வழக்கறிஞர் முத்துக்குமார் இதுவரை 1300 க்கும் அதிகமானோருக்கு ஜாதி மறுப்பு திருமணம் செய்து வைத்துள்ளார்.

 Image: V Muthukumar
Tamil Monday, April 25, 2016 - 20:45

உயர்சாதியை சேர்ந்த சித்ராவும், தலித் சமூகத்தை சேர்ந்த கண்ணதாசனும் காதலித்த போது, திருமணம் செய்வதற்கான வழி தெரியாமல் தவித்து கொண்டிருந்தனர். திருச்சி அருகேயுள்ள வெவ்வேறு கிராமங்களை சேர்ந்த இருவருக்கும் சவாலாக விளங்கியது இன்று தமிழகத்தில் பற்றி எரியும் ஜாதி பிரச்சினை தான். இருப்பினும், தங்கள் பயத்தின் நடுவே இருவரும் திருமணம் செய்வது என முடிவு செய்தனர். தங்கள் குடும்பத்தினரிடமிருந்து எதிர்கொள்ளும் மிரட்டல்களுக்கிடையில் அவர்களால் திருமணம் செய்து கொண்டு தன்னந்தனியாக வாழ்வது இயலாத காரியம்.

அத்தகைய சூழலில் தான் 39 வயதான திருச்சியை சேர்ந்த முத்துக்குமார் என்ற வழக்கறிஞரை இருவரும் தொடர்பு கொண்டனர். வெவ்வேறு ஜாதியை சேர்ந்த இவர்கள் இருவரையும் திருமணம் செய்து வைப்பது முதல், அவர்களது குடும்பத்தினரிடமிருந்து வரும் நெருக்கடிகளிலிருந்து பாதுகாப்பது வரை முத்துக்குமார் தீவிரமாக இருந்தார்.

முத்துக்குமாரை “கராத்தே முத்துகுமார்” என்றால் தான் அனைவருக்கும் தெரியும். சுமார் 1300 க்கும் அதிகமானோருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். அவர்களில் பெரும்பாலானோர் சாதிமறுப்பு  திருமணம் செய்து கொண்டவர்கள். தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா இன்னும் ஏன் தொலைதூர மாநிலமான  ஜார்க்கண்டில் உள்ள தம்பதியினருக்கு கூட இவர் திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.

தான் திருச்சி சட்டகல்லூரியில் 1998 ஆம் ஆண்டு சட்டப்படிப்பை துவங்கும் வரை ஜாதி பிரச்சினைகள் பற்றி குறைந்த அளவே தெரிந்து வைத்திருந்ததாக குறிப்பிடுகிறார் முத்துக்குமார்.” நான் பள்ளியில் படிக்கும் போது, ஜாதி பிரச்சினைகளையோ, அவற்றால் உண்டாகும் பாகுபாடுகளையோ நேரில் கண்டதில்லை. ஆனால், நான் திருச்சி சட்ட கல்லூரியில் படிக்கும் போது தான் கல்லூரியில் பல குழுக்கள் இருப்பதையும், அவர்கள் ஒருவரையொருவர் சந்தித்தால் பேசிக் கொள்வது கூட இல்லை என்பதை கண்டேன். அப்போது தான் இது போன்ற ஜாதி பிரச்சினை இன்னும் தொடர்கிறது என புரிந்து கொண்டேன்.” என்றார்.

இருப்பினும், ஜாதி பிரச்சினை எவ்வளவு கொடியது என்பதை ஈரோட்டில் உள்ள அவரது நண்பருக்கு அவரது காதலியை கரம் பிடிக்க உதவும் வரை முத்துக்குமார் அறிந்து வைத்திருக்கவில்லை. அந்த பெண் கவுண்டர் குடும்பத்தை சேர்ந்தவர். இவரது நண்பர் தலித் சமூகத்தை சேர்ந்தவர். “ நான் சட்டம் படித்து கொண்டிருந்ததால், அவர்கள் திருமணம் செய்து கொள்ள என்னை தொடர்பு கொண்டனர். நான் அவர்கள் ஒரு கோயிலில் வைத்து திருமணம் செய்து கொள்ள உதவியதுடன் தலைமறைவாக இருக்கவும் போதிய ஏற்பாடு செய்தேன்” என்றார்.

மறுநாள், புதிதாக திருமணம் செய்து கொண்ட அந்த தம்பதியினரை, முத்துகுமார் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைய அழைத்து சென்றார். அங்கு 30 க்கும் மேற்பட்ட கார்களில் அந்த பெண்ணின் குடும்பத்தினர் வந்து குவிந்திருந்தனர். அந்த பெண்ணை கணவரிடமிருந்து பிரித்து, தங்களுடன் அனுப்பி வைக்க பெண்ணின் குடும்பத்தினர் முத்துகுமாருக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்டனர். ஆனால் முத்துக்குமார் அதனை ஏற்க மறுத்துவிட்டார். “ நான் ஸ்டேஷனை விட்டு வெளியேறும் போது, இரு காரில் வந்தவர்களால் தாக்கப்பட்டேன். இருப்பினும் நூலிழையில் தப்பினேன்.” என்றார்.

பின்னர் இந்த விவகாரம் கோர்ட்டில் போகவே, தம்பதியினரின் இணைந்து வாழும் உரிமையை கோர்ட் உறுதி செய்தது. மேலும், அந்த தம்பதியினர் பொருத்தமான இடத்தில் பாதுகாப்புடன் நிரந்தரமாக தங்குவரை போதிய பாதுகாப்பு வழங்கவேண்டும் என கோர்ட் போலீசாருக்கு உத்தரவிட்டது. அந்த தம்பதியினர் கேரளாவுக்கு சென்று தங்கியவுடன் இந்த விவகாரம்  திருப்தியுடன் முடிந்ததாக முத்துக்குமார்  கருதினார். ஆனால் சில மாதங்களுக்கு பின் அந்த தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டதை அறிந்து கொண்டார்.

இந்த சம்பவம் முத்துக்குமாருக்கு, கலப்பு திருமணத்தில் உள்ள பிரச்சினையின் தீவிரத்தை அறிந்து கொள்ள உதவியது. “அந்த சம்பவத்திற்கு பின், நான் ஒவ்வொரு வழக்கிலும் மிக கவனமாகவும், தீவிரமாகவும் இருந்தேன்.”

தற்போது முத்துக்குமார் திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கறிஞராக பயிற்சி செய்து வருகிறார். தனது சட்ட அறிவை, குடும்ப சிக்கல்களை எதிர்கொண்டு திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதிகளுக்காக அடிக்கடி பயன்படுத்தி வருகிறார்.

“ ஒவ்வொரு கலப்பு திருமண தம்பதிகளுக்கும், மூன்று மணிநேரம் கவுன்சிலிங் கொடுப்பதற்காகவே செலவிடுகிறேன். அந்த நேரத்தில் தானே அதற்கான செலவுகளையும், கட்டணத்தையும் இறுதிபடுத்திவிடுகிறோம்.” என கூறுகிறார்.

கவுன்சிலிங் கொடுத்த பின்னர், சட்டரீதியாக ஏதேனும் பிரச்சினை வருமா என யோசித்து, எந்த போலீஸ் ஸ்டேஷனில் தம்பதியினர் சரணடைய வேண்டும் என்பதை முடிவு செய்வார். “ உயர்சாதியை சேர்ந்தவர்களது குடும்பத்தினர், போலீசில், தங்களது பையனோ அல்லது பெண்ணோ கடத்தப்பட்டுவிட்டதாக பொய் புகார் கொடுத்து வைத்திருப்பர்.” என கூறும் அவர், தனது தொடர்புகளை கொண்டு அந்த தகவல்களை பெற்று,  தம்பதியினரின் பாதுகாப்பை தான் உறுதி செய்துவிடுவதாக கூறுகிறார்.

ஒவ்வொரு வழக்குகளின் தன்மையை பொறுத்து, முத்துக்குமாரும் அவரது குழுவினரும் தம்பதிகளை பாதுகாக்கும் நடவடிக்கையில் இறங்குகின்றனர். கடைசியாக அவர் எதிர்கொண்ட வழக்கில், வெள்ளாள சமூகத்தை சேர்ந்த பெண்ணின் குடும்பத்தினர், அந்த புதுமண தம்பதியினருக்கு எந்தவித தொந்தரவும் செய்யமாட்டோம் என எழுத்துபூர்வமாக உத்தரவாதம் வாங்கினர். இந்த உத்தரவாதம் கிடைக்க பெறும் வரை, அந்த தம்பதியினர் முத்துக்குமாரால் ஏற்பாடு செய்யப்படும் ஒரு இடத்தில் இரகசியமாக தங்கவைக்கப்படுகின்றனர்.

முத்துக்குமார், தம்பதியினரின் பாதுகாப்பு கருதி, பிரச்சினையின் தீவிரத்தின் அடிப்படையில் விதவிதமான பாதுகாப்பு இடங்களை தேர்வு செய்வதாக கூறுகிறார். “ அது எனது வீடாகவோ அல்லது எனது உறவினர்களின் வீடாகவோ கூட இருக்கலாம். சில வேளைகளில் எனது நண்பர்களின் வீடுகளையும் நான் தேர்வு செய்வது உண்டு” என்றார் அவர்.

தம்பதியினரின் பாதுகாப்புக்கு தான் முத்துகுமார் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். கராத்தேயில் பயிற்சி பெற்றிருப்பதால், தேவைப்படும் சூழல்களில் தம்பதியினரின் பாதுகாப்பிற்காக  சண்டையிடவும் அவர் தயங்கியதில்லை. கடந்த 2010 ஆம் ஆண்டில் ஒரு தம்பதியினருக்கு உதவ போய், அவர்களது உறவினர்கள் தாக்கியதில், அவரின் தலையில் காயம் ஏற்பட்டது. “ தம்பதியினரின் உறவினர் ஒருவர் அரிவாளால் வெட்டி போட்டார். அதனால் எனது பின்னந்தலையில் 32 தையல்களும், முன்னந்தலையில் 15 தையல்களும் போடப்பட்டன.நான் முக்கிய அறுவைசிகிச்சை செய்ய வேண்டியதாயிருந்தது.” என்றார்.

இவ்வளவு பாதுகாப்பற்ற பணியை எப்படி தொடர்ந்து செய்கிறீர்கள் என கேட்டபோது,” தம்பதியினரின் காதலுக்கு உதவி செய்ய வேண்டும் என்றே விரும்புகிறேன். அவர்களுக்கு உதவும் திறன் எனக்கு உண்டு. என்னை பாதுகாக்க எப்போது 15 பேராவது கூடவே உள்ளனர்.” என்றார் அவர்.

Show us some love and support our journalism by becoming a TNM Member - Click here.