ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் மற்றும் மூத்த அதிமுக உறுப்பினர்கள் இதன் பின்னணியில் இருப்பதாக போலீசார் கூறுகின்றனர்

Tamil Kerala 2016 Thursday, May 05, 2016 - 14:01

கடந்த காலங்களில் சில இடங்களில் சோதனை செய்து, வெற்றிபெற்ற சில தேர்தல் உத்திகளை புது இடங்களில் அமல்படுத்துவதில் அரசியல்வாதிகளுக்கு எவ்வித தயக்கமும் இல்லை. அப்படி ஒரு சம்பவம் கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் நடத்தில் உள்ளது. தமிழகத்தின் எல்லையோரத்தில் அமைத்திருக்கும் இந்த கேரள பகுதியில் தமிழகத்திலிருந்து கேரளா வாக்காளர்களுக்கு இலஞ்சமாக கொடுக்க  கொண்டு செல்லப்பட்ட அதிக அளவிலான பணம் மற்றும் பரிசு பொருட்களை கேரளா போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் கடந்த தேர்தல்களில் அதிமுகவினர் இலவசங்களை அள்ளி வழங்கி வெற்றி பெற்றனர். அதனையே கேரளாவின் இடுக்கி மாவட்டத்தின் சில தொகுதிகளில் அதிமுகவின் வெற்றி பெறுவதற்காக நடைமுறைப்படுத்துவதாக கேரளா போலீசார் குற்றஞ்சாட்டியுள்ளனர். வரும் 16 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக 7 தொகுதிகளில் தனது கட்சி வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது.

இடுக்கி மாவட்டத்தின் தேவிகுளம் சட்டமன்ற தொகுதி பகுதியில் கணிசமான அளவில் தமிழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களை குறிவைத்தே அதிமுகவினர் பணத்தையும், இலவச பொருட்களையும் வழங்குவதாக கேரள போலீசார் கூறுகின்றனர். “ நாங்கள் அதிக அளவில் பணம் மற்றும் இலவசமாக வழங்குவதற்கு வைக்கப்பட்ட பொருட்களை கைப்பற்றியிருக்கிறோம். இலவச பொருட்களையும், பணம் கொடுப்பதையும் தடுப்பதற்கு எங்களால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்” என இடுக்கி போலீஸ் துணை சூப்பிரண்டு மெரின் ஜோசப் கூறினார்.

இடுக்கி மாவட்ட சிறப்பு பிரிவு டிஎஸ்பி சஜி நியூஸ் மினிட்டிடம்  கூறுகையில், “ கடந்த நவம்பரில் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் இலவச பொருட்கள் வழங்குவது அதிக அளவில் நடைபெற்றது. அமைச்சர் வேலுமணி மற்றும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ஆகியோர் பஞ்சாயத்து பகுதிகளில் முகாமிட்டு இருந்தனர். அந்த நேரத்தில் பணம், போர்வைகள் மற்றும் வேஷ்டிகள் ஆகியவற்றை நாங்கள் பறிமுதல் செய்திருந்தோம். ஆனால், இந்த முறை அதிமுகவினர் தங்கள் தந்திரத்தை மாற்றியுள்ளனர். இந்த முறை, அவர்கள் இரு அடையாள அட்டையை வாக்காளர்களுக்கு அளித்து வருகின்றனர். அந்த அட்டையை எடுத்து கொண்டு கம்பம் போன்ற பகுதிகளுக்கு சென்றால், இலவச பொருட்களும் பணமும் கிடைக்கும்.” என்று கூறினார்.

இலவச லேப்டாப்புகள், மிக்சி, கிரைண்டர் போன்றவை விநியோகிக்கபடுவதாக வெளிவந்த செய்திகள் குறித்து கேட்டபோது, “ இது போன்ற இலவச பொருட்களை விநியோகித்ததாக எங்களுக்கு புகார்கள் வந்துள்ளன. இப்படிப்பட்ட இலஞ்சங்களை வாங்காதீர்கள் என பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளதுடன், அவ்வாறு யாரேனும் கொடுத்தால் தகவல் தெரிவிக்கும்படியும் கேட்டுள்ளோம். இந்த மாவட்டம் முழுவதுமிருந்து 35 லட்சம் ரூபாய் வரை இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவை அதிமுகவிடமிருந்து  வந்த பணம் தானா என உறுதியாக தெரியவில்லை.” என்றார்.

கடந்த செப்டம்பர் 2015 இல், மூணாறில் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் போராட்டம் மூலம் கேரளாவையே உலுக்கிய பெம்பிளை ஒருமை இயக்கத்தினர் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். அந்த அமைப்பின் பொது செயலாளர் ராஜேஸ்வரி தேவிகுளம் தொகுதியில் இருந்து போட்டியிடுகின்றார்.

அதிமுகவினரின் இலவச பொருட்கள் விநியோகம் குறித்து அந்த அமைப்பின் தலைவர் லிஸ்ஸி சன்னியிடம் கேட்ட போது, “ போலீசும், மற்ற கட்சிகளும் ஏன்  தேவிகுளத்தில் இது போன்ற இலவசங்களை விநியோகிக்க அனுமதிக்கின்றனர் ? அதிமுக இலவச லேப்டாப்புகளையும், 500ரூபாய் பணத்தையும் இங்கு விநியோகிக்கின்றனர்.இது போன்ற முயற்சிகளை கட்டுப்படுத்த ஏன் நிர்வாகத்தினர் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை ?” என கேள்வி எழுப்புகிறார்.

இந்த இயக்கத்தினர், தங்கள் தேர்தல் பிரச்சாரத்திற்காகவே மிகவும் கடுமையாக போராட வேண்டிய நிலையில் உள்ள போது இலஞ்ச கலாச்சாரமும், இலவசங்களும் இங்குள்ள வாக்காளர்களிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கேட்டபோது, “ அவர்களால் கேரளாவில் வெற்றி பெற முடியாது. அவர்கள் தமிழ்நாட்டிலிருந்து வருகிறார்கள். மக்கள் மனதை மாற்றுவது அவ்வளவு எளிதல்ல. இத்தகைய இலவசங்கள் மூலம் நிச்சயமாக கேரளா வாக்காளர்களின் மனதை மாற்றிவிட முடியாது” என்றார் லிஸ்ஸி.

Show us some love and support our journalism by becoming a TNM Member - Click here.