சென்னை உயர்நீதிமன்றம் மைதாவில் இருக்கும் கலப்படத்தை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது

Tamil Thursday, May 05, 2016 - 13:53

அடுத்த முறை உங்களுக்கு பிடித்த ஹோட்டலில் நீங்கள் விரும்பி சாப்பிடும் புரோட்டாவும் குறுமாவும் சாப்பிடும் போது, உங்கள் உடலுக்கு தீங்கான ஒன்றை சாப்பிடுகிறீர்கள் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். தென்னிந்திய சமையல் கூடங்களில் தவறாமல் இடம் பிடிப்பதில் மைதா டப்பாவும் ஒன்று. ஆனால், அது சமையல் கூடங்களில் இருந்து தூக்கியெறியப்பட வேண்டிய உணவு பொருட்களில் ஒன்று. மைதா அல்வா, ரவா தோசை மற்றும் பூரி வகை உணவுகள் தொடர்ந்து சமைக்கப்பட சென்னை உயர்நீதிமன்றத்தின் கிரீன் சிக்னலுக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த உணவுவகைகளில் கலப்படம் இருப்பதாக கூறப்படுவதே அதற்கு காரணம்.

இது குறித்து ராஜேந்திரன் என்பவர் தாக்கல் செய்த பொது நல வழக்கு ஒன்றை விசாரித்த உயர்நீதிமன்றம் மைதாவில் கலப்படம் உள்ளதா என்பதை அறிய விசாரணை நடத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. மைதாவில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்களான அல்லோக்சன் மற்றும் பென்சாயில் ஆகியன சேர்க்கப்பட்டுள்ளதாக பொது நல வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ராஜேந்திரன் இந்த தீங்கு விளைவிக்கும் வேதி பொருட்களை மைதாவில் சேர்ப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டு பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

கோதுமை மாவிலிருந்து பைபர் கலந்த தவிட்டை நீக்குவதன் மூலம் மைதா தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. தவிடு நீக்கப்பட்ட பின், அந்த கோதுமை மாவானது  அல்லோக்சன் என்ற வேதிப்பொருளின் உதவியுடன், தூய வெள்ளையான தோற்றத்தை தரும் வகையில் தூய்மையாக்கப்படுகிறது. இந்த அல்லோக்சன், உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த கூடிய கணையத்தை பாதித்து சர்க்கரை நோயை உருவாக்க வல்லது. மேலும் இந்த அல்லோக்சனை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி தேவைக்காக, விலங்குகளின் உடலில் சர்க்கரை அளவை கூட்டுவதற்கு பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

அல்லோக்சன் சேர்க்கப்பட்ட மைதாவுடன் , மீண்டும் பென்சோயிக் பெராக்ஸைட் மற்றும் குளோரின் டை ஆக்சைட் ஆகியவை சேர்க்கப்படுகின்றன. பென்சோயிக் பெராக்ஸைட், உடலின் செரிமான உறுப்புகளை பாதிக்க செய்கிறது. இதனால் உடலில் குளுக்கோசின் நொதித்தல் அளவு 95% ஆக குறைகிறது. மறுபாகத்தில் குளோரின் டை ஆக்சைட் உடலில் உள்ள வைட்டமின் இ அளவை குறைக்கிறது.

“மனுதாரர் மார்ச் 14 அன்று தாக்கல் செய்த மனுவில் கூறிய அம்சங்கள் ஆய்வுக்குட்படுத்த வேண்டியவை. அவர் சுயமாகவே இதுகுறித்து ஆய்வுகளும் விசாரணைகளும் மேற்கொண்டுள்ளார். அவர் கூறியிருக்கும் குற்றச்சாட்டுகள் சரி எனில், சட்டப்படியான தீர்வு எடுக்கப்பட வேண்டும். இதுகுறித்து, தேவையான நடவடிக்கை 3 மாதங்களில் எடுக்கலாம்” என தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கௌல் மற்றும் நீதிபதி சுந்தரேஸ் ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச் கூறியது.

முன்னதாக, மைதாவில் கலக்கப்பட்டிருக்கும் வேதி பொருட்கள் குறித்த தகவலை அறிய மனுதாரர் ராஜேந்திரன் தகவல் பெறும் உரிமை சட்டத்தை பயன்படுத்தினார். அதற்கு அதிகாரிகளிடமிருந்து எந்த பதிலும் வராத நிலையில் அவர் பொது நல வழக்கை தொடர்ந்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது.

 

 

 

Show us some love and support our journalism by becoming a TNM Member - Click here.