ஒரு அரசு. நல்ல திட்டம் ஒன்றை துவங்கினால், அடுத்து வரும் அரசு, அதை விரிவுபடுத்தி, தொடரவேண்டும்

Social TN 2016 Sunday, May 08, 2016 - 19:08

கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலில் வீழ்ச்சிக்கு பின்னர், நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் திமுகவின் அரசியல் வாரிசாக கருதப்படும், மு.க.ஸ்டாலினுக்கு மிகமுக்கியமான ஒன்றாகவே இருந்து வருகிறது. தனது வெள்ளை வேட்டியை மாற்றி , ட்ரவுசர் அணிந்தபடி தமிழகம் முழுவதும் அவர் பயணம் செய்திருந்தார். ஆனால் இந்த தேர்தலில், ஸ்டாலினின் கடுமையான உழைப்புக்கும், அவரது இமேஜ்க்கும் பலன் கிடைக்குமா ?

நியூஸ் மினிட் வழியாக ட்விட்டர்வாசிகள் கேட்ட சில கேள்விகளுக்கு ஸ்டாலின் பதிலளித்தார். அப்போது  அவர், திமுக ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா அரசு கொண்டு வந்த நலத்திட்டங்களை கண்ணை மூடிக்கொண்டு ரத்து செய்யாது என கூறினார்.

“ஒரு அரசு. நல்ல திட்டம் ஒன்றை துவங்கினால், அடுத்து வரும் அரசு, அதை விரிவுபடுத்தி, தொடரவேண்டும். எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தை, பள்ளி குழந்தைகளுக்காக அமல்படுத்திய பின்னர், கருணாநிதி முதல்வர் ஆன பின், அதனுடன் முட்டை சேர்த்து வழங்கினார். தற்போது, நாங்கள் குழந்தைகளுக்கு ஒரு கப் பால் வழங்குவதாக உறுதியளித்துள்ளோம். அம்மா உணவக திட்டம் சிறப்பாக செயல்படவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அதனையே அண்ணா உணவகம் என்ற பெயரில் சிறப்பான திட்டமாக செயல்படுத்துவோம்.” என ஸ்டாலின் கூறினார்.

மேலும் கூறிய அவர் “ ஜெயலலிதா அமல்படுத்திய நல்ல திட்டங்களை நாங்கள் தொடர்ந்து செயல்படுத்துவோம். ஜெயலலிதாவை போல உள்நோக்கத்துடன் அந்த திட்டங்களை ரத்து செய்யமாட்டோம்.” என கூறினார்.

இளைஞர்கள் ஒப்பீட்டளவில் ஒரு இளம் முதல்வரை விரும்புவது தவறானதா என்று கேட்டபோது, “ இளைஞர்களின் எதிர்பார்ப்பு சரியானது தான். ஆனால் கலைஞர் 93 வயதிலும் 39 வயது இளைஞரை போல் செயல்படுகிறார். அப்படியிருக்க, திமுகவுக்கு மற்றொரு முதல்வர் வேட்பாளர் வேண்டும் என்று எந்த கேள்வியும் எழ வாய்ப்பில்லை” என்றார்.

மூன்றாவது அணியாக, தேமுதிக, மதிமுக,விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இந்த மாநிலத்தில் கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபடும்போது, ஸ்டாலின் மூன்றாவது அணியே இல்லை என கூறினார். “ தமிழகத்தில் மூன்றாவது அணி என்பதே இல்லை. நடைபெறவுள்ள இந்த தேர்தலில் அதிமுகவுக்கும், எங்களுக்கும் தான் போட்டி.” என்றார்.

மேலும், தங்கள் கட்சி, வெள்ளபெருக்கையும், குப்பை சேர்வதையும், வேலை இல்லா பிரச்சினையையும் எவ்வாறு கையாண்டது என்பதனை விரிவாக எடுத்து கூறினார்.

Show us some love and support our journalism by becoming a TNM Member - Click here.