கிருஷ்ணா மற்றும் கிஷோரின் பாட்டி- தாத்தா அனுமதியுடன், நியூஸ் மினிட் அந்த இரு குழந்தைகளுக்கு நிதியுதவி செய்ய நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.

Tamil Wednesday, April 13, 2016 - 15:33

கிருஷ்ணாவும் அவளது இளைய சகோதரன் கிஷோரும் இரு தினங்களுக்கு முன் தனது பெற்றோரை கண்முன்னே இழந்த காட்சியை நினைத்து விம்பியபடியே அமைதியாக இருந்தனர். பரவூர் அருகே குருமண்டல் பி வார்டில் இருக்கும் அவர்களது வீட்டிற்கு நியூஸ் மினிட் குழுவினர் சென்ற போது, அதிர்ச்சியுடன் இருந்த இந்த குழந்தைகளை காண நேர்ந்தது.

45 வயதேயான பென்சி கவிராஜும், 41 வயதான அவரது மனைவி பேபி கிரிஜாவும் புற்றிங்கலில் கடந்த ஞாயிறு அன்று, நடந்த அந்த கோர வெடிவிபத்தில் தங்கள் உயிரை இழந்துள்ளனர். கோயில் மைதானத்தில் அவர்கள், அந்த இரவு ஒரு கடையை திறந்து வைத்திருந்தனர். இந்த இரு குழந்தைகளும், தங்கள் பெற்றோருக்கு கடையில் உதவுவதற்காக, அவர்கள் கூடவே நின்றிருந்தனர். 

இவர்களுடனேயே, கிரிஜாவின் அம்மாவும், அவரது சகோதரியும் கூட அந்த கடைக்கு அருகிலேயே இணையாக ஒரு கடையும் போட்டிருந்தனர்.

அன்று நடந்த சம்பவம் குறித்து 14 வயது நிரம்பிய கிருஷ்ணா, உடைந்து போன குரலில் பேசினாள்.”வெடிப்பொருட்களிலிருந்து பறந்து வந்த இரு தீப்பொறிகளை நான் கண்டதும், அருகில் உள்ள வீட்டில் சில நிமிடங்கள் படுப்பதற்காக சென்றேன். சிறிது கண்ணயர்ந்ததும், திடீரென காதை பிளக்கும் வெடி சத்தத்தை கேட்டு எழும்பினேன். என்ன நடக்கிறது என எனக்கு ஒன்றுமே தெரியவில்லை. அந்த பகுதி முழுவதும் வெளியே செல்ல முடியாத அளவு இருளில் மூழ்கியதுடன் எங்கும் புகை மண்டலமாக காணப்பட்டது. கிஷோரின் அழுகை சத்தம் என்னை வேகமாக வெளியே ஓடவைத்தது ...” என கூறி கொண்டிருந்த கிருஷ்ணா மேற்கொண்டு பேச முடியாமல் இருந்தாள்.

தனது சகோதரி, அந்த அதிர்ச்சிகரமான நிகழ்வை பேசிக் கொண்டிருக்கும் போது, கிஷோர் தனது தலையை தாழ்த்தி கீழ் நோக்கி பார்த்து கொண்டிருந்தான்.அவனது சோக முகத்தை கவனித்த அவனது சித்தி ( தாயின் சகோதரி) அவனை இறுக்கி பிடித்த வண்ணம் தனது பேச்சை தொடர்ந்தார். “ கூடுதலாக கொஞ்சம் பேப்பர் கப்களை அவனது பாட்டியிடமிருந்து வாங்கி வர அவனது அம்மா அனுப்பினார்.அவன் தனது காலடியை எடுத்து வைத்த அடுத்த கணம் பயங்கரமான அந்த வெடிப்பு மொத்த பகுதியையும் குலுக்கியது. ஓலமிட்டபடியே தனது, கடைக்கு ஓடிய அவனால், இரத்தம் தோய்ந்த முகத்துடன் தனது தந்தை முனகியபடியே கீழே விழுந்து கிடப்பதை காண முடிந்தது. அவனது அலறல் சத்தத்தை கேட்டு, அவனது சகோதரியும் அவனிடம் ஓடி வந்தாள். என்ன செய்வதென்றே தெரியாமல்,இருவரும் அவர்கள் பாட்டியின் கடையை நோக்கி ஓடினார்கள். அங்கே அவர்கள் தங்கள் 38 வயது சித்தி அனிதா வலது காலில் படுகாயத்துடன்  காணப்பட்டார். பறந்து வந்த சில குப்பைகள் நெஞ்சில் தாக்கியதல்லாமல், அவர்களது பாட்டி பெரிய பாதிப்புகள் இல்லாமல் இருந்தார். இந்த களேபரங்களுக்கு இடையில், அவர்களது அம்மா படுகாயத்துடன், அவர்களது தந்தையிடமிருந்து சில அடி தூரம் தள்ளி கிடப்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.”

ஊடக கவனம் குவிந்தவுடன் மாநில அரசு சுதாரித்துக் கொண்டது. குழந்தைகள் நல்வாழ்வு குழு, பெற்றோரை இழந்த குழந்தைகளை கவனிப்பதற்கு தேவையான நடவடிக்கையில் இறங்கியது.

குழந்தைகள் நலவாழ்வு குழுவின் சேர்மேன் சிஜே ஆன்றனி கொல்லத்தில் வைத்து, நியூஸ் மினிட்டிடம் கூறுகையில், கேரளா மாநில ஒருங்கிணைந்த குழந்தைகள் நல திட்டத்தின்படி தங்கள் பெற்றோரை இழந்த குழந்தைகள் அரசின் பொறுப்பின் கீழ் பராமரிக்கப்படுவார்கள் என கூறினார்.

“சிறார் நீதி சட்டம் 2000 , பிரிவு 2டி எங்களுக்கு அந்த அதிகாரத்தை தந்துள்ளது. அந்த குழந்தைகளின் உறவினர்கள், அவர்களை பராமரிப்பதாக வாக்குறுதியளித்தால் கூட, நாங்கள் அந்த குழந்தையின் விபரங்களை பதிவு செய்து கொள்வோம். அதனால், பிற்காலத்தில் அந்த குழந்தைகள் பாதுகாப்பையும், உடல் நலத்தையும், கல்வியையும் தடையின்றி பெறுவதை உறுதி செய்து கொள்ள முடியும்.” என உறுதியாக கூறினார்.

குழந்தைகளின் தாய் வழி உறவினர்கள் ஏதேனும் ஆட்சேபித்தால், குழந்தைகள் நலவாழ்வு ஆணையாளர், குழந்தைகளின் பாட்டி- தாத்தாக்களை அவர்களின் பராமரிப்பாளராக நியமிக்கலாம் என சிறார் நீதி சட்டம் கூறுகிறது.

பென்சியை பொறுத்தவரை தனது பெற்றோரை பல ஆண்டுகளுக்கு முன் இழந்துவிட்டார். இதனால் கிரிஜாவின் பெற்றோர் 71 வயதான ஹரிதாசனும், 68  வயதான சரசம்மாவும் தான் குழந்தைகளுக்கு பாட்டி- தாத்தாவாக உள்ளனர்.

இவர்களது வீடும், இக்குழந்தைகளின் வீட்டின் அருகிலேயே உள்ளது, மேலும் கிருஷ்ணாவும், கிஷோரும் பள்ளிக்கு செல்லும் வழியில் உள்ளதால் இருவரும் பாட்டி-தாத்தா வீட்டிற்கு தினசரி சென்று வருவது வழக்கம்.

சரசம்மா கூறுகையில், “ தினசரி பள்ளி கூடம் முடிந்து வீட்டுக்கு போகும்போது எங்கள் வீட்டில் சாப்பிட்டுவிட்டு தான் இருவரும் போவார்கள். ஏதேனும் காரணத்திற்காக வர தாமதித்தால் நான் மிகவும் பதட்டமடைந்து விடுவேன்.” என்றார்.

அவரது கடைசி மகள் கூறுகையில், “ எப்படி நாங்கள் எங்கள் குழந்தைகளை இன்னுமொரு குழந்தைகள் மையம் போன்ற இடத்தில் கொண்டு போய்விடுவோம் ? நாங்கள் ஏழைகள் என்பதால், எங்களுக்கு பண உதவி கிடைத்தால் மகிழ்ச்சியுடன் ஏற்போம். ஆனால் குழந்தைகளை வேறு எங்கேயும் நாங்கள் அனுப்ப தயாராக இல்லை. அதனை குழந்தைகளோ, நாங்களோ விரும்பவில்லை.” என்றார்.

வீட்டை சுற்றி பார்க்கும் போது, அந்த வீடு ஏழ்மையான வீடு தான் என்பதை ஒருவரால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அந்த வீட்டு சுவரில் மங்கிய நிறத்தில் படங்கள் வரையப்பட்டிருந்தன. “ கிருஷ்ணா நல்ல முறையில் படம் வரைவாள். இங்கே பாருங்கள்.இதெல்லாம் அவள் வரைந்த படங்கள் தான்.” என அவளது பாட்டி பெருமிதத்துடன் கூறினார்.

“ கிருஷ்ணாவிற்கு இது போன்று, சுவரில் ஒரு சின்ன இடம் கிடைத்தால் போதும். அந்த இடத்தில் ஓவியத்தை வரைந்துவிட்டு ஓடிவருவாள். பின்னர் தனது அம்மாவிடம் இது எப்படியிருக்கு ? என கேட்பாள். இனி யாரிடம் சொல்வாளோ ?...” என கூறினார் கிருஷ்ணாவின் சித்தி.

ஆசிரியர் குறிப்பு : கிருஷ்ணா மற்றும் கிஷோரின் பாட்டி- தாத்தா அனுமதியுடன் நியூஸ் மினிட் அந்த இரு குழந்தைகளுக்கு நிதியுதவி செய்ய நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. நீங்கள் உதவ விரும்பினால் இதில் இணைக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து நிதியளிக்கலாம். அந்த பணம் கிருஷ்ணாவின் வங்கி கணக்குக்கு இறுதியில் மாற்றப்படும்.

Show us some love and support our journalism by becoming a TNM Member - Click here.