ஒரு மரம் வளர்ப்பது, நான்கு ஏர்கண்டிஷன்கள் வைப்பதற்கு சமம் என்பதை மக்கள் புரிந்து கொள்வதில்லை

Tamil Friday, April 29, 2016 - 19:28

“வெப்பம் இங்கே ! நிழல் எங்கே ? சேலமே குரல் கொடு !” இது லேட்டஸ்ட்டா சேலம் மாநகரை சுற்றி எழுதப்பட்டுள்ள கோஷம். தமிழகத்தில் சூரியனின் கருணையற்ற பார்வை படும் மாநகரங்களில் சேலமும் ஒன்று. சேலம் சிட்டிசன் போரம் என்ற அமைப்பு தான் மேற்கூறப்பட்ட இந்த கோஷத்தை சேலத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் முன் எழுதியுள்ளது.

சேலம் மாநகரத்தில் எங்கும் நிறைந்திருந்த நிழல் தரும் மரங்கள் எல்லாம் எங்கே போனது ? என்ற கேள்வி தான் இந்த கோஷத்தின் சாராம்சமே. சேலம் கமிஷனர் அலுவலகம், வனத்துறை அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம், சேலம் மாநகராட்சி அலுவலகம் என முக்கிய அலுவலகங்கள் எதுவுமே விடாமல் இந்த கோஷம் பளிச் என தெரிகிறது.

வேலூரை பின்னுக்கு தள்ளி, சமீபத்தில் சேலம் தமிழகத்திலேயே அதிக வெப்பம் நிறைந்த மாநகராக உருவெடுத்துள்ளதாக கூறுகிறார் இந்த போரத்தின் நிறுவனர்களில் ஒருவரான பியுஸ் மனுஷ். இந்த போரம், சுற்றுசூழல் மற்றும் மனித உரிமை விவகாரங்களில் செயல்பட்டு கொண்டிருக்கிறது.

“ஒப்பந்ததாரர்கள் ஒன்று அல்லது இரண்டு மரங்கள் வெட்ட வேண்டிய இடத்தில் 30 மரங்கள் வரை வெட்டி தள்ளுகிறார்கள்” என கூறும் மனுஷ், நிழல் தரும் மரங்களை வெட்டி சாய்த்ததால் தான் இந்த அளவு கொடிய வெப்பநிலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்.

அரசு தேசிய நெடுஞ்சாலைகளில் மரங்களை நடுவதற்கு தவறிவிட்டதை இந்த அமைப்பு விமர்சித்தாலும், மரம் நடுதல் ஒவ்வொரு மக்களும் அரசை விட அதிக அளவில் மரம் நட முடியும் என கூறுகிறது.

“மக்கள் புதிதாக ஒரு வீடு வைக்கும் போது, ஏற்கனவே இருக்கும் மரத்தை வெட்டுவதோடு அல்லாமல், புதிய மரம் நடுவதற்கான இடத்தை உருவாக்கி கொள்வதில்லை. மரங்கள் இருப்பதால், வீட்டில் பூச்சிகள் அதிகம் வந்துவிடுவதாகவும் மக்கள் கூறுகின்றனர். ஆனால், ஒரு மரம் வளர்ப்பது, நான்கு ஏர்கண்டிஷன்கள் வைப்பதற்கு சமம் என்பதை மக்கள் புரிந்து கொள்வதில்லை.”  என்கிறார் அவர்.

Show us some love and support our journalism by becoming a TNM Member - Click here.