2002 இல் தொடரப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயேந்திர சரஸ்வதி உட்பட எட்டு பேரை நீதிமன்றம் விடுவித்தது.

Tamil Friday, April 29, 2016 - 16:09

ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட  வழக்கில், மாநகர நீதிமன்றம் ஒன்று காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி  சுவாமிகள் உட்பட எட்டு பேரை விடுதலை செய்தது. சங்கர மடத்தில் ஆடிட்டராக  வேலை பார்த்து வந்த ராதாகிருஷ்ணனும், அவரது மனைவி ஜெயஸ்ரீ மற்றும் உதவியாளர் கிருஷ்ணன் ஆகியோர் மந்தவெளியில் உள்ள அவர்களது வீட்டில் வைத்து கடந்த செப்டம்பர் 20, 2002 இல் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

தீர்ப்பு குறித்து அரசு வழக்கறிஞர் விஜயராஜ் கூறுகையில் “இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒரு நபர் அப்ரூவராக மாறிவிட்டார். இருவர் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே மரணமடைந்தனர். மீதமுள்ள எட்டு பேருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் எதுவும் இல்லாததால் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். நிச்ச்யமகா இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யப்படும். இந்த வழக்கு இத்துடன் முடிவடைய போவதில்லை” என்றார்.

கடந்த 2002 இல் போர்ஷோர் எஸ்டேட் போலீசார் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி, சுந்தரேச ஐயர்,ரகு, அப்பு என்ற கிருஷ்ணசாமி, கதிரவன், மீனாட்சிசுந்தரம், ஆனந்த் என்ற ஆனந்த குமார், லட்சுமணன், பூமிநாதன், கண்ணன்,சின்ன குமார் மற்றும் ரவி சுப்பிரமணியம் என 12 பேர் மீது இந்த வழக்கு தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.

இதனிடையே ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி நவம்பர் 11,2004 அன்று சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த தாக்குதல் சம்பவம் 2002 இல் நடந்தாலும், போர்ஷோர் எஸ்டேட் போலீசார் சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கையும்  தீவிரமாக விசாரிக்க துவங்கினர்.

இந்த வழக்கில் தொடர்புடைய 5 சாட்சிகளை விசாரிக்க கோர்ட் சம்மன் அனுப்பியும் அவர்கள் ஆஜராகாததால், புதிதாக மீண்டுமொரு சம்மன் அனுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து  10 ஆண்டுகள் நடந்த சட்ட போராட்டத்திற்கு பின், இது தொடர்பான விசாரணை 2012 இல் துவங்கியது. அதன் பின்னர் குறுகிய காலத்தில் இந்த வழக்கு எண்ணற்ற திருப்புமுனையை சந்தித்தது.

இதனை தொடர்ந்து இறுதி விவாதம் ஏப்ரல் 5 அன்று துவங்கியது. இதனையடுத்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.ஜெயேந்திரர் சார்பில் வழக்கறிஞர்கள் வெங்கட்ராமன் மற்றும் சுப்பிரமணியம் ஆகியோர் ஆஜராயினர்.

Show us some love and support our journalism by becoming a TNM Member - Click here.