வானிலையை கூறும் "மழை மனிதர்" ரமணன் பணியிலிருந்து ஓய்வு

மார்ச் 31 இல் ஓய்வுபெறும் ரமணன், தனது பணியின் கடைசி நாள்களில் சுழன்றடித்து வேலைபார்த்து கொண்டிருந்தார்.
வானிலையை கூறும்  "மழை மனிதர்" ரமணன் பணியிலிருந்து ஓய்வு
வானிலையை கூறும் "மழை மனிதர்" ரமணன் பணியிலிருந்து ஓய்வு

சென்னையிலுள்ள இந்திய வானிலை துறையின் அலுவலகம். அந்த அலுவலக லிப்டின் அருகே உள்ள ஒரு கதவு பாதி திறந்த நிலையில் இருக்கிறது. அந்த கதவின் இடை வழி பார்த்தால் கண்ணாடி அணிந்த ஒரு மனிதர் தனது இருக்கையில் இருந்தபடியே பேப்பர்களை புரட்டி பார்த்து கொண்டிருந்தார். அவரது கை விரல்கள் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்தன.

ஒவ்வொரு வருடமும் பருவமழை காலத்தில் காலை 6.50 ஆகிவிட்டால், தேர்வு பயத்திலும்  வீட்டுப்பாடங்களை முடிக்காமலும் தவிக்கும் மாணவர்களுக்கு, டிவி சேனல்களில் ரமணன் தோன்ற மாட்டாரா என்ற எதிர்பார்ப்புடன் கூடிய ஆர்வமே மிகுந்திருக்கும். சில நேரங்களில் ஆசிரியர்களுக்கும் கூட அந்த ஆர்வம் தொற்றிவிடுவதுண்டு.

“இன்னைக்கு ரமணன் என்ன  சொல்ல போகிறாரோ” என டிவி பெட்டிகளின் முன்னால் காத்திருந்து, ரமணனின் வானிலை அறிக்கையை கேட்பது வழக்கமாக இருந்தது. தனது மென்மையான, கவித்துவம் நிறைந்த தமிழில், அன்றைய நாளுக்கான வானிலை அறிக்கையை ரமணன் அறிவிப்பார்.

இதனை தொடர்ந்து ரமணன் பேஸ்புக்கிலும் பிரபலமானார். இவரை பற்றி உருவாக்கப்பட்ட “ஸ்டூடண்ட்ஸ் காட்” என்ற பெயரிலான இரு பேஸ்புக் பக்கங்கள் கிட்டத்தட்ட 50000 விருப்பங்களையும் தாண்டி உள்ளது. அவற்றில் ரெயின் ரமணன் (மழை ரமணன்) என்றும், சைக்ளோன் கிங் (புயல்களின் அரசன்) என்றும் அடைமொழி இட்டு இவரை பேஸ்புக்வாசிகள்  அழைக்கின்றனர்.

“நான் பேஸ்புக்கிலோ, டிவிட்டரிலோ இருப்பதில்லை. அவற்றில் எப்படிப்பட்ட  பதிவுகள் வருகிறது என்றெல்லாம் கூட நான் பார்ப்பதில்லை. எனது நண்பர்கள் சில நேரம் மீம்ஸ்களை எடுத்து காட்டுவார்கள்.அதை பார்த்து சிரிப்போம். அவ்வளவே”

பெரும்பாலான மீம்ஸ்கள் அவரை “வருணபகவானாக” என வர்ணித்து  ஒரு ரட்சகராக சித்தரித்தன. அவரது சில முன்னறிவிப்புகள் மீம்ஸ்களில் குறிப்பிடுவதை போன்றே முழுவதும் தவறாக கூட போயுள்ளன. சில நாட்களில் வானியல் துறை அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என அறிவிக்கும் போது, வெயில் வாட்டி எடுக்கும். “ வானிலை, முன்கூட்டியே சரியாக கணித்துவிடகூடியது அல்ல என்பதை நீங்கள் நிச்சயம் புரிந்து கொள்ள வேண்டும். சில அறிவிப்புகளில் குழப்பம் ஏற்பட்டுவிடுகின்றன. ஆனால் இங்கே நாங்கள் வெப்பமண்டல வானிலை ஆய்வு முறையை பின்பற்றுகிறோம். மற்ற நாடுகளின் ஆய்வு முறைகளிலிருந்து இம்முறை வேறுபட்டது. சரியான நேரத்தில் நாம் அந்த ஆய்வறிக்கையை பெறுகிறோம்” என்றார்.

1980 இல் ரமணன், இந்திய வானிலை ஆய்வு மையத்தில் வேலைக்கு சேருமுன், தனது முதுகலை பட்டபடிப்பை அண்ணாமலை பல்கலைகழகத்திலும், முனைவர் பட்டபடிப்பை சென்னை பல்கலைகழகத்திலும் பெற்றுள்ளார். வளிமண்டல இயற்பியலை பொறுத்தவரை அது உணர்ச்சிமயமானது என்கிறார் அவர்.

டெல்லியிலுள்ள வட அரைக்கோள ஆய்வு மையத்திலும், விமான போக்குவரத்து வானியல்துறை அலுவலகத்திலும் வேலைபார்த்து வந்த  போது , சென்னையிலுள்ள மண்டல புயல் எச்சரிக்கை மையத்தின் இயக்குனராக பணியாற்ற அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

10 நிமிட உரையாடல்களுக்கிடையில் 3 தொலைபேசி அழைப்புகளும், அவரை காண இரண்டு பார்வையாளர்களும் வந்து போயினர். மார்ச் 31 இல்  ஓய்வுபெறும் மழை மனிதர் ரமணன், தனது பணியின் கடைசி நாள்களில் சுழன்றடித்து வேலைபார்த்து கொண்டிருந்தார். தனது ஓய்வுக்கு பின், தபால் தலை மற்றும் பழைய நாணயங்கள் சேகரிப்பதில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார்.

“ நான் சந்திப்பதற்கு நிறைய நண்பர்கள் உள்ளனர்” என கூறும் அவர் தனது குடும்பத்தினருடன் அதிக நேரம், பயணங்களில் செலவழிக்க திட்டமிட்டுள்ளார். கூடவே, மாணவர்களுக்கு கற்று கொடுப்பதை பற்றியும் சிந்திப்பதாக கூறினார். மலை பிரதேசங்களில் அமைதியாக இருக்கும் சூழல் தொடர்ச்சியான ஊடக கவனங்களிலிருந்து ஒதுங்கியிருக்க உதவுவதாகவும் அவர் கூறுகிறார்.

தமிழ் இலக்கியத்திலும் அவருக்கு ஈடுபாடு உண்டு. தேவார பாடல்கள் பல நன்கு தெரிந்தவர். “நான் வானிலை முன்னறிவிப்பினை அறிவிக்கும்போது, தமிழ் பழமொழிகளை பயன்படுத்தி கொள்வது உண்டு. “சித்திரமும் கை பழக்கம், செந்தமிழும் நாவு பழக்கம்” என்பதை  நான் பேசும் போது எனது குறிக்கோளாக கடைபிடிக்கிறேன்” என்றார்.

கடந்த 2002 ஆம் ஆண்டு ரமணன், தனது துறையில் இந்த பதவிக்கான நேர்காணல் நடந்த போது, அவரிடமிருந்த தெளிவான தொடர்பு கொள்ளும் திறமை அவரது வாய்ப்பை உறுதிபடுத்தியது. “ எனது அதிகாரியாக இருந்த கேல்கர், என்னிடம் ,’ உனக்கென ஒரு இடம், எனது மனதில் உள்ளது என கூறினார். இப்போது நான் இங்கே இருக்கிறேன்.”  என்றார்.  தான் முதன்முதலாக கேமரா முன் தோன்றி வானிலை முன்னறிவிப்பினை கூறும் போதும், எப்போதும் போலிருக்கும் அதே உற்சாகத்துடன் எந்தவித பதட்டமுமின்றி அறிவித்ததாக கூறுகிறார்.

அவரது அறையில் இருந்த வரைபடங்களும், பத்திரிக்கை குறிப்புகளும் பழுப்பு நிறமேறியிருந்தன. தேவையற்ற பழைய அறிக்கைகளை கிழித்து ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்த குப்பை தொட்டியில் போட்டிருந்தார். அந்த முறை முழுவதும் சுத்தமாக இருந்தது. “ அடுத்து வருபவர் பொறுப்பை எடுக்கும் போது, இந்த இடத்தை சுத்தமாக வைத்திருக்க விரும்புகிறேன்” என கூறுகிறார். காலநிலை அறிவிப்பு கலையை போன்றே பொறுப்பை விட்டு செல்வதும் கூட ஒரு கலை தான் என்கிறார் ரமணன்.

Related Stories

No stories found.
The News Minute
www.thenewsminute.com