.jpg?auto=format%2Ccompress&fit=max)
இன்போசிஸ் ஊழியர் சுவாதி படுகொலைச் செய்யப்பட்டு ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில்,நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இரு வாரங்களுக்கு முன், ஒரு நபர் சுவாதியின் கன்னத்தில் அறைந்ததாக நேரில் பார்த்த சாட்சி ஒருவர் கூறியுள்ளார்.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து அடிக்கடி ரயிலில் பயணிக்கும், தமிழரசன் என்ற பயணி தான் ஜூன் 6 அல்லது 7 ஆம் தேதி இந்த சம்பவத்தை நேரில் பார்த்ததாக கூறியுள்ளார்.
சுவாதியை அன்று தாக்கிய அந்த நபரும் முதுகில் பை ஒன்றினை சுமந்தபடி இருந்ததாகவும் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்துள்ள நேர்காணலில் தமிழரசன் தெரிவித்துள்ளார்.
“அந்த நபர் 5 அல்லது 6 முறை அறைந்தார். இதில் சுவாதி நிலைகுலைந்தார். பின்னர், சுவாதி தனது போனை எடுத்து கொண்டு அடுத்த ரயிலில் ஏறி சென்றுவிட்டார். அவர் இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்காதது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பல பயணிகளும் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அந்த நபர் சுமார் 30 வயதிருப்பார். சிசிடிவியில் இருப்பவரை போல் அல்லாமல் நல்ல வெளிர் நிறத்துடன் அந்த நபர் காணப்பட்டார்.” என தமிழரசன் நியூஸ் மினிட்டிடம் கூறினார்.
மேலும் அவர், தான் ஜூன் 24 அன்று சுவாதியை கொன்றுவிட்டு விரைந்தோடும் போது ஒரு நொடி நேரம் மட்டுமே கொலையாளியை பார்த்ததாகவும் கூறினார்.
“சுவாதியின் அலறல் சத்தத்தை நான் கேட்டேன். அப்போது நான் கொஞ்சம் தூரமாக நின்றிருந்தேன்.அதேவேளை மற்றொருவர், அந்த நபர் தப்பி ஓடுவதை தடுப்பதை கவனித்தேன். சில நிமிடங்களில் அவர் இறந்ததை தொடர்ந்து நாங்கள், அடுத்த ரயிலில் அங்கிருந்து சென்றோம்.” என்றார் அவர்.
தொடர்ந்து, சுவாதியின் கன்னத்தில் தாக்கியதை வேறு ஏதேனும் பயணிகள் கவனித்தார்களா ? என்ற கேள்விக்கு, “ பொதுவாக ரயிலுக்கு அவர் காத்திருக்கும் இடத்தில் வைத்து தான் இந்த சம்பவம் நடந்தது. நிச்சயம் அங்கு வேறு சில பயணிகளும் இருந்தார்கள். ஆனால் அவர்கள் யார் என்றெல்லாம் எனக்கு தெரியாது.” என்றார் அவர்.
பெயர் வெளியிட விரும்பாத சுவாதியின் உறவினர்கள், இப்படி ஒரு சம்பவம் தங்களுக்கு நடந்ததாக எந்த அறிவும் இல்லை என கூறுகின்றனர்.
இதனிடையே சிசிடிவியில் தெரியும் அதே நபர் தான் சுவாதியை கொன்றதாக தமிழரசன் டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் கூறுகையில் உறுதி செய்துள்ளார். காலை 6.45 மணியளவில், அந்த பெண் அலறலுடன், 2 வது பிளாட்பாரத்தில் கீழே விழுந்து இறந்தாள்.
இரண்டு பேர் அந்த கொலையாளியை விரட்டி பிடிக்க முற்பட்ட போது, அந்த நபர் 2 வது பிளாட்பாரத்தில் ஏறி குதித்து தப்பி ஓடினார். அப்போது செங்கல்பட்டு ரயில் வந்ததை தொடர்ந்து அவனை பிடிக்கமுடியவில்லை. அந்த நபர் எதிர்வசம் இருந்த பிளாட்பாரத்தில் ஏறி, சூளைமேடு செல்லும் பகுதியை நோக்கி ஓடி தப்பினான். என கூறினார் அவர்.
இதனிடையே கொலையாளியை விரட்டிய ஒருவர் , அவன் மீது கற்களை எடுத்து வீச, மற்றொருவர் அவசர உதவி எண் 100க்கு அழைத்தார்.
“நான் இந்த தகவலை போலீசுக்கு கொடுத்துள்ளேன். அதனையே ஊடகங்களுக்கும் கொடுத்துள்ளேன். இதன்மூலம் சுவாதிக்கு நீதி கிடைக்கும் என நம்புகிறேன்” என தமிழரசன் கூறினார்.