சில செய்தி நிறுவனங்களும் அந்த படத்தை செய்தியாக பிரசுரித்திருந்தன.

Tamil Jayalalithaa Sunday, October 02, 2016 - 19:29

நீல நிற போர்வையை போர்த்தியபடி,  ஆக்ஸிஜன் குழாயை மூக்கில் செருகிய நிலையில், டிஜிட்டல் திரையுடன் இணைக்கப்பட்ட கேபிள்களுடன் மருத்துவமனை ஒன்றின் படுக்கையில் ஒரு பெண்மணி படுத்திருப்பதை போன்ற காட்சியடங்கிய படமொன்று சமூக வலைத்தளம் முழுவதும் பரவி வருகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெறும் படம் தான் அது என்ற உறுதியற்ற தகவலுடன் பலராலும் பரவலாக ஷேர் செய்யப்பட்டும் வருகிறது.

சமீபத்தில்,திமுக தலைவர் கருணாநிதி, அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை வெளியிட வேண்டும் என தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்திருந்தார். அதன் பின்னரே இந்த படமானது சமூக வலைத்தளங்களை ஆக்கிரமிக்க துவங்கியது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், இதன் உண்மைத் தன்மை தேடிய போது, இந்த படமானது பெரு நாட்டில் கடந்த ஆகஸ்ட் 20,2009 இல்  எடுக்கப்பட்டது என தெரிய வந்தது. அந்நாட்டின் தலைநகரான லிமாவில் உள்ள எஸ்ஸ்லாட் (EsSalud Hospital)மருத்துவமனையின் இணையதளத்தில் இந்த பட்த்தினை காண முடியும். கூடவே, “எஸ்ஸ்லாட் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவின் ஒரு படுக்கை” என்று ஆங்கிலத்தில் குறிக்கப்பட்ட அடிக்குறிப்பு ஒன்றையும் காண முடியும். இத்துடன், மேலும் பல படங்களுடன் அந்த மருத்துவமனை இணையதளம் இந்த படங்கள் குறித்து குறிப்பிட்டுள்ளதாவது, “இந்த படங்கள் அனைத்துமே ஒரு நிதியுதவியின் கீழ் வருகை தந்த ரோசஸ்டர் பயோ மெடிக்கல் எஞ்சினியரிங் பல்கலைகழக மாணவர்களால் பெருவில் வைத்து எடுக்கப்பட்டது. ஸ்காட் செய்ட்மேனின் அனுமதியுடன் இந்த படங்கள் பயன்படுத்தப்படுகின்றன” என்றும் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் உண்மை தன்மையை நீங்கள் இன்னும் நம்பவில்லையெனில் இந்த லிங்கை கிளிக் செய்து உறுதி செய்துகொள்ளலாம்.  Link. 

இந்த ஆதாரத்திலும் கூட நீங்கள் திருப்தியடையவில்லையென்றால் குறிப்பிட்ட அந்த படத்தில் காணப்படும் சுவரில்  வலது புறத்தில் இருக்கும் மருத்துவமனையின் சின்னத்தை பார்த்து உறுதி செய்து கொள்ளலாம்.

கர்நாடகா மற்றும் கேரளாவை சேர்ந்த பல செய்தி நிறுவனங்களும் படத்தில் காணும் இந்த பெண்மணி ஜெயலலிதா தான் எனக் கூறி செய்தி வெளியிட்டதன் காரணமாகவே நாங்கள் இந்த படத்தின் உண்மை தன்மையை வெளியிடுகிறோம்.

கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைபாடு காரணமாக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அறிக்கையில் கூறப்பட்டது. அவர் அனுமதிக்கப்பட்டதிலிருந்து  அவரது உடல் நிலை குறித்து மொத்தம் நான்கு அறிக்கைகள் வெளியிடப்பட்டன. சனிக்கிழமையன்று ஆளுநர் வித்தியாசகர் ராவும் சென்னையில்  அப்போல்லோ மருத்துவமனைக்கு சென்று பார்த்தார். அதனை தொடர்ந்து, அவர் விரைவாக குணமடைந்து வருவதாக ராஜ்பவனிலிருந்து ஒரு செய்தியறிக்கையும் வெளியிடப்பட்டது.

கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போல்லோ மருத்துவமனையின் மெயின் ப்ளாகில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து மருத்துவமனையை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Become a TNM Member for just Rs 999!

You can also support us with a one-time payment.

Rs 200Rs 500Rs 1500Custom