இனையம் துறைமுகத்தை எதிர்க்கும் மக்கள் : வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அச்சம்

ஏற்கனவே மூன்று கள ஆய்வுகள் குளச்சலை மையமாக வைத்து எடுத்துள்ள நிலையில், இனையத்தை தற்போது தேர்வு செய்தது ஏன் ? என கேள்வி எழுப்புகின்றனர்.
இனையம் துறைமுகத்தை எதிர்க்கும் மக்கள் : வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அச்சம்
இனையம் துறைமுகத்தை எதிர்க்கும் மக்கள் : வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அச்சம்
Written by:

கன்னியாகுமரி மாவட்டத்தில், மத்திய அரசால் இனையம் துறைமுகம் அமைப்பதற்காக தீர்மானிக்கப்பட்ட பகுதிகளுக்கு நாங்கள் சென்ற போது, மக்களின் கோபத்தை தெளிவாக காண முடிந்தது. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், தங்கள் வாழ்வாதாரங்கள் மற்றும் நிலங்கள் பறிக்கப்படும் என்ற கோபமும், விரக்தியும் அப்பகுதியிலிருந்த மீனவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் மத்தியில் காணப்பட்டது. இந்த திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டால் 8 கிராமங்களில் உள்ள 20 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பத்தினர் பாதிக்கப்படுவர்.

இனையம் துறைமுகமானது 21 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், கப்பல் போக்குவரத்திற்கான தெற்கு நுழைவாயிலாக கட்டுவதற்கு அரசு உத்தேசித்துள்ளது. இது குறும்பனை முதல் தேங்காப்பட்டணம் வரையிலான 12 கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கும் வகையில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. நட்டாலத்திலிருந்து இனையத்திற்கு செல்லும் வகையில் ஒரு நான்கு வழி சாலையும், கூடவே ஒரு ரயில் பாதையும் இதனுடன் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த துறைமுகமானது, சர்வதேச சரக்கு வர்த்தகத்தை ஊக்குவிக்கும் ஒரு களமாக தமிழ் நாட்டிலுள்ள இப்பகுதியை வளர்த்தெடுக்கும் நோக்கத்துடன் செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டது. தற்போது, மிகப்பெரிய கப்பலில் உள்ள சரக்குகள் கொழும்பு மற்றும் சிங்கப்பூர் துறைமுகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து சிறிய கப்பல்களில் சிறு துறைமுகங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இத்தகைய நிலையை சரிகட்டி, நாட்டின் தென்பகுதியில் சரக்குகளை நேரடியாக கொண்டு வரும் வகையிலான, அதிக வசதிகளை கொண்ட துறைமுகத்தை உருவாக்கும் வகையிலே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், இப்பகுதியை சேர்ந்த மக்கள், இந்த இனையம் துறைமுக திட்டத்தால் வீடுகளும், ஆலயங்களையும் இழக்க வேண்டி வரும் என்றும், விவசாய நிலங்களும், கடலில் உள்ள மீன்கள் அழிவுக்குள்ளாகும் என்றும், கூடவே கடல்பரப்பில் பேரழிவை உண்டாக்கும் மாற்றங்கள் ஏற்படும் எனவும் கூறுகின்றனர்.

அழிவுகளுக்கு உள்ளாகும் வீடுகளும் ஆலயங்களும்

இந்த துறைமுகத்திற்கு செல்லும் நான்கு வழி சாலையானது, செம்முதல் என்ற ஊர் வழியாக செல்கிறது. அப்பகுதியில் உள்ள வீடுகள் மட்டுமல்லாது, வழிபாட்டு தலங்களான இந்து கோயில்களும், கிறிஸ்தவ ஆலயங்களும் அழிவுக்குள்ளாகும் சூழலில் உள்ளது. இது போன்றே, விவசாய நிலங்களும், அந்த நிலங்களுக்கு தண்ணீரை கொடுக்கும் குளங்களும் நான்கு வழிச்சாலையால் தடம் இல்லாமல் போகும் நிலை உருவாகியுள்ளது.

இதுகுறித்து அப்பகுதியில் உள்ள 68 வயதான ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வேலாயுதன் பிள்ளை கூறுகையில், “ இந்த ஊரை சுற்றியுள்ள சுமார்180 வீடுகள் அழிவுக்குள்ளாகும் நிலையில் உள்ளன. ஒவ்வொருவரும் 5 முதல் 10 சென்ட் நிலங்களையே தங்கள் கையில் வைத்துள்ளனர். இந்த சாலையை இந்த வழியாக கொண்டு வந்தால் நாங்கள் எங்கே போவது ? இந்த வயதில், அரசு எனக்கு தரும் சிறிய இழப்பீட்டை கொண்டு நான் புதிய ஒரு வீட்டை கட்டி கொள்ள முடிவது சாத்தியமானதா ?” என்று கேட்டார்.

“ இந்த நான்கு வழிச்சாலையால், செம்முதலில் மட்டும் ஸ்ரீ தர்மசாஸ்தா கிருஷ்ணன் கோயில், இசக்கியம்மன் கோயில், புலியாணி கிறிஸ்தவ ஆலயம் மற்றும் ஒரு தேவி கோயில் ஆகிய வழிபட்டு தலங்கள் அழிக்கப்படவுள்ளன” என்கிறார் அப்பகுதியிலிருந்து ராணுவ வீரரான 33 வயது பத்ம பிரசாத்.

இதற்கு முன்னர், இந்த துறைமுகமானது இனையத்திலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள குளச்சலில் அமைக்கவே திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக, மூன்று கள ஆய்வு அறிக்கைகள், குளச்சலில் கமர்ஷியல் துறைமுகத்திற்காக 1998,2000,2010 ஆகிய ஆண்டுகளில் வெளியிடப்பட்டன. ஆனால், அந்த கள ஆய்வுகளை எல்லாம் புறந்தள்ளி, கடைசியாக இனையம் பகுதி துறைமுகத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. வேலாயுதன் பிள்ளை தொடர்ந்து கூறுகையில் “ குளச்சல் துறைமுகம் அமைப்பதற்கு ஏற்ற இடம். அங்கு இயற்கையான துறைமுகமும் அமைந்துள்ளது. அந்த பகுதியை மையபடுத்தி பல கள ஆய்வுகள் நடைபெறவும் செய்துள்ளன. ஆனால் திடீரென, அந்த துறைமுகம் குளச்சலிலிருந்து, இனையத்திற்கு மாற்றப்பட்டதற்கு பின்னில் உள்ள காரணத்தை புரிந்து கொள்ள முடியவில்லை.” என்றார்.

வாழ்வாதாரத்திற்கு ஏற்படும் நெருக்கடி

மத்திய அரசு, ஏற்கனவே நான்கு வழிச்சாலை அமைப்பதற்கான முதற்கட்ட முயற்சிகளை செம்முதல் உள்ளிட்ட பகுதிகளில் எடுக்க துவங்கியுள்ளது. பல இடங்களிலும், சாலைக்கு தேவையான நிலப்பரப்பை கற்களை நாட்டி அடையாளப்படுத்தியுள்ளது.செம்முதல் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தங்கள் வீடு போகும் கவலையுடன் அப்பகுதியில் உள்ள குளங்கள் போவதும் கவலையை தருகிறது. குறிப்பாக, தொடாக்குளம் தான் மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. நீண்ட காலங்களாக அப்பகுதியை சுற்றியுள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கொடுப்பது இந்த குளம் தான். இப்பகுதியில் வரும் நான்கு வழிச்சாலையால் இந்த குளம் முழுவதும் நிரப்பப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஒருபுறம் விவசாய விளைநிலங்களுக்கும், அதற்குமான நீராதாரங்களுக்கும் நெருக்கடியை துறைமுகத்திற்கான நான்கு வழி சாலை ஏற்படுத்துமெனில் மறுபுறம் இனையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மீன்பிடி தொழிலை இந்த துறைமுகம் வெகுவாக பாதிப்படைய செய்யும் என கருதப்படுகிறது.

இந்த துறைமுகத்திட்டத்தின் கள ஆய்வு அறிக்கை, மூன்று கட்டங்களாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என கூறுகிறது. இதன் முதல்கட்டம் மேல்மிடாலம் பகுதியிலிருந்து துவங்கி 4 கிலோமீட்டர் சுற்றளவுள்ள பகுதிகளில் அமைக்கப்படும்.மேலும் 2018 ஆம் ஆண்டு இதன் முதற்கட்ட பணிகளும் துவங்கப்படும். மீனவ கிராமமான ஹெலன் நகரில் 314 க்கும் அதிகமான மீனவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.” நாங்கள்  இந்த திட்டம் குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலையும் அரசிடமிருந்து பெறவில்லை. சிலர் வந்தார்கள். கற்களை  போட்டார்கள்.நாங்கள் ஏதேனும் அனுமதி பெற்று தான் இந்த பணிகளை செய்கிறீர்களா என கேட்டபோது திருவனந்தபுரம் கலெக்டர் கையெழுத்திட்ட ஒரு போலி ஆவணத்தை காட்டினார்கள்” என கூறுகிறார் கத்தோலிக்க பாதிரியார் கிரிஸ்பின் பொனிபஸ். இவர் மீனவர்களுக்கான குறைதீர்ப்பு மையம் ஒன்றையும் நடத்தி வருகிறார். மேலும், இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மீனவர்கள் இந்த திட்டத்தால் பாதிக்கப்படுவர் என அவர் கூறினார்.

கடந்த பிப்ரவரி மாதம் 29 ஆம் தேதியன்று, இந்த திட்டத்திற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்ட ஒரு போராட்டத்தை நடத்தியதாக பாதிரியார் பொனிபஸ் கூறினார்.

1468 குடும்பங்கள் வசிக்கும் கடற்கரை கிராமமான இனையத்தில் மீன் பிடி தொழிலே முக்கிய வாழ்வாதார தொழிலாக உள்ளது. “ நாங்கள் இந்த கடலிலிருந்து மீன் படித்து தான் பிழைப்பை நடத்துகிறோம். இதை தாண்டினால் வேறு எந்த தொழிலுக்கு நாங்கள் போக முடியும் ? “ என கேட்கிறார் 62 வயதான வறுவேல் என்ற மீனவர்.

கடலின் அமைந்துள்ள ஒரு பாறையை சுட்டிக்காட்டின வறுவேல் “பெரும்பாலான மீன்கள் அந்த பாறையின் அருகில் வரும். நாங்கள்  எளிதில் பிடிப்பது வழக்கம். ஆனால் துறைமுகம் வந்து கப்பல் வருமாயின், மீன்கள் எதுவுமே கிடைக்க போவதில்லை.” என்றார்.

துறைமுகம் அமைக்கப்பட்ட பின், இந்த மண்டலமே மீன்கள் இல்லாத பகுதியாக மாறிவிடும் என்கின்றனர் மீனவர்கள். “ எங்கள் படகுகள் எல்லாம் இங்கிருந்து அகற்றப்படும். எங்களையும் அப்புறப்படுத்திவிட்டு எங்களுக்கு வேறு என்ன வேலையை தரப்போகிறார்கள் ? “ என கேட்கிறார் மற்றொரு மீனவரான தாசன்.

“துறைமுகம்  வந்தால் அதில் உள்ளூர் மீனவர்களுக்கு வேலை கொடுக்கப்படும் என அரசு தரப்பில் சொல்லுகிறார்கள். ஆனால் பல தலைமுறைகளாக இதே தொழிலை செய்து வரும் இவர்களுக்கு வேறு என்ன வேலை அரசு  கொடுக்கபோகிறது ?” என கூறினார் இனையம் கத்தோலிக்க பாதிரியார் காட்பிரே.

நிலஅமைப்பில் ஏற்படும் தீவிர மாற்றங்கள்

இந்த துறைமுகத்தை உருவாக்கினால், நிலஅமைப்பில் ஏற்படும் மாற்றத்தை குறித்து பலரும் கவலையுடன் கூறுகின்றனர். இதுகுறித்து சுற்றுசூழலியலாளர் லால்மோகன் கூறுகையில் “ கடலின் மணல்பகுதி ஒரு பக்கத்தில் திரண்டும், மற்றொரு பகுதியில் குறையவும் செய்யும். மணலின் இயக்கம் பக்கவாட்டிலும், செங்குத்தாகவும் எப்போதுமே இருக்கும். ஒருபகுதி கால்பந்து மைதானம் போல காட்சி தரும். மறுபகுதியில் எந்த வேலைகளையும் செய்ய முடியாத நிலையில் இருக்கும். அதனை சுற்றியுள்ள கிராமங்களும் மூழ்கடிக்கப்பட்டுவிடும்.” என கூறினார்.

இந்த பகுதி துறைமுகத்திற்காக தோண்டப்படும் என்பதால், பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். “ அவர்கள் இந்த பகுதியை 20 அடி வரை ஆழத்தில் தோண்ட திட்டமிடுகிறார்கள். அவர்கள் ஆழமாக தோண்டும் போது அதிலிருந்து கிடைக்கும் கசடுகள் கடற்கரையையொட்டிய பகுதியில் சேரும். சுமார் 6 அல்லது 7 கிலோமீட்டர் தூரம் கசடுகளால் நிறைந்து காணப்படும். இயற்கை சமநிலை கடுமையாக பாதிக்கப்பட்டு பயனற்ற பகுதியாக 7 கிலோமீட்டர் தூரம் உள்ள பகுதிகள் மாறிவிடும். “ என கூறினார்.

தண்ணீரின் நிலையில் ஏற்பட வாய்ப்புள்ள மாற்றங்கள் குறித்து அவரிடம் கேட்ட போது “ பெரிய அளவில் தண்ணீர் பற்றாக்குறை இப்பகுதியில் காணப்படுவதுடன், இருக்கும் தண்ணீரும் திடீரென உப்புத்தன்மை  உடையதாக மாறிவிட்டது. அவர்கள் இன்னும் தோண்டினால் ஆறு கிலோமீட்டர் தொலைவிற்கு உப்புநீர் கூடுதலாக உட்புகும். 20 கிலோமீட்டர் தொலைவில் தான் விழிஞ்ஞம் துறைமுகம் வருகிறது. அடுத்தடுத்து இரு முக்கிய பெரிய துறைமுகங்கள் எதற்காக கொண்டு வரப்பட வேண்டும் ? கடல் தண்ணீரை தடுப்பதற்கு ஆயிரக்கணக்கில் பெரிய பாறைகள் தேவைப்படும். அதற்காக இந்த மாவட்டத்தில் உள்ள மலைகளை அவர்கள் உடைப்பார்கள். அதனால் இந்த மாவட்டத்தின் வளங்களும் கெடும் நிலை உருவாகும்.” என்றார் லால்மோகன்.

அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள் ?

ஸ்பானிய நிறுவனம் ஒன்று தயாரித்துள்ள இறுதி கள ஆய்வு அறிக்கையின்படி இனையம் பகுதி துறைமுகம் அமைப்பதற்கு பொருத்தமான பகுதியாக தேர்ந்தெடுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு காரணமாக இப்பகுதி குறைந்த அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் பகுதியாகவும், சுற்றுசூழலுக்கு அதிகம் கேடுகள் உருவாக போவதில்லை எனவும் கூறியுள்ளது. மேலும் இப்பகுதியில் மக்கள் தொகையும் குறைவாக உள்ளது என அந்த அறிக்கை கூறுகிறது. அத்துடன் இப்பகுதியில் துறைமுகத்தை கொண்டு வந்தால், எளிதில் அதனை அமைக்கவும், விரிவுபடுத்தவும் எளிதில் முடியுமென்பது மட்டுமல்லாது சாலைகள் மற்றும் ரயில்கள் மூலம் பிற பகுதிகளை இணைக்க முடியும் எனவும் கூறுகிறது.

“ தோண்டுதல்,சீர்படுத்துதல், கல்குவாரி பொருட்களை கொண்டு வருதல்,டெர்மினல்களை உருவாக்குவதும் , தண்ணீரை தடுப்பதுவும் போன்ற பணிகள் சமூக-பொருளாதாரத்தில் தாக்கங்களை ஏற்படுத்தலாம்” என அந்த கள ஆய்வு மேலும் கூறுகிறது.

இந்த துறைமுக திட்டம் இப்பகுதியில் செயல்படுத்தபடவுள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக தரப்பினர் உறுதிசெய்துள்ளனர். ஆரம்பகட்ட சர்வேக்கள் இதற்காக எடுக்கப்பட்டு வருவதாகவும், இது தொடர்பாக எண்ணற்ற புகார்கள் மீனவ மக்களிடமிருந்து கலக்டர் அலுவலகத்திற்கு வருவதாகவும் ஆட்சியர் அலுவலக வட்டாரம் கூறுகிறது.

எப்படியிருப்பினும், மாவட்ட ஆட்சியர் தரப்பில், இந்த திட்டம் பொதுமக்களின் மனநிலை மற்றும் தேவையையும் பொறுத்தே செயல்படுத்தப்படும் என உறுதியுடன் கூறப்பட்டது.

இந்த இனையம் துறைமுக திட்டமானது, தூத்துக்குடி துறைமுக கழகம் சார்பில் செயல்படுத்தபடுகிறது. இது பற்றி அவர்களிடம் தொடர்பு கொண்ட போது, பதிலளிக்க அவர்கள் மறுத்துவிட்டனர்.

Related Stories

No stories found.
The News Minute
www.thenewsminute.com