அரசியல் விமர்சகர்கள் இந்த நீண்ட கால அவகாசம், எதிர்கட்சிகளுக்கு ஒரு சோதனையாகவே அமையும் என கூறுகின்றனர்

news Saturday, March 05, 2016 - 15:55

கடைசியாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. கிட்டத்தட்ட தமிழக தேர்தல் நடைபெற 70 நாட்கள் உள்ளன. தற்போதைய சூழலில், தமிழ்நாட்டில் பல முனை போட்டிகளுக்கே வாய்ப்பு உள்ளது. இருப்பினும் 70 நாட்கள் நீண்டிருக்கும் கால அளவு, அரசியல் கட்சிகளுக்கிடையே கூட்டணி குறித்த விவாதத்தை நடத்த உதவும்.

இவ்வளவு நீண்ட கால அவகாசம் அரசியல் கட்சிகள் குறிப்பாக எதிர்கட்சிகளுக்கு ஒரு சோதனையாகவும், ஆளும் கட்சிக்கு ஒரு நல்ல நிலையை எட்டவும் உதவும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

“இந்த நீண்ட கால அவகாசம் கூட்டணி அமைக்க விரும்பும் கட்சிகளுக்கு பேரங்களை இழுவையாக்க பயன்படும். அதே சமயம் கூட்டணியை இறுதி செய்யத் தாமதப்படுத்தினால், நீண்ட காலம் பிரசாரம் செய்ய கிடைத்திருக்கும் வாய்ப்பு வீணாகிவிடும். இப்போதைய சூழலில் நீண்ட நாட்கள் பிரசாரம் செய்யும் வாய்ப்பு அ.தி.மு.கவுக்கும், மக்கள் நலக் கூட்டணிக்கும் மட்டுமே வாய்த்திருக்கிறது. மற்ற கட்சிகள் அதிகபட்சம் இன்னும் ஒரு வாரத்துக்குள் கூட்டணிகளை இறுதி செய்வது அவர்களுக்கு நல்லது. அப்போதுதான் சூழல் தெளிவாகும். அசல் பிரச்சினைகளை பிரசாரத்தில் மக்கள் கவனம் பெற வைக்க இயலும்.” என ஞாநி சங்கரன் கூறுகிறார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்களுள் ஒருவரான ரவிக்குமார் இன்னும் ஒருவாரத்தில் கூட்டணி குறித்த சூழல்கள் இறுதிபடுத்தபடும் என தான் நம்புவதாக கூறினார்.” சில குறிப்பிட்ட கட்சிகள் தங்கள் கட்சியில் இணைய வேண்டும் என காத்திருக்கும் பெரிய கட்சிகளுக்கு, அவை எதிரான விளைவையே ஏற்படுத்தும். கடந்த முறை தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள், ஏப்ரல் மாதம் வரை நீண்டன. இப்படிப்பட்ட சூழலில், பேரங்களில் இல்லாமல், வலுவான மூன்றாவது அணியை கட்டுவதில் எங்கள் கவனம் இருக்கும்.” என்றார்.

தேமுதிகவை பொறுத்தவரை பேரம் பேசி கொண்டிருப்பதால், இதுவரை தனது முடிவை தெளிவாக அறிவிக்கவில்லை. நல்ல தேர்வை தேர்ந்தெடுக்க நீண்ட கால அவகாசம் இருப்பதால், அனைத்து அரசியல் கட்சிகளும், தேமுதிகவையே உற்று நோக்கி கொண்டிருக்கின்றன. இதுகுறித்து சென்னை பல்கலைகழக அரசியல் அறிவியல் துறை பேராசிரியர் ராமு மணிவண்ணன் கூறுகையில், “ தேமுதிக இந்த நேரம் இரு கூட்டணிகளிடம் பேரத்தில் இருக்கலாம் நான் நினைக்கிறேன். அவர்கள் எளிதில் ஒன்றும் எதற்கும் சமரசம் பண்ணுபவர்கள் அல்ல. ஆளுங்கட்சிக்கு  இந்த தாமதமான தேர்தல் தேதி, சாதகமாக அமையும்.” என்றார்.


இதற்கிடையில் திமுக தரப்பில், தேமுதிக அவர்களுடன் கூட்டணி வைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். “ எங்களை, அவர்களுக்கு தேவை என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம். ஆனால் முன்வைக்கப்படும் தேவைகள் நிச்சயம் நியாயமாக இருக்க வேண்டும். இதற்கு அப்பால், நாங்கள் காங்கிரஸ் கட்சியுடன் மட்டும் இணைந்து  தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம்” என திமுக தலைவர்களுள் ஒருவர் கூறினார்.


திமுகவும்,காங்கிரசும் தங்களுக்குள் பேசி, போட்டியிடும் சீட்டுகள் குறித்து ஒரு முடிவுக்கு வந்த பின், தேமுதிக சென்றால், மீண்டும் அங்கு நிலைமை மோசமடையும். தேமுதிகவுக்கு சீட் வழங்குவதற்காக கூட்டணி முடிவு செய்துள்ள சீட்களை மீண்டும் உடைக்க வேண்டிய நிலை வரும். அப்போது நேரம் இன்னும் வீணாக செலவழியும்.” என கூறினார் ஞாநி சங்கரன்.

பேராசிரியர் மணிவண்ணன் கூறும்போது, “ இத்தகைய கால அவகாசத்தை, பல கட்சிகளும், தவறாக பயன்படுத்தி, தங்களின் சொந்த நலனுக்கே எதிராக வேலை செய்ய வைக்கும்” என்று கூறினார். 

 

Become a TNM Member for just Rs 999!
You can also support us with a one-time payment.