“நாங்கள் சென்று பார்த்த போது, அந்த பெண் இரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவளை தாக்கியவன் அதற்குள் தப்பி சென்றுவிட்டான்.” என கூறுகிறார் கடைக்காரர் ஒருவர்

Tamil Crime Saturday, June 25, 2016 - 23:20

பொதுவாகவே அதிக நெருக்கடி இல்லாத ரயில் நிலையம் தான் நுங்கம்பாக்கம் ரயில்நிலையம். இருப்பினும், குறைந்த அளவேனும் பயணிகள் எப்போதுமே வந்து செல்வது வழக்கம்.

வெள்ளிக்கிழமை காலையில் கூட 24 வயதான இன்போசிஸ் ஊழியர் சுவாதி ரயில் நிலைய பிளாட்பாரத்தில் வைத்து கொல்லப்பட்ட போது, பயணிகளில் பலர் அடுத்த ரயிலை பிடிக்க காத்து கொண்டிருந்தனர்.

உதவிக்கேட்ட சுவாதியின் கூக்குரலை கேட்டும் கேட்காதது போல் நின்றிருந்த கூட்டம், வேறு எங்கேயோ பார்த்தபடி நின்றதாக கூறுகிறார் ரயில் நிலையத்தில் கடை நடத்தி வரும் கடைக்காரர் ஒருவர்.

தனது பெயரை வெளியில் சொல்லக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் நியுஸ் மினிட்டிடம் பேசிய அவர், காலையில் தான் ஒரு பெண் கூக்குரலிடுவதை கேட்டதாகவும், அந்த சத்தத்தை கேட்டதும் தானும் வேறு சிலரும் அங்கு ஓடி சென்று பார்த்த போது அந்த பெண் ரத்த வெள்ளத்தில் கிடந்ததாகவும் கூறினார்.

கடைக்காரர் காலை 6 மணியளவில் கடையை திறந்த்தாகவும், 6.30 மணியளவில் சுவாதியின் அழுகை சத்தத்தை கேட்டதாகவும் கூறுகிறார். “நாங்கள் அப்பகுதியை நோக்கி விரைந்தோம். அந்த பெண் கழுத்து மற்றும் தொண்டை பகுதிகளில் படுகாயங்களுடன், இரத்த வெள்ளத்தில் கிடந்தாள். நாங்கள் அவளை தாக்கியவனை பார்க்கவில்லை. அதற்குள் அவன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டான்.” எனக் கூறுகிறார் அந்த கடைக்காரர்.

அவர் மேலும் கூறுகையில் “இந்த படுகொலை சம்பவத்தை நேரில் பார்த்த பலரும் அங்கு நின்றிருந்தனர். அவர்கள் அடுத்த ரயில் வந்த போது அவ்விடத்தை விட்டு நகர்ந்துவிட்டனர் ” என கூறினார்.

இந்த கொடூர சம்பவம் காலையில் நடந்தாலும், சுவாதியின் உடல் அங்கிருந்து எடுக்கப்பட்டது 8.30 மணிக்கு பின்னர் தான்.

“பொதுவாக 8 மணிக்கு முன்னர் எந்த போலீசாரும் ரயில் நிலையத்தில் இருப்பதில்லை.” என்கிறார் கடைக்காரர்.

ரயில்வே போலீஸ் அதிகாரி ஒருவரும் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். முந்தின நாள் இரவு  முதல் மறுநாள் காலை 7 மணி வரை எந்த போலீசாரும் அந்த ரயில் நிலையத்தில் பணியில் இல்லை என கூறுகிறார் அவர். அதற்கு காரணம்  ரயில்வே போலீசில் நிலவும் ஆள்ப் பற்றக்குறை தான் எனவும் கூறுகிறார்.

இந்த அதிர்ச்சிகரமான சம்பவம், சுவாதி வேலைக்கு செல்வதற்காக ரயிலை பிடிக்க காத்து கொண்டிருந்த போது நடந்துள்ளது. அதற்கும் சில நிமிடங்களுக்கு முன்னர் தான், சுவாதியின் தந்தை சீனிவாசன் அவரை ரயில் நிலையத்தில் கொண்டு வந்து விட்டு சென்றுள்ளார். பின்னர் ரயிலுக்காக காத்திருந்த சுவாதியை, கறுப்பு பேண்ட் அணிந்த ஒரு வாலிபர் நெருங்கி, கத்தியால் தாக்கியதாக சிலர் தெரிவித்தனர்.

Become a TNM Member for just Rs 999!
You can also support us with a one-time payment.