இந்த இணைய தளங்களை உலகளாவிய வலைத்தளமான www மூலம் பார்வையிட முடியாது

 Image: youtube
Tamil Internet Thursday, July 21, 2016 - 10:27

நடிகர் ரஜினிகாந்த்  நடித்த கபாலி திரைப்படம் டார்க் வெப் எனப்படும் இருண்ட வலைத்தளங்களில் வெளியாகியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. உண்மையில் டார்க் வெப் அல்லது இருண்ட வலைத்தளங்கள் என்றால் என்ன ?

பொதுவாக நீங்களும் நானும் www எனப்படும் world wide web என்ற முறையை பயன்படுத்தி தான் இணையத்தில் வலம் வருவது வழக்கம். இந்த முறையை பயன்படுத்துவது, நெருக்கம் மிகுந்த தெருவில் நீங்கள் நடந்து செல்லும் போது, யாரேனும் ஒருவர் உங்களை அடையாளம் கண்டுகொள்வதை போன்றது. அதாவது, நீங்கள் பார்வையிடும் வெப்சைட் உங்கள் ஐபி முகவரி மூலம் உங்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

ஆனால், உங்களை எவருமே அடையாளம் கண்டுகொள்ளாமல் இணையத்தில் வலம் வரவும் ஒருமுறை உள்ளது. அதனை நீங்கள் டார்க் நெட், டார்க் வெப் அல்லது ஹிட்டன் வெப் என ஆங்கிலத்திலோ அல்லது இருண்ட வலை என தமிழிலோ எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளலாம். இது அந்த நெருக்கடியான தெருவில் நீங்கள் நடந்து செல்லும் போது எவருமே உங்களை அடையாளம் காணாமல் இருக்க உதவுகிறது. நெருக்கடி குறைந்த ஒரு தெருவில் கண்ணுக்கு தெரியாத ஒரு உடையை அணிந்த படி நீங்கள் செல்வதை சற்றுக் கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் தனியாக செல்வதை போல் நினைப்பீர்கள். ஆனால் அவ்வாறு இல்லை. போதை பொருள் வியாபாரக் கும்பல், ஆயுத விற்பனை கும்பல், குழந்தைகள் பாலியல் படங்கள் என சட்டவிரோத நடவடிக்கைகளின் புகலிடமாக இந்த இருண்ட வலை எனப்படும் டார்க் வெப் இருந்து வருகிறது.

இந்த இருண்ட வலையமைப்பில் இருக்கும் இணையதளங்களை www எனப்படும் உலகளாவிய வலையமைப்பின் உதவியுடன் பார்வையிட முடியாது. இந்த ஒட்டுமொத்த உலகமே திட்டுத்தனமாக மறைத்து வைக்கப்பட்டுள்ளன.

இருண்ட வலை தளங்களை எப்படி பார்வையிடுவது ?

ஆனியன் ரவுட்டர் எனப்படும் (Tor) ஒரு உலவி (பிரவுசர்) இத்தகைய இணையதளங்களை எளிதில் பார்வையிட உதவுகிறது. இதனை இலவசமாகவே டவுண்லோடு செய்து கொள்ள முடியும்.இதனை இன்ஸ்டால் செய்யும் போது, அந்த உலவியானது, பயனரிடம் உள்ளார்ந்த வலைப்பின்னலில் சேர விருப்பமா என கேட்கிறது. இது, நெருக்கடி குறைவான தெருவில் நுழைவதற்கு சமமானது. மேலும், இந்த உலவியே (பிரவுசர்) கண்ணுக்கு தெரியாத உடையாக செயல்படவும் செய்கிறது. அதேவேளையில் www முறையிலான உலகளாவிய வலைத்தளங்களையும் இந்த உலவியின் மூலம் பார்வையிட முடியும்.

பொதுவாக, இந்த உலவியானது (Tor)  க்ரோம் போன்ற மற்ற உலவிகளை போல் நேரடியாக நமது கணினியுடன் தொடர்பு கொள்வதில்லை. இந்த உலவியை (Tor) பயன்படுத்தும் போது, அது அடுக்கடுக்கான கற்பனை சுரங்கள் வழி நமது கணினியை தொடர்பில் வைக்கிறது. ஒரு வெங்காயத்தை எடுத்துக் கொண்டால் அதில் எண்ணற்ற லேயர்கள் இருப்பதை போல் ஒவ்வொரு சுற்றும் மறைமுகமான டன்னல்கள் உருவாகி, உங்களின் அடையாளம் தெரியாமல் வைத்திருக்கும். அதாவது, உங்கள் உண்மையான ஐ.பி முகவரியை காட்டாமல், வேறு எங்கோ உள்ள ஐ.பி முகவரியை காட்டும். அது மட்டுமல்லாமல், உலவியில் உங்களை குறித்த டேட்டாக்கள் உள்ளிட்ட தடங்களையும் நீங்கள் வெளியேறிய உடன் அழித்துவிடும்.

www.torproject .org தான் இதன் அதிகாரப்பூர்வ வலைத்தளம். இந்த இணையதளம், தனிநபர்கள் தங்கள் டேட்டாக்களையும் தகவல்களையும் பாதுகாப்பாக பரிமாறிக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுவதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக,அறிவுசார் பொருட்கள், வங்கி கணக்குகள் குறித்த அதிமுக்கியத்துவம் வாய்ந்தவற்றை ரகசியமாக பரிமாறிக்கொள்ள உதவுவதாக கூறப்படுகிறது.

ஆனால் இது நாணயத்தின் ஒரு பக்கம் மட்டுமே. மறுபுறத்தில், சட்டவிரோத ஆயுத மற்றும் போதை பொருள் வியாபாரங்களும், குழந்தைகள் பாலியல் வீடியோக்களும் இந்த உலவி மூலம் பரிமாறப்படுகின்றன. சர்வதேச சந்தையில் நடைபெறும் 15% போதை பொருள் வியாபாரங்கள் இந்த உலவியின் வழியே நடைபெறுவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. இதில் செய்யப்படும் வியாபார முயற்சிகளில் 9% ஏமாற்றுபவை என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

Show us some love! Support our journalism by becoming a TNM Member - Click here.