“இளைஞர்களால் மட்டுமே சமூகத்தில் மாற்றத்தை கொண்டுவர முடியும்” என்கிறார் சங்கர்

Tamil Friday, April 29, 2016 - 19:34

தமிழகத்தில், அரசியல் மற்றும் சமூக மாற்றத்தை கொண்டு வரும் நோக்கில், 50 இளைஞர் அமைப்புகள் ஒன்று சேர்ந்து இளைஞர் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த கூட்டமைப்பினர் நடைபெறுகிற சட்டமன்ற தேர்தலில் 115 தொகுதிகளில் போட்டியிடவுள்ளன.

இந்த அமைப்பினர், ஊழல் தான் தமிழகத்தில் முக்கிய பிரச்சினையாக கருதுகின்றனர். “ தமிழகத்தில் ஊழல் மலிந்துவிட்டது. தேர்தலில் வெற்றி பெற ஒவ்வொரு வேட்பாளரும் 2 முதல் 3 கோடி வரை செலவு செய்கின்றனர். பின்னர் அதிகாரம் கையில் கிட்டியதும் மாநிலத்தை கொள்ளையடிக்கின்றனர். 100 ரூபாய் மக்கள் நலத்திட்டங்களுக்காக ஒதுக்கினால் அவற்றில் வெறும் 25 ரூபாயே பொதுமக்களை சென்று சேருகிறது. மீத தொகையை அரசியல்வாதிகள் எடுத்து கொள்கின்றனர்.” என்கிறார் 32 வயதான சங்கர் ஜனார்த்தனன். தகவல் தொழில்நுட்ப துறையை சேர்ந்த இவர், இந்த அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவர்.

“அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளால் நாங்கள் அலுத்து போய்விட்டோம். இப்போது, நமக்கு தூய்மையான அரசியல்வாதிகள் தேவை.அதனால் நாங்கள் இந்த தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளோம்.” என்றார் சங்கர்.

இளைஞர்களால் மட்டுமே சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வரமுடியும் என சங்கர் கருதுகிறார்.” எங்கள் வேட்பாளர்கள் சமூகத்திற்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். மக்களுக்கு இது போன்ற தலைவர்கள் இன்னும் அதிகமாக உருவாக வேண்டும்” என்றார் அவர்.

இளைஞர் கூட்டமைப்பின் வேட்பாளராக போட்டியிட, விருப்பம் தெரிவிக்கிறவர் மதுவுக்கோ அல்லது புகை பிடிப்பதிலோ அடிமையானவராக இருக்க கூடாது. இந்த கூட்டமைப்பின் உறுப்பினர்கள், பைலட்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள்,பொறியியலாளர்கள், ஊடகவியலாளர்கள் என பல துறைகளில் இருந்தும் வந்தவர்கள். தற்போது, சட்டமன்ற தேர்தலில் வெற்றி என்ற நோக்கத்தை விட, ஒரு மாற்றத்தின் தொடக்கம் குறிக்க வேண்டும் என்பதே நோக்கமாக கொண்டுள்ளனர். “ நாங்கள் தமிழகத்தில் ஒரு மாற்றத்திற்கான தொடக்கத்தை உருவாக்கவே விரும்புகிறோம். அதற்கான விதையை விதைக்கவே விரும்புகிறோம்” என்றார்.

நீங்கள் மக்களுக்கு என்ன செய்ய விரும்புகிறீர்கள் ? என்ற கேள்விக்கு “ மற்ற கட்சிகள் எல்லாம் மதுவிலக்கை பற்றி பேசி கொண்டிருக்கும் போது, நாங்கள் எல்லோருக்கும் இலவச, தரமான கல்வியை வழங்குவது பற்றி பேசுகிறோம். அதன் கூடவே, ஊழல் இல்லாத அரசை உருவாக்குவோம்.” என்றார்.

அவர்களது தேர்தல் பிரச்சாரத்தை குறித்து பேசும் போது, சமூக வலைத்தளத்தை அதிக அளவில் வாக்குகள் சேகரிப்பதற்கு பயன்படுத்துவதாக கூறினார். “ நாங்கள் முதல் மற்றும் இரண்டாம் முறை வாக்காளர்களை இந்த தேர்தலில் குறி வைத்து பிரச்சாரம் செய்கிறோம்.” என்றார்.

இந்த அமைப்பினர், குறும்படங்களையும், விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் சமூக வலைத்தளங்கள் வழி கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது. “ கல்லூரி மாணவர்கள் எங்கள் பிரச்சாரங்களை கொண்டு செல்ல எங்களுக்கு உதவுகின்றனர்.” என்றார் சங்கர்.

இளைஞர் கூட்டமைப்பு கடந்த டிசம்பர் 2015 இல் துவங்கப்பட்டது. அதற்கு முன்னர் இந்த அமைப்பினர் மரம் நடுதல், கடற்கரையை சுத்தம் செய்தல், சென்னை வெள்ளபெருக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்குதல் என சமூக பணிகள் பல மேற்கொண்டனர்.

“ நாங்கள் ஒன்று அல்லது இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றால், அதுவே நாங்கள் முன்வைக்கும் மாற்றத்திற்கான துவக்கமாக அமையும்” என தன்னம்பிக்கையுடன் கூறுகிறார் சங்கர்.

Show us some love and support our journalism by becoming a TNM Member - Click here.