ஐபிஎஸ் அதிகாரியாக விரும்பி அரசியல்வாதியானது எப்படி? பிரேமலதாவுடன் ஒரு நேர்காணல்

ஒரு பெரிய நடிகரை திருமணம் செய்து கொள்ள போகிறோம் என்பதை அறிந்து இன்ப அதிர்ச்சியடைந்ததாக விஜயகாந்துடனான திருமண அனுபவத்தை குறித்து கூறுகிறார் பிரேமலதா.
ஐபிஎஸ் அதிகாரியாக விரும்பி அரசியல்வாதியானது எப்படி? பிரேமலதாவுடன் ஒரு நேர்காணல்
ஐபிஎஸ் அதிகாரியாக விரும்பி அரசியல்வாதியானது எப்படி? பிரேமலதாவுடன் ஒரு நேர்காணல்
Written by:

மக்கள் நெருக்கடி உள்ள கும்பகோணம் சந்தையில், 10 க்கும் மேற்பட்ட கார்கள் புடைசூழ பிரேமலதா விஜயகாந்த் தனது பிரச்சார வேனுடன் உள்ளே நுழைகிறார். அவரது வருகையை எதிர்பார்த்தபடியே காத்திருந்த  மக்கள் ‘ அண்ணி வருகிறார் ‘ என ஆரவாரம் எழுப்புகின்றனர். அவர்களிடையே தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா பிரச்சார வேனில் எழுந்து, தனது கைகளை அசைத்தபடி, ஆவேசமாக பேசுகிறார்.

பிரேமலதாவை பொறுத்தவரை, ஒரு குறுகிய காலத்தில், தேமுதிகவின் வலுமிக்க சக்தியாக உருவெடுத்தவர். அவரது கணவரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்திற்கு மேடைபேச்சு என்பது சற்று சிரமமான காரியம் தான். அந்த குறையை தெளிவாக பூர்த்தி செய்கிறார் பிரேமலதா விஜயகாந்த். கடந்த மார்ச் 10 ஆம் தேதி, விஜயகாந்த் சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் நடைபெற உள்ள 2016 சட்டமன்ற தேர்தலில் தான் தனியாக போட்டி போடப்போவதாக அறிவித்தார். அன்றைய தினம் அந்த அறிவிப்பினை தொடர்ந்து பிரேமலதா திமுகவையும்,அதிமுகவையும் கடுமையாகவே தாக்கி பேசினார்.

கடந்த 2014 இல் ஒட்டுமொத்த இந்தியாவும் மோடிக்கு கிடைத்த பாராளுமன்ற தேர்தல் வெற்றியை பற்றி பேசி கொண்டிருக்கும் போது, தமிழகத்தில் பிரேமலதாவின் பிரச்சாரத்தை குறித்து மோடி புகழ்ந்து பேசியது பலரின் புருவங்களையும் உயர்த்தியது.

ஆனால், ஆம்பூர் எனும் சிறு நகரத்திலிருந்து வந்த பிரேமலதா தனது வாழ்வில் என்றேனும் ஒருநாள் ஒரு அரசியல் தலைவர் ஆகப்போகிறோம் என்று நினைத்திருப்பாரா ?

“ஒருபோதும் இல்லை” என்கிறார் பிரேமலதா. “ நான் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாகவே விரும்பினேன்.” என கூறிய பிரேமலதா, கும்பகோணத்தில் தனது நெருக்கடியான தேர்தல் பிரச்சார நேரத்திலும் கூட நியூஸ்மினிட் நேர்காணலுக்கான தனது நேரத்தை ஒதுக்கினார்.

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் கரும்பு ஆலை ஒன்றின் மேலாளராக பணிபுரிந்த கண்ணையாவுக்கும் அவரது மனைவி ஹம்சவேணிக்கும் மகளாக பிறந்தவர் தான் பிரேமலதா. தனது மாணவர் பருவத்தில் மற்றெல்லாவற்றையும் விட, விளையாட்டு உள்ளிட்ட பிற திறன்களை வளர்ப்பதில் தான் தனது கவனம் முழுவதும் இருந்ததாக கூறுகிறார் பிரேமலதா. “ பள்ளியில் நான் ஒரு அத்லெடிக் சாம்பியனாக இருந்தேன்.டென்னிஸ், டேபிள் டென்னிஸ் என என்னால் முடிந்த விளையாட்டுகளை எல்லாம் விளையாடி வந்தேன்.”

விளையாட்டிலும், நாடக கலைகளிலும் அவரது ஈடுபாடு பள்ளி பருவத்திலிருந்து கல்லூரி பருவத்திற்கும் தொடர்ந்தது. காட்பாடியில் உள்ள ஆக்சிலியம் கல்லூரியில் இளங்கலை பட்டபடிப்பை அவர் படித்தார். “எனது பட்டப்படிப்பின் இறுதியாண்டில், கல்லூரி விழாவில், மாணவர்களில் ஒருவரை தலைமை விருந்தினராக தேர்ந்தெடுக்க முடிவு செய்தது. அதற்காக நடந்த ஓட்டெடுப்பில் மாணவர்கள் என்னை தலைமை விருந்தினராக தேர்வு செய்தனர். எனது மாணவர்கள் சில மணிநேரத்திற்கு, தலைமை விருந்தினராக இருந்த எனது  முன்னிலையில்  அணிவகுப்பு மரியாதை மற்றும் வேறு சில நிகழ்ச்சிகளும் நடத்தினர்.” என தனது கல்லூரி கால சிறந்த நாட்களை நினைவுகூரலானார்.

ஆனால், அவரது ஐ.பி.எஸ் கனவு ஒரு போதும் நனவாகவில்லை.” எனது கல்லூரி படிப்பு முடிந்தவுடனேயே எனக்கு திருமணமும் நடந்துவிட்டது.” என நனவாகாததன் காரணத்தையும் கூறினார்.

ஜனவரி 1990. விஜயகாந்த், தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நேரம். விருதுகளை அள்ளி குவித்தும், சினிமாவில் வணிக ரீதியாகவும் உயர்ந்த இடத்தில் இருந்தார் அவர். பிரேமலதாவின் குடும்பத்தினருக்கு விஜயகாந்திடம், பெண் கேட்டு அழைப்பு வந்தது. “ எல்லாமே விரைவாக நடந்தன. ஜாதகம் வேறு நன்றாக பொருந்தியிருந்தது.அவரால் வேலூர் வரை பயணம் செய்ய முடியாது என்பதால் நான் சென்னையில் உள்ள எனது சகோதரியின் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டேன். குடும்பத்தினரின் சம்மதத்தை தொடர்ந்து திருமணம் ஜனவரி 31 அன்று நடந்தது.” என தனது திருமணத்தை பற்றி கூறினார் பிரேமலதா.

இன்று, சிறந்த பிரச்சாரகராக மாறி இருக்கும் பிரேமலதா, அன்று ஒரு பிரபல நடிகரை திருமணம் செய்யபோவதை நினைத்து, இன்ப அதிர்ச்சியடைந்ததாக கூறுகிறார். “ஒரு பெரிய நடிகர் என்னை திருமணம் செய்து கொள்ளபோவதை நினைத்து எனக்கு தூக்கமே வரவில்லை.”

திருமணமும் முடிந்தது. ஆனால், புதுமாப்பிள்ளையான விஜயகாந்த் மறுநாளே படப்பிடிப்புக்காக வெளியே கிளம்பிவிட்டார்.”மதுரையின் தமுக்கம் மைதானத்தில் திருமண நாளன்று, எனது கண்ணுக்கு எட்டிய தூரம் கூட்டம் நிரம்பி வழிந்தது. திருமணம் முடிந்து சென்னை வந்து சேர்ந்ததும், அவர் ரொம்பவே பிஸியாகிவிட்டார். எங்களுக்குள் வழக்கமான ஹனிமூன் கூட நடைபெறவில்லை. ’புதுபாடகன்’ என்ற சினிமா படப்பிடிப்பு ஊட்டியில் நடந்த போது, நான் அவருடன் சென்றேன். அது தான் எங்கள் ஹனிமூன் என்று எனது குடும்பத்தினர் கூறிக்கொள்வது வழக்கம்.” என்றார்.

அதன் பின்னர், வாழ்க்கை பயணம் மாறத்துவங்கியது. மற்ற நடிகர்களின் மனைவிகளை போல் அல்லாமல்,பிரேமலதா சில பொறுப்புகளை ஏற்று செயல்படுத்த துவங்கினார். 2003 இல் விஜயகாந்தின் நம்பிக்கைக்குரிய  உதவியாளராக இருந்த ராமு வசந்தனின் உடல்நலம் மோசமடைந்தது. அதனை தொடர்ந்து தனது கணவரின் ரசிகர் மன்றத்தினை கவனிப்பதில் பிரேமலதா கவனம் செலுத்தினார்.

“ரசிகர்கள் வீட்டு திருமணங்களில் கலந்து கொள்வதிலும் பிற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள துவங்கினேன். ரசிகர்களை தொடர்பு கொள்ளுவதிலும் கேப்டனின் மனநிலையை அவர்கள் அறிந்து கொள்ளவும் ஒரு தொடர்பாக நான் உருவானேன்.” என கூறுகிறார் பிரேமலதா.

விஜயகாந்தின் ரசிகர் மன்றம் நன்கு வளர்ந்ததும், அதற்காக ஒரு பொதுவான கொடியை அவர்களே உருவாக்கி கொண்டனர். “2004 இல் பாமகவினர் மாநிலம் முழுவதும் போராட்டத்தை நடத்தியதுடன், எங்கள் ரசிகர்களையும் தாக்க துவங்கினர். இயக்குனர் முருகதாசின் திருமணம் நடந்த இடத்திற்கு வெளியே கேப்டன் பேசிய கருத்துக்களினால் அவர்கள் கோபத்துடன் இருந்தனர். அவர்களது தாக்குதல் கட்டுப்படுத்த இயலாத அளவுக்கு செல்ல துவங்கியது. எங்கள் ரசிகர்களும் அவர்கள் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க ஆரம்பித்தனர்.கருணாநிதி பிரச்சினையில் தலையிட்ட பின்னரே அந்த தாக்குதல்கள் நிறுத்தப்பட்டது. ஆனால், இந்த நிகழ்வுக்கு பின், ரசிகர்கள், இது போன்ற தாக்குதல்களை எதிர்கொள்ளவாவது ஒரு அரசியல் கட்சி துவங்க வேண்டும் என்று எங்களிடம் கூறினர்.” என்றார்.

இந்த சம்பவம் முடிந்து ஒரு வருடம் கழித்து, விஜயகாந்த் மதுரையில் வைத்து தேமுதிக என்னும் அரசியல்கட்சியை துவங்கினார்.

“கேப்டன் எப்போதுமே திமுக மற்றும் அதிமுகவுக்கு எதிராக கோபத்துடனேயே இருந்து வந்தார். கட்சியின் உருவாக்கமும் இயற்கையாகவே, அந்த எதிர்ப்பை கொண்டு சென்றது. 2006 தேர்தலில் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் நாங்கள் 234 தொகுதிகளிலும் போட்டி போட்டோம்.விருத்தாச்சலம் தொகுதியில் மட்டும் நாங்கள் வெற்றி பெற்றாலும்,8.4 % வாக்குகளை பெற்று அனைவரையும் ஆச்சரியப்படவைத்தோம். “ என்றார்.

பிரேமலதா, தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை தனது கணவர்  போட்டியிட்ட தொகுதியான விருத்தாச்சலத்தில் மேற்கொண்டார். அது விஜயகாந்த் பிற தொகுதிகளில் பிரச்சாரத்திற்கு செல்ல உதவியாக இருந்தது.

2009 இல் விஜயகாந்தின் உதவியாளர் ராமுவசந்தனின் மரணத்தை தொடர்ந்து, பிரேமலதாவும், அவரது சகோதரர் சுதீசும் விஜயகாந்துக்கு உதவும் வகையில் கட்சி பொறுப்புகளை கவனிக்க துவங்கினர்.

விஜயகாந்த் ஏன் ஒவ்வொரு தேர்தலின் போதும், தனது தொகுதியை மாற்றி கொண்டிருக்கிறார், தோல்வி குறித்த பயம் தான்காரணமா என கேட்ட போது, “ ஒருபோதும் இல்லை. உங்கள் கருத்தின்படி பார்த்தால் கூட கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் எங்கள் வேட்பாளர் முத்துக்குமார் எப்படி விருத்தாச்சலத்தில் வெற்றி பெற்றார் ? கேப்டன், கட்சியின் தலைவராக உள்ளார். அவரை முடிந்த அளவில் பல தொகுதிகளில் போட்டியிட வைத்து பிரதிநித்துவப்படுத்தவே விரும்புகிறோம்.” என்றார்.

பிஜெபியுடனான கூட்டணி முடிவை நிராகரித்ததில், விஜயாகாந்தின் பின்னில் பிரேமலாதா தான் இருந்தார் என கூறப்பட்டது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, இந்த கருத்தை அவர் நிராகரித்தார். கட்சியில் தனக்கு முடிவெடுக்கும் எந்த அதிகாரமும் இல்லை என்று கூறினார்.

“இது கட்சியில் விவாதித்து எடுக்கப்பட்ட முடிவு. நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். மற்றபடி ஊடகங்கள் கூறுவது போல், நாங்கள் அவர்களை சந்திக்க ஒருபோதும் மறுக்கவில்லை. தமிழிசை சவுந்தராஜன் எங்கள் அருகில் வசிப்பவர். அவரை எங்கள் வீட்டுக்கு வர கூடாது என நாங்கள் சொல்ல கூடுமா ? ஆனால் நாங்கள் கூட்டணியை விரும்பவில்லை. “ என்றார்.

அதுபோன்றே அவரது கட்சி திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது என்ற வாதத்தையும் மறுத்தார். “ ஏதாவது ஒரு சின்ன சந்திப்பேனும் நடந்திருந்தால் அது பிரகாஷ் ஜவேட்கருடன் மட்டுமே நிகழ்ந்துள்ளது. மற்றபடி, நாங்கள் திமுகவுடன் நாங்கள் எந்த சந்திப்பும் நடத்தவில்லை. நாங்கள் ஒருபோதும் அவர்களுடன் கூட்டணி வைத்து கொள்ளவும் விரும்பவில்லை.” என்றார்.

கட்சி தொண்டர்கள் அனைவரும் அவரை கண்ணியமாக, அண்ணி என அழைக்கும் போது, பிரேமலதா ஜெயலலிதாவை தனிப்பட்ட வகையில் புண்படுத்தும் முறையில் கடுமையாக விமர்சித்திருந்தார். ஏன் குறைந்தபட்ச மரியாதையை கூட மற்றொரு பெண் தலைவர் என்ற முறையில் வழங்கவில்லை என கேட்டபோது,” நான் எதற்காக மரியாதை கொடுக்க வேண்டும் ? “ என கேட்ட அவர், “ அவர் இந்த மாநிலத்தை பல ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளார். அவர் இந்த மாநிலத்திற்கு எதை விட்டு சென்றுள்ளார் என பாருங்கள். அவரை பற்றி பேசும் போது நான் கண்ணியமாக பேசிவிட முடியாது. எனது வாழ்க்கையில் அவரை இருமுறை மட்டுமே சந்தித்துள்ளேன். ஆனால் எனக்கு தனிப்பட்ட கோபம் ஒருபோதும் அவரிடம் இல்லை. ஆனால், ஜெயலலிதாவும் கருணாநிதியும் இந்த மாநிலத்திற்கு எளிதில் மன்னிக்க முடியாத பலவற்றை தமிழக மக்களுக்கு செய்துள்ளனர்.” என்றார்.

விஜயகாந்தின்  நடவடிக்கைகள், குறிப்பாக அவர் பத்திரிக்கையாளர்களை துப்பியது குறித்த கேள்விக்கு பிரேமலதா, தனது கணவர் விஜயகாந்தை நியாயப்படுத்தி பேசினார். “ அவர் ஒரு ஆக்ஷன் ஹீரோ. அவருக்கென சில குறிப்பிட்ட நடத்தைகள் இருக்கும். அவற்றையெல்லாம் ஊடகங்கள் ஏன் பெரிதுபடுத்துகின்றன ? “ என கேட்டார்.

அவர் பத்திரிக்கையாளர்களை துப்பிய விவகாரத்தை பற்றி நான் கேட்ட போது “ தனது கண்டனத்தை தெரிவிக்கும் ஒரு முறை தான் அது. கருணாநிதியும், ஜெயலலிதாவும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்கள். கடுமையான வெயிலில் பொதுமக்களை அமர வைப்பதன் மூலம், தெளிவாக மனித உரிமைகள் மீறப்படுகின்றன. ஊடகங்கள் எல்லாம் ஏன் அவற்றை கண்டுகொள்ளவில்லை ? அவர்கள் வண்டி நிறைய பணத்தை கொண்டு இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்கள். ஆனால், எங்கள் கூட்டணியில் உள்ள எந்த கட்சிக்குமே பணம் இல்லை என்பதை ஒவ்வொருவரும் அறிந்து வைத்துள்ளனர். இதுவரை ஊடகங்களுக்கு, அவர்கள் தவறுகளை சுட்டி காட்ட நேரம் வரவில்லை.” என்றார்.

தேமுதிகவின் வாக்கு சதவீதம் இந்த தேர்தலில் குறைந்துவிடும் என அரசியல் விமர்சகர்கள் பலரும் கூறினாலும், பிரேமலாதா கேப்டன் தமிழக முதல்வர் ஆவதை பற்றிய தனது கனவை உறுதியுடன் கூறினார். “ எங்களுக்கென ஒரு இலக்கு உள்ளது. சவால் நிறைந்த அதனை அடைய கடினமாக உழைப்போம். எங்களிடம் பணம் இல்லை. ஆனால் எனக்கு நம்பிக்கையும் இருக்கிறது. கேப்டன் முதலமைச்சர் ஆவதை நான் விரும்புகிறேன். மக்களும் ‘இது போன்ற தமில்நாடால் சாதிக்கமுடியும்’. என்று கூறுவர். விவசாயம் தான் நமது பொருளாதாரத்தின் முதுகெலும்பு. ஆனால் விவசாயிகள், மினசாரமும் தண்ணீரும் இல்லாமல் அவதிப்படுகின்றனர். எங்களால் தனிப்பட்ட முறையில் அதிகம் செய்ய முடியாது. ஆனால் அரசு அமைந்தால் அவர்கள் தலைவிதியை நல்ல முறையில் மாற்றிவிட முடியும்.” என்றார்.

இந்த கனவை நனவாக்க, தான் ஒவ்வொரு நாளும் அதற்காக உழைப்பதாக கூறுகிறார். ஒவ்வொரு, பிரச்சார மையங்களிலும் உள்ளூர் பிரச்சினைகளையும் அவர் கூறி வருகிறார். கும்பகோணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அவர் பேசும் போது, அங்குள்ள 15 வது வார்டில் ஒரு கிணறு தேவையுள்ளது என கூறினார். அதுபோன்றே சிதம்பரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பள்ளி கூடம் திறக்கப்பட வேண்டிய தேவையை பற்றி கூறினார்.

பிரச்சாரத்திற்கு செல்லும் வழியில் பிரேமலதாவின் பிரச்சார பொறுப்பாளராக இருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ நல்லதம்பி மூத்த குடிமக்களை அடையாளம் கண்டு வைக்கிறார். அவர்களுக்கு துண்டுகளை அணிவிக்கிறார். இது பற்றி அவரிடம் நான் கேட்டபோது, “ அண்ணி, ஒவ்வொரு பிரச்சார மையங்களிலும் பொன்னாடை போர்த்தி வரவேற்கப்படுகிறார். அடுத்த பிரச்சார மையங்களில் இருக்கும் மூத்த குடிமக்களுக்கு அவற்றை போட்டு செல்ல அண்ணி என்னிடம் கூறியுள்ளார்.” என்றார்.

கடந்த சிலவாரங்களாக, பிரேமலதா ஒரு சூட்கேஸ் பெட்டியை மட்டுமே வைத்திருக்கிறார். ஒவ்வொரு நாள் மாலையும், அவர் பிரச்சாரத்திற்கு தயாராகும் போது, அவரது பாதுகாவலர்கள், அந்த பெட்டியை எடுத்து பிரச்சார வேனில் எடுத்து வைக்கிறார்கள். அவர் தங்கியிருக்கும் ஹோட்டலின் வெளியே அவரது ஆதரவாளர்களும் திரண்டு காணப்படுகினறனர்.

தனது ஆதரவாளர்களுடன், அவர் தினமும் சில நிமிடங்கள் செலவழித்தாலும், அவருக்கு அருகில் நெருங்கி செல்ல வேண்டாம் என்றும், படங்கள் எடுப்பதை தவிர்க்கும்படியும் கேட்டு கொள்ளப்படுகின்றனர்.

Related Stories

No stories found.
The News Minute
www.thenewsminute.com