இறந்தவர்கள் அடையாளம் காண முடியாமல் உடல்கள் உருக்குலைந்து காணப்படுவதாக டிஜிபி தகவல்

news Sunday, April 10, 2016 - 09:38

ரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் பரவூர் அருகே உள்ள கோயில் ஒன்றில் ஞாயிறு அதிகாலை நடந்த வெடி விபத்தில் 84பேர் பலியானதுடன் 300 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயம் அடைந்தவர்களில் பலரையும் கொல்லம் மற்றும் திருவாங்கூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு எடுத்து செல்லப்பட்டு வருகின்றனர். மருத்துவமனை ஊழியர்கள் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க முடுக்கிவிடப்பட்டுள்ளனர் என மருத்துவத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதுவரை மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டவர்களில் திருவாங்கூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 13 பேர் பலியானதாகவும், கொல்லம் அரசு மருத்துவமனையில் 10 பேர் பலியானதாகவும் கூறப்படுகிறது. காயம்பட்ட பெரும்பாலானோர் கொல்லம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு தொடர்ந்து எடுத்து செல்லப்பட்டு வருகின்றனர்.

“ பெரும்பாலான உடல்கள் அடையாளம் தெரியாத அளவு எரிந்து போயுள்ளன. இதனால், ஆண்கள் யார் பெண்கள் யார் என்று கூட கண்டுபிடிக்க முடியவில்லை. இறந்து போனவர்களின் உறவினர்கள் மருத்துவமனையை முகாமிட்டுள்ளனர் “ என கூறினார் திருவாங்கூர் மருத்துவ கல்லூரி ஊழியர் ஒருவர்.

உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பாதிக்கப்பட்ட பகுதியை நேரில் சென்று பார்வையிட்டு, பலியானவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க போவதாக உறுதி கூறியுள்ளார்.முதலமைச்சர் உம்மன்சாண்டி காலை 11 மணியளவில் அந்த பகுதிக்கு சென்றடைவார் என தகவல்கள் கூறுகின்றன. இதுவரை ஒருசில உடல்களே அடையாளம் காணப்பட்டுள்ளன.

“உடல்கள் மிகமோசமாக சீர்குலைந்துள்ளன. இதுவரை 7 உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன. மக்கள் எங்கெல்லாம் நின்று கொண்டிருந்தார்கள் என்பது தெரியாது என்பதால் உடல்களை அடையாளம் காண்பது கடினமானதாக இருக்கும்” என டிஜிபி சென்குமார் கூறியுள்ளார்.

பட்டாசு விடும் போட்டி என்பதால் அதனை காண எண்ணற்ற குழந்தைகளும், பெண்களும் வந்திருந்தனர். தற்போது வரை 3 பெண்கள் இறந்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Show us some love and support our journalism by becoming a TNM Member - Click here.