திருமாவேலனின் வீடியோ

கருணாநிதியால் “எழும்ப முடியல “ , ஜெயலலிதாவால் “ நிக்க முடியல” , விஜயகாந்தால் “ நடக்க முடியல “
முதலமைச்சர் வேட்பாளர்கள் ஆரோக்கியமானவர்கள் தானா ? என கேட்கும் விகடன் திருமாவேலனின் வீடியோ
முதலமைச்சர் வேட்பாளர்கள் ஆரோக்கியமானவர்கள் தானா ? என கேட்கும் விகடன் திருமாவேலனின் வீடியோ
Written by:

நம்மில் பலரும், இதுபற்றி யோசித்திருப்போம், சிலர் இதுபற்றி பேசவும் செய்திருப்போம். ஆனால், விகடன் பத்திரிக்கையாளரான திருமாவேலன், கூர்மையாகவும், நகைச்சுவை கலந்த தொனியிலும்  நம்முள் எழுந்த கேள்வியை, வெளிப்படையாகவே கேட்டுவிட்டார். பிரதான ஊடகங்கள் கூட கேட்க தயங்கிய அந்த கேள்வியை வெறும் நான்கே நிமிடங்களில் ஓடும் வீடியோ மூலம் கேட்டுவிட்டார் இந்த மூத்த பத்திரிக்கையாளர். வேறென்ன ?  முதலமைச்சர் வேட்பாளர்கள் எல்லாரும், தமிழ்நாட்டை நடத்தி செல்லும் அளவு ஆரோக்கியமானவர்களாக இருக்கிறார்களா ? என்பது தான் அவரது கேள்வி.

“தமிழ்நாடு மிர்ரர் வித் திருமாவேலன்” என்ற நிகழ்ச்சியின் முதல் எபிசோடில் திருமாவேலன் “ நாட்டுல நடக்க போறது ஸ்டேட் எலக்ஷன ? ஹெல்த் எலக்ஷனா என்றே தெரியல “ என கிண்டல் கலந்த பஞ்ச் டயலாக்குடன் துவங்கியுள்ளார்.  இதற்காக போட்டியில் இருக்கும் மூன்று முதலமைச்சர் வேட்பாளர்களையும் ஒப்பீட்டுக்காக எடுத்துள்ளார். முதலில் 93 வயது திமுக தலைவர் கருணாநிதி “ அவரால எழுந்திருக்க முடியாது “. அதிமுக தலைவரும் முதலமைச்சருமான ஜெயலலிதாவுக்கு “ எழுந்து நிக்க முடியாது “. தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கோ “நடக்க முடியாது“ என குறிப்பிடுகிறார் திருமாவேலன்.

தொடர்ந்து, அந்த வீடியோவில், மனிதனுக்கு நோய் வருவதும், முதுமையடைவதும் இயற்கையானது தான் என குறிப்பிடும் அவர், ஆனால் இந்த உடல் நோயை கிண்டல் செய்து, அரசியல் செய்ய துவங்கியதே இந்த திராவிட கட்சிகள் தான் என கூறுகிறார். தற்போது, அவர்கள் தோண்டிய கிணற்றில் அவர்களே விழுந்துவிட்டதாகவும் சொல்லும் அவர், கருணாநிதி ஒரு முறை விபத்தில் சிக்கி அதனால் கண் பாதிக்கப்பட்ட போது, எம்.ஜி.ஆர் தரப்பில் ‘ பொட்ட கண்ணன்’ , ‘குருடு’  என்றெல்லாம் அழைத்ததை நினைவு படுத்தி கூறுகிறார். இதற்கு பதிலடியாகவே, எம்.ஜி.ஆர் உடல்நலம் இல்லாமல் இருந்த போது திமுக தரப்பு எம்.ஜி.ஆரை ஊமை என்று அழைத்ததையும் சுட்டிக்காட்டுகிறார்.

உடல்நலத்தை வைத்து கிண்டல் செய்யும் அதே பாரம்பரியம், எம்.ஜி.ஆர் காலம் முடிந்த பின் அவருக்கு பின் வந்த ஜெயலலிதாவாலும் தொடர்ந்தது. கருணாநிதி வீல் சேர் பயன்படுத்த துவங்கியதும், ஜெயலலிதாவே ‘அவரை அரிசி மூட்டை போல் அவரை தூக்குகிறார்கள் ‘ என்றெல்லாம் விமர்சித்ததாக கூறுகிறார்.

இதுபோன்றே, கருணாநிதியை ‘தள்ளுவண்டி’ என கிண்டலடித்த அதிமுகவினர், கடைசியாக அந்த கிண்டலை குறைத்து விட்டனர். ஏனெனில் அதிமுக தலைவர் ஜெயலலிதாவின் நிலைமையும் கிட்டத்தட்ட அதே போன்று ஆகிவிட்டது என்கிறார் திருமாவேலன்.

இவர்கள் இரண்டு பேருமே சரியில்லை என முதலமைச்சர் வேட்பாளருக்கான போட்டியில் குதித்த விஜயகாந்த், எதுக்கு சிங்கப்பூர் போகிறார் என்றே தெரியவில்லை. அவர் சிரிக்கிறாரா ? இல்லை அழுகிறாரா ? என யாருக்குமே தெரியவில்லை என கூறுகிறார்.

கடைசியாக, இவர்கள் மூன்று பேருக்குமே பிரச்சினை உடலில் இல்லை மனதில் தான் உள்ளது என குறிப்பிடும் அவர், எப்படியாவது முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்துவிட வேண்டும் என்று தான் அவர்கள் நினைக்கிறார்களே தவிர, செயல்பட வேண்டும் என நினைக்கவில்லை என கூறும் அவர், நீங்க சிஎம்மை செலக்ட் பண்ணணும்னு நினைக்கிறீர்களா ? இல்லை இவர்கள் மூன்று பேருக்கும் ஹெல்த் செக் பண்ணணும்னு நினைக்கிறீர்களா என கேட்டு முடிக்கிறார்.

News, views and interviews- Follow our election coverage.

Related Stories

No stories found.
The News Minute
www.thenewsminute.com