கல்பேட்டா தொகுதியில் இருமுறை எம்.எல்.ஏவாக இருந்த பெரும் வசதிபடைத்த ஸ்ரேயாஸ் குமாரை தோற்கடித்து, காலில் செருப்பிடாத சாதாரண விவசாயியான சசீதரனை தேர்வு செய்த மக்கள்

Tamil Friday, May 20, 2016 - 20:18

தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலை கணக்கில் கொண்டு பார்த்தால் வசதிபடைத்த வேட்பாளர்களே பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால், கேரளா அரசியலில், தேர்தலில் வெல்ல பணம் ஒரு பொருட்டே அல்ல என வாக்காளர்கள் நிரூபித்துள்ளார்கள்.

கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள கல்பேட்டா தொகுதி. இங்கு கடந்த இருமுறை எம்.எல்.ஏ வாக இருந்தவர் பெரும் வசதிபடைத்தவரான ஸ்ரேயாம்ஸ் குமார். வசதி என்றால், மலையாள ஊடக உலகில் கொடிகட்டி பறக்கும் மாத்ருபூமி நாளிதழ் இவரது குடும்பத்திற்கு சொந்தமானது. கூடவே சில தேயிலை எஸ்டேட்களை உரிமையாக கொண்டவர்.

இவ்வளவு வசதி படைத்த எம்.எல்.ஏ வான ஸ்ரேயாஸ் குமாரை எதிர்த்து ஆட்சியை பிடித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி  சி.கே.சசீதரன் என்பவரை இம்முறை களமிறக்கியது. காலில் செருப்பு அணியாமல் நடக்கும் இவர் ஒரு சாதாரண விவசாயி. கல்பேட்டா தொகுதியில் சசீதரன் பலருக்கும் நன்கு அறிமுகமானவர். காலையில் எழுந்ததும், தனது வீட்டில் நிற்கும் பசுக்களின் பாலை கறந்து, அக்கம்பக்கத்தினர்  வீடுகளில் கொண்டு கொடுத்துவிடுவார். அதன் பின்னர் தனக்கு சொந்தமான 1.3 ஏக்கர் நிலத்தில் கொஞ்ச நேரம் விவசாய வேலை. அதனை தொடர்ந்து சமூக பணிகள்.

அரசியல் அறிவியல் பட்டம் பெற்ற சசீதரனின் அரசியல் வாழ்க்கை மாணவர் பருவத்தில் துவங்கியது. தற்போது, வயநாடு மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளராக இருக்கும் இவர், காலையில் கட்சிக்கு வேலைக்கு செல்லும் முன், வீட்டில் நிற்கும் பசுக்களின் பாலை கறந்து வீடுகளுக்கு கொடுத்து விட்டு தான் செல்கிறார்.

மூன்றாவது முறையாக மாவட்ட செயலாளராக இருக்கும் இவர், உள்ளூர் மக்களுக்கு மிகவும் அறிமுகமானவர். காலில் செருப்பு அணியாமல், சர்வசாதாரணமாக பொதுமக்களுடன் டீக்கடைகளில் போய் அமர்ந்திருந்து, அவர்கள் பிரச்சனைகளை கேட்டு அவற்றுக்கு தீர்வு காண அவர் தவறுவதில்லை.

மக்களுடனான இவரது நெருக்கத்தை தொடர்ந்தே சி.பி.எம் கட்சியினர் இவரை அத்தொகுதியில் களமிறக்கினர். இறுதியில், இருமுறை எம்.எல்.ஏ வாக இருந்த வசதிபடைத்த ஸ்ரேயாஸ் குமாரை 13000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து , சசீதரனுக்கு எம்.எல்.ஏ ஆகும் வாய்ப்பினை அளித்தனர் கல்பேட்டா தொகுதி வாக்காளர்கள்.

Also watch:

Show us some love and support our journalism by becoming a TNM Member - Click here.