20 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த ஆயுள் தண்டனை குற்றவாளிகளின் தண்டனை காலம் தானாகவே முடிவுக்கு வந்து விடாது என ஒரு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

Tamil Friday, July 01, 2016 - 19:29

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 20 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்தவர்கள் தானாகவே விடுதலை பெற தகுதி பெற்றவர்களாக ஆகிவிட முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனை தொடர்ந்து 25 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் ராஜிவ்காந்தி கொலை குற்றவாளிகள் ஏழு பேரும் விடுதலையாவதில் சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த புதன்கிழமையன்று, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து குஜராத் அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்தது. முன்னதாக, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம், ஆயுள் தண்டனை பெற்ற ஒருவரை விடுவிக்கவோ அல்லது பரோலில் அனுப்பவோ செய்வதற்கு முன் அவரது வழக்கை கவனத்தில் கொள்ள வேண்டும் என தீர்ப்பளித்திருந்தது.

இதனை தொடர்ந்து உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறுகையில், குற்றவியல் நடைமுறை சட்டப் பிரிவுகளின் கீழ், ஆயுள் தண்டனை பெற்ற ஒருவரின் தண்டனைக் காலம் 20 ஆண்டுகள் முடிந்தாலும் காலாவதி ஆவதில்லை என கூறியுள்ளது.

இதுகுறித்து, ராஜிவ் காந்தி கொலைக் குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளனின் வழக்கறிஞர் சிவக்குமார், இந்த விவகாரம் குறித்து முடிவெடுக்க மாநில அரசுக்கு உரிமையுள்ளதாக கூறினார்.

நியூஸ் மினிட்டிடம் அவர் மேலும் கூறுகையில், “ இந்த குறிப்பிட்ட வழக்கில் குஜராத் அரசின் கருத்தை உச்சநீதிமன்றம் கவனத்தில் கொண்டுள்ளது. மாநில அரசு குற்றவாளியை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து உச்ச நீதிமன்றமும் அதே முடிவுக்கு வந்துள்ளது. ஆனால், ராஜிவ் காந்தி கொலை வழக்கில், மாநில அரசும் அவர்கள் விடுதலைக்காக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆகவே, தற்போது இந்த வழக்கை பொறுத்தவரை, இது போன்ற வழக்குகளில் மாநில அரசு முடிவெடுக்கலாமா ? கூடாதா என்ற கேள்வியே தற்போது எழுந்துள்ளது.” என்றார் அவர்.

மேலும் அவர், இரு வழக்குகளும் அடிப்படையில் மிகவும் வித்தியாசமானவை. அதனால் இரண்டையுமே ஒப்பிட முடியாது என்று கூறினார்.

இதனிடையே, சென்னை வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பால் கனகராஜ் இந்த தீர்ப்பு ராஜிவ் கொலை குற்றவாளிகளை விடுவிப்பதில் பின்னடைவை ஏற்படுத்தும் என கூறுகிறார்.

“உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனை என்பதில் வரும் ‘ஆயுள்’ என்ற சொல்லிற்கு குறிப்பிட்ட எந்தவித காலஅளவும் இல்லை என கூறுகிறது. ஆனால் மாநில அரசுக்கு குற்றவாளியை விடுவிக்க உரிமையுள்ளது. ராஜிவ் காந்தி வழக்கை எடுத்துக் கொண்டால், இந்த வழக்கை சிபிஐ விசாரித்துள்ளதாகவும், மத்திய அரசு இந்த வழக்கில் தலையிட்டு இருப்பதாகவும் உச்சநீதிமன்றம் கூறுகிறது” என கூறினார்.

மூத்த வழக்கறிஞரான பிரபாகரன், இத்தகைய வழக்குகளில் உள்ள குற்றவாளிகளை விடுவிக்க அரசு போதிய முயற்சிகளை எடுக்க வேண்டும் என கூறினார். “ உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனை என்பது வாழ்நாள் முழுவதும் என கூறுகிறது. நம்மால் அதனை கணிக்க முடியாது. அது 14 வருடங்களாகவோ அல்லது 20 வருடங்களாகவோ கூட இருக்கலாம். மாநில அரசு அதற்கு விதிவிலக்கு அளிக்க முடியும். எனவே மாநில அரசு அதற்காக போராடி குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும்” என்று கூறினார்.

Become a TNM Member for just Rs 999!
You can also support us with a one-time payment.