வாரங்கல்லில் இருந்து பெங்களூரு வந்து, தனது கடின உழைப்பால் அனைவரின் கவனத்தை ஈர்த்தவர்.

Tamil Tuesday, June 28, 2016 - 12:04

பிரபல கால் டாக்சி நிறுவனமான உபர் இந்தியாவில் கார் ஓட்டி வந்த இந்தியாவின் முதல் பெண் கால் டாக்சி டிரைவர் வீரத் பாரதி தனது வீட்டில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இறந்து போன பாரதிக்கு வயது 39  ஆகிறது. திங்கள் அன்று மாலை 7 மணியளவில், பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் தூக்கு போடப்பட்ட நிலையில் இறந்து போன அவரது உடலை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

தெலுங்கானா மாநிலம் வாரங்கலை பூர்வீகமாக கொண்ட பாரதி, பெங்களூருவில் தனியாக வசித்து வந்தார்.

“உடலை தற்போது கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளோம். அதன் அறிக்கை கிடைத்த பின்னரே, அதன் பின்னில் என்ன நடந்தது என தெரியவரும். எந்த வித தற்கொலை குறிப்போ அல்லது யாரேனும் அத்துமீறி நுழைந்த்தற்கான தடயங்களோ நாங்கள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை” என கூறினார் வடக்கு பெங்களூரு காவல் ஆணையர் சுரேஷ். மேலும், இது ஒரு தற்கொலையாக இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையே, பாரதியின் பெற்றோர், சம்பவம் அறிந்து பெங்களூருவிற்கு கிளம்பி வந்துள்ளனர்.

கடந்த 2013 இல் பாரதி, இந்தியாவின் முதல் உபர் கால் டாக்சி ஓட்டுனராக அறியப்பட்டார். அதற்கு முன்னர், கடந்த 2005 இல் வாரங்கலில் இருந்து பெங்களூருவுக்கு வேலை தேடி இடம்பெயர்ந்த அவர், தையல் வேலை செய்து வந்தார். அதன் பின்னர் அவர் ஒரு டிராவல் ஏஜென்சியில் வேலைக்கு சேர்ந்த அவர், ஒரு தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் கார் ஓட்டி பழகினார்.

சில வாரங்களுக்கு முன், பாரதி நியூஸ் மினிட்டிற்கு தனது பணி அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Become a TNM Member for just Rs 999!
You can also support us with a one-time payment.