தனது கால்பந்து அனுபவம் அரசியலுக்கும் பயன்படும் என நம்புகிறார் முரளி

Tamil Thursday, May 05, 2016 - 14:43

26 வயதேயான முரளி சங்கர், தனது 10 வயதிலிருந்தே லிவர்பூல் புட்பால் கிளப்பின் ரசிகர். ஒரு காலத்தில் அவரது ஒரே கனவு, உலகின் புகழ்பெற்ற கால்பந்து வீரராக மாறவேண்டும் என்பதாக இருந்தது. கால்பந்தில் கோல் அடிக்க வேண்டும் என்ற அவரது கனவுக்கு பதில், அரசியலில் வாக்குகளை அள்ள வேண்டும் என்ற  நிலைக்கு அவரது வாழ்க்கை மாறியுள்ளது.

அவரது சொந்த இடமான தருமபுரி மாவட்டம் அரூர் தொகுதியில் பாமக வேட்பாளாராக அவர் களமிறக்கப்பட்டுள்ளார். “ அன்புமணியின் மக்கள் சேவை எனக்கு மிகவும் பிடித்து போனதால் நான் அரசியல் பக்கம் வந்தேன்.” என தனது அரசியல் பிரவேசத்தின் காரணத்தை கூறுகிறார் முரளி. ஒரு காலத்தில் கால்பந்தில் களவீரராக இருந்த முரளி சங்கர், தற்போது தனது தொகுதியில் உள்ள பெண்களின் பாதுகாப்பும், தொகுதி மக்களுக்கான வேலைக்கு உத்தரவாதம் அளிப்பதையும் இலக்காக கொண்டிருப்பதாக கூறுகிறார்.

முரளி தனது 9 வது வயதில் கால்பந்து விளையாட துவங்கினார். தனது நண்பன் கால்பந்து விளையாட அழைக்கும் போதெல்லாம், பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாடினார். பின்னர் தனது நண்பர் ஒருமுறை கடினமாக விளையாடியதை தொடர்ந்து விரைவிலேயே கால்பந்து விளையாடுவதை நிறுத்தினார்.

மூன்று மாதங்களுக்கு பின், முரளியின் பயிற்சியாளர் வற்புறுத்தியதன் பேரில் மீண்டும் கால்பந்து விளையாட சென்றார். அதனை தொடர்ந்து, தனது 12 வது வயதில் தனது பள்ளியில் கால்பந்து அணியில் இடம்பிடித்து பள்ளிகளுக்கிடையேயான போட்டி முதல் மாநில அளவிலான போட்டிகள் வரை கலந்து கொண்டார்.

கல்லூரியில் சேர்ந்த போதும் கால்பந்து விளையாட்டில் தீவிரம் காட்டிய முரளி, 2007 இல் பெங்களூர் கிக்கர்ஸ் என்ற கால்பந்து கிளப்பில் சேர்ந்தார்.” ஒரு சீசனில் நான் 14 கோல்களை அடித்தேன்.” என பெருமையுடன் கூறுகிறார் முரளி. இருப்பினும் கால்பந்தில் 19 வயதுக்குட்பட்டோருக்கான கர்நாடக அணியில் இடம் கிடைக்காததால், முரளி டெல்லியில் எம்.பி.ஏ படிப்பதற்காக சென்றார். கால்பந்தை நேசித்ததால், தலைநகரில் உள்ள கால்பந்து அகாடமி ஒன்றில் சேர்ந்தார்.” ஒரு இளம் வெளிநாட்டுக்காரர் அந்த பக்கம் வந்து கொண்டிருந்த போது, நான் நொண்டியபடி நடந்தேன். அவர் என்னை பார்த்து ‘உனக்கு என்னாச்சு ?’ என்று கேட்டார். உலகிலேயே சிறந்த இளம் பயிற்சியாளர் சச்சா லிசம்பார்டு தான் அவர் என நான் அறிந்து வைத்திருக்கவில்லை.” என்றார் முரளி.

முரளியின் காலில் அன்றீரியர் க்ருசியேட் லிகமென்ட் என்ற காயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பின் முரளியின் கால்பந்து கனவு தகர்ந்தது. “ இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால், ஒரு கால்பந்து வீரராக உங்கள் காலில் காயம்பட்டால், வெளிநாட்டில் இருப்பதை போல் இன்சுரன்ஸ் கிடைப்பதில்லை. யாருமே உங்களுக்கு உதவமாட்டார்கள்.” என கூறுகிறார் முரளி. ஆனால், லிசம்பார்டின் உதவியால் முரளி பிரான்சில் உள்ள கால்பந்து கிளப் ஒன்றின் உதவி தொழில்நுட்ப இயக்குனராக தேர்வு செய்யப்பட்டார். உலகப்புகழ் பெற்ற ஒரு பயிற்சியாளரின் கீழில் வேலை செய்வது அவருக்கு மகிழ்ச்சியை தந்தது. “ நான் குழந்தைகளுக்கு எப்படி விளையாட வேண்டும் என கற்று கொடுக்க வேண்டும். அதனுடன் விளையாட்டு தந்திரங்களையும், புது உத்திகளையும் சொல்லி கொடுக்க வேண்டும்.” என்றார்.

அடுத்த ஆறு மாதங்களில் முரளிக்கு பாரிஸ் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவரது பெற்றோர் வேறொரு திட்டத்துடன் இருந்தனர். அவர்கள், முரளியை ஒரு சூப்பர் மார்க்கெட் நடத்த வற்புறுத்தினர். இதனை தொடர்ந்து அவர் அக்டோபர் 2015 இல் அரூர் திரும்பினார். அதன் பின்னர், அவரது உறவினர் ஒருவர் தேர்தலில் போட்டியிட விருப்பமா என கேட்க, எதிர்பாராமல் அரசியலில் நுழைந்தார்.

தனது, விளையாட்டு அனுபவம் அரசியலுக்கு உதவும் என முரளி நம்புகிறார். கால்பந்தில் குழுவாக செயல்படுவது ரொம்பவே முக்கியம். முன்னாள் கால்பந்து வீரரான இவர், விளையாட்டு அவரை சிறந்த மனிதராக மாற்றியது என கூறுகிறார். “ எனக்கு புகை பிடிக்கும் பழக்கமோ அல்லது மது அருந்தும் பழக்கமோ கிடையாது. விளையாட்டு என்னை ஒரு கவனகுவிப்புடன் செயல்பட உதவியது.” என்றார்.

தனது கால்பந்து கனவு மாறினாலும், கால்பந்துடனான தனது காதல் இன்றும் தொடர்வதாக கூறுகிறார் முரளி. ஒரு கால்பந்து வீரருக்கான உத்தியுடன் இந்த தேர்தலை அணுகி வருகிறார் முரளி

Become a TNM Member for just Rs 999!
You can also support us with a one-time payment.