“நான் அதிமுகவிற்கு ஆதரவளித்த போது, விஜயகாந்தை கடுமையாக விமர்சித்திருக்கலாம். ஆனால் அவர் எனது பாசமிகு சகோதரர்”

news Thursday, March 03, 2016 - 13:12

பாரதீய ஜனதா கூட்டணிக்காக பிரச்சாரத்திற்கு களம் இறங்க போவதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார் அறிவித்துள்ளார். மேலும், தேமுதிக அக்கூட்டணியில் இணைந்தால், மெகா கூட்டணியாக அது உருவெடுக்கும் என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து டெக்கன் குரோனிக்கல் நாளிதழ் நிருபரிடம் அவர் கூறுகையில்” விஜயகாந்த் வந்தால், தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு மெகா கூட்டணியாக உருவெடுக்கும். அவர் வந்தால், ஒன்றாக இணைந்து மக்களுக்கு ஒரு மாற்றத்தை உருவாக்குவோம்” என்றார்.

தென்காசி சட்டமன்ற உறுப்பினரான சரத்குமார், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராக உள்ளார். கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் ஆளும் அதிமுகவிற்கு பிரச்சாரம் செய்து வந்த இவர், சமீபத்தில் அக்கட்சியுடனான உறவை திடீரென முறித்து கொண்டார்.

“ நான் அதிமுகவிற்கு ஆதரவளித்த போது, விஜயகாந்தை கடுமையாக விமர்சித்திருக்கலாம். ஆனால் அவர் எனது பாசமிகு சகோதரர்” என விஜயகாந்தை குறித்து சரத்குமார் கூறினார்.

அவரது கட்சி சார்பில், தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்களிடமிருந்து  2567 விண்ணப்பங்களை பெற்றுள்ளார். விரைவில் கொங்கு மண்டல பகுதியில் உள்ளவர்களுக்கான நேர்முக தேர்வை அவர் முடிக்கவுள்ளார்.

Become a TNM Member for just Rs 999!
You can also support us with a one-time payment.