சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் அந்த பெண்ணின் குடும்பத்தினர் தனக்கு நெருக்கமானவர்கள் என பாடகி சின்மயி கூறியுள்ளார்.

Tamil Rumour Monday, December 12, 2016 - 14:07

கடந்த சில காலமாகவே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முகச் சாயலை ஒத்த பெண் ஒருவரின் படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக்கில் அந்த படத்தை ‘ இப்படத்திலிருப்பவர் ஜெயலலிதாவின் மகள்’ என்றும் தற்போது அமெரிக்காவில் ரகசியமாக வசித்து வருகிறார் என்றும் கூறி பகிர்ந்து வருகின்றனர். 

கடந்த 2014 இல் ஜெயலலிதா  பெங்களூர் சிறைக்கு சென்றது முதல் சமூக வலைத்தளங்களில் இந்த படம் உலவ துவங்கியது. உணர்வுப் பூர்வமாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கையை உண்மையிலேயே அலசியதை போல் அந்த படத்துடன் எழுதப்பட்டிருந்த கதையை பலரும் உண்மை என்றே கருதி பகிர்ந்துள்ளனர். ஆனால் உண்மையில் அந்த படத்தின் பின்னணியிலிருக்கும் உண்மை தான் என்ன ? அந்த பெண் யார் ? என்ற கேள்விக்கு பிரபல பின்னணி பாடகி சின்மயி பதிலளித்துள்ளார்.

இந்த படத்திலிருப்பவரின் பெயர் திவ்யா ராமநாதன் வீரராகவன். ஆஸ்திரேலியாவில் தனது கணவருடன் வசித்து வரும் இவர் ஜெயலலிதாவின் மகள் அல்ல. அவரது கணவருடன் இருக்கும் படம் ஒன்றை கூடவே இணைத்து சின்மயி எழுதியுள்ள முகநூலில் பதிவில் “ இந்த படத்திலிருக்கும் தம்பதியர் எனது குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள்.  மேலும் பாரம்பரிய இசைக் குடும்பத்தை சேர்ந்தவர். “ எனக் குறிப்பிட்டிருக்கும் அவர், புகழ்பெற்ற மிருதங்க வித்வான் வி.பாலாஜியின் குடும்பத்தை சேர்ந்தவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “ஒரு பொய்யை திரும்ப திரும்ப கூறினாலே அது உண்மையாகி விடும் என்பதை போன்று உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து மிருதங்க வித்வான் பாலாஜி கூறுகையில், “ கடந்த வருடமே இந்த படம் முகனூலில் உலா வருவதை நாங்கள் பார்த்தோம். உடனடியாக  நண்பர்களின் உதவியுடன் முகனூலை தொடர்பு கொண்டு அந்த படத்தை அகற்ற கோரினோம். அதற்கு அவர்கள், அந்த படத்தில் தரக்குறைவாக எதுவும் இல்லையென்றும், புரளியான தகவல் அகற்றப்படும் என்றும் கூறினர். ஆனால் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை. முன்னர் பகிரப்பட்டதை விட அதி வேகமாக தற்போது பகிரப்பட்டு வருகிறது. எனது சகோதரரும், திவ்யாவும் ரொம்பவே இதனால் வருத்தமும், வேதனையும் அடைந்துள்ளனர்” என்றார்.

மேலும், திவ்யா வெளிநாட்டில் இருந்த போது, இதே படம் அங்கும் வாட்ஸ் அப் குழு ஒன்றில் அவருக்கு கிடைத்ததாக கூறினார்.

“ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் இந்த படம் பகிரப்படுவது மிகவும் தீவிரமாக உள்ளது. இதனை தொடர்ந்தே, சின்மயி எங்களுக்கு உதவ முன்வந்தார். “ எனக் கூறினார். 

இந்த இரு படங்களுக்குமிடையில் அதிக வித்தியாசமிருப்பதை பற்றிக் கேட்டபோது, முதலில் உள்ள படம் கடந்த 2008 இல் எடுக்கப்பட்டது எனவும் இரண்டாவது படம் சமீபத்தில் எடுக்கப்பட்டது  எனவும் கூறினார்.

இனி இது போன்ற படத்தை கண்டால், பகிராதிருங்கள் அல்லது  அந்த படத்தின் பின்னிலிருக்கும்  இந்த உண்மையை பரப்புங்கள்.

Topic tags,
Become a TNM Member for just Rs 999!
You can also support us with a one-time payment.