மலையாள செய்தி சேனலாகிய ஏசியாநெட், அங்கூர்லதாவின் படங்கள் என கூறி சில படங்களுடன் ‘இந்தியாவின் ஹாட்டஸ்ட் பெண் ‘ என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டது.

Tamil Friday, May 27, 2016 - 11:26

 பொதுவாகவே வட- கிழக்கு மாநில செய்திகள் பொதுமக்களுக்கு குறிப்பாக சமூக வலைத்தளவாசிகளுக்கு அவ்வளவு முக்கியத்துவமிக்கதாக தென்படுவதில்லை. ஆனால் அஸ்ஸாமில் பாஜக எம்.எல்.ஏவாக அங்கூர்லதா தேகா என்னும் பெண் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார் என்ற செய்தி வந்தவுடன் பலரது கவனமும் அந்த பக்கமாகவே திரும்பியது.

பர்டோவா தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்ட அவரை பலரும் திரும்பி பார்ப்பது பல காரணங்கள் இருக்கின்றன. டி.வி நடிகையாகவும், மாடல் அழகியாகவும் இருக்கும் அங்கூர்லதா ஒரு எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக மட்டுமல்லாது ரொம்பவே “ஹாட்டான “ எம்.எல்.ஏ என்றும் அவர்களால் கவனிக்கப்படுகிறார்.

படத்தயாரிப்பாளரான ராம் கோபால் வர்மா டிவிட்டரில் அங்கூர்லதாவின் படத்தை பகிர்ந்து கூடவே “அச்சே தின் ஹாஸ் இன்டீட் கம்’ (நல்ல நாட்கள் உண்மையில் வந்திருக்கிறது) என ஆபாசமான பொருள் தரும் வகையில் பதிவினை போட்டிருந்தார்.

 சமூகவலைத்தளங்களில் உள்ள சமீபத்திய டிரெண்டிங்குகளின் அடிப்படையில், கடந்த புதன்கிழமையன்று  மலையாள செய்தி சேனலாகிய ஏசியாநெட், அங்கூர்லதாவின்  படங்கள்  என கூறி சில படங்களுடன் ‘இந்தியாவின் ஹாட்டஸ்ட் பெண் ‘ என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டது. அவர்களது பேஸ்புக் பக்கத்தில் அதற்கான படங்களை பகிர்ந்த போது, அதில் இருந்த முதல்படமானது, படங்களின் தொகுப்பிலிருந்த மற்ற படங்களிலிருந்து வித்தியாசமாக  இருந்தது.

 தற்போது, அங்கூர்லதாவின் படங்கள் வாட்ஸ்அப் மற்றும் பிற சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும், அங்கூர்லதா எம்.எல்.ஏவின் படங்கள் என பரப்பப்படும் ஒரு படமானது மற்றொரு பெண்ணுடைய படம் என கூறப்படுகிறது.

சப்னா வியாஸ் பட்டேல், என பெயருடைய தொழில்முறை உடற்பயிற்சியாளர் ஒருவருடைய படம் தான் அங்கூர்லதா எம்.எல்.ஏ என்ற பெயரில் பிரசுரிக்கப்படுகிறது.இது குறித்து ஒரு பேஸ்புக் பதிவில், இணையத்தை நம்பத்தகுந்த தகவல்கள் கிடைக்கும் பகுதியாக பயன்படுத்தும்படி கேட்டு கொண்டுள்ளார்.

 இதுகுறித்து, நியூஸ் மினிட் சார்பில் அங்கூர் லதா எம்.எல்.ஏவிடம் பேசிய போது, தான் இதுபோன்ற மனதுக்கு வருத்தமளிக்கும் கருத்துக்களை மக்கள் கூறும் போதும் , ஒரு பிரிவு ஊடகத்தினர் செய்யும் தொடர் பிரச்சாரங்களையும் தவிர்த்துவிடுவதாக கூறுகிறார்.

“ எனது திறமையை தவிர்த்து, அழகை பற்றி மக்கள் விவாதிப்பதை நான் தொந்தரவாக நினைக்கவில்லை. ஆனால், அழகு என்பது ஒருவருடைய பெர்சினாலிட்டியுடன் ஒத்து போவது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன். கலைத்துறையில் வெற்றிகரமான நடிகையாக வலம் வந்த எனது தற்போதைய கவனம் முழுவதும் தொகுதியின் வளர்ச்சிக்காக கவனம் செலுத்துவதிலேயே உள்ளது. ஒரு நபரை பற்றி தனிப்பட்ட முறையில் பேசுவதற்கு எப்போதுமே மக்களிடம் ஏதேனும் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் அவற்றை எல்லாம் நான் தவிர்த்துவிடுகிறேன்.” என்றார்.

பெண்களை பற்றி இது போன்ற கருத்துக்கள் வருவது இது முதன் முறையல்ல. கேரளா மாநிலம் மூனாறு உதவி போலீஸ் சூப்பிரண்டாக இருக்கும் மெரின் ஜோசப் குறித்து மேய் 22 அன்று DainikBhaskar.com இல் வெளியான ஒரு கட்டுரை மோசமாக சித்தரிக்கப்பட்ட ஆணாதிக்க மனோபாவத்துடன் வெளியிடப்பட்டதுடன் பெண்ணின் முகத்தை வைத்து, அவரது மதிப்பினை குறைக்கும் வகையில் எழுதப்பட்டிருந்தது.

 தொடர்ந்து எழுந்த விமர்சனங்களை தொடர்ந்து, அந்த கட்டுரை, அந்த இணையதளத்திலிருந்து நீக்கப்பட்டது. இருப்பினும் அந்த கட்டுரை மேய் 23 அன்று மற்றொரு தலைப்பிடப்பட்டு வெளியிடப்பட்டது. இதுகுறித்து மெரின் கூறுகையில் “ மிகவும் அழகு வாய்ந்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆண் அதிகாரிகளை ஏன் காண முடியவில்லை என நீங்கள் என்றேனும் கவலைப்பட்டது உண்டா ? “ என கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Become a TNM Member for just Rs 999!
You can also support us with a one-time payment.