இருமுறை இடைக்கால முதல்வராக இருந்த பன்னீர்செல்வத்திற்கு கட்சியில் இப்போதைய நிலைமைகள் சாதகமாக இல்லை

news TN2016 Tuesday, March 15, 2016 - 20:48

கடந்த செப்டம்பர் 2014 இல் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பு கூறப்பட்டு ஜெயிலுக்கு சென்ற போது, அதிமுகவின் முக்கிய பொறுப்புகளை அடுத்து ஏற்க போவது யார் என்ற சந்தேகம் எவருக்குமே ஏற்படவில்லை. 2001 ஆம் ஆண்டு இடைக்கால முதல்வராக இருந்த அதே ஓ.பன்னீர்செல்வத்தின் விசுவாசத்தை சந்தேகப்படாமல் மீண்டும் முதலமைச்சராக நியமித்தார் ஜெயலலிதா.

ஆனால், செப்டம்பர் 2014 இல் இருந்த நிலைமைகளில் கடுமையான மாற்றம் ஏற்பட்டு மார்ச் 2016 இல் ஓபிஎஸ் ஓரங்கட்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இன்னும் சொல்லபோனால், ஜெயலலிதா தலைமையில் கூடிய இரு முக்கிய கூட்டங்களில்,ஓபிஎஸ் அழைக்கப்படாதது, நிலைமை அவருக்கு சாதகமாக இல்லை என்பதை குறிப்பிட்டு காட்டுகிறது. மார்ச் முதல் வாரத்தில், ஜெயலலிதா, போட்டியிடுபவர்களுக்கான நேர்காணல் நடத்திய போது, ஓபிஸ் கலந்து கொள்ளவில்லை. மாறாக,கட்சியின் மூன்று சீனியர்  தலைவர்கள், அதாவது  அவை தலைவர் மதுசூதனனும், நிர்வாக குழு உறுப்பினர் தமிழ்மகன் உசேனும், கட்சியின் சிறுபான்மை குழுவின் ஜஸ்டின் செல்வராஜும் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள  கேட்டுகொள்ளப்பட்டனர்.

அதன்பிறகு, ஜெயலலிதா, 7 கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்த போது அப்போதும் ஓபிஎஸின் தலை தென்படவே இல்லை. அவர் எங்கே தான் போய்விட்டார் என கேட்டால், “கட்சி வேலைகளில ரொம்ப பிசியா இருக்காரு” என பதில் கூறப்பட்டது.

கடந்த சிலதினங்களாக, ஓபிஎஸ்எஸின், சொந்த மாவட்டமான தேனி உட்பட கரூர், சென்னை,காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள  ஒபிஎஸ்எஸுக்கு நெருக்கமான மாவட்ட செயலாளர்கள் பொறுப்புகளிலிருந்து கழட்டிவிடப்பட்டுள்ளார்கள். கூடவே, ஓபிஎஸுக்கு விசுவாசமான நத்தம் விஸ்வநாதனுக்கு நெருக்கமான மாவட்ட செயலாளர்களும் பதவியிலிருந்து அகற்றப்பட்டுள்ளனர்.

பெயர் கூற விரும்பாத ஒரு அதிமுக பிரமுகர் “ கீழ்மட்ட ஊழியர்கள் பலரும் கூட தங்கள் பொறுப்புகளிலிருந்து அகற்றப்படலாம் என நாங்கள் கேள்விபட்டோம்.” என்றார்.

எப்போது தான் ஓபிஎஸுக்கு பிரச்சினை துவங்கியது ?

சிலர் இந்த பிரச்சினைகள் செப்டம்பர் 2014 முதலே தலைதூக்க துவங்கிவிட்டன என கூற, வேறு சிலரோ இவைகள் சமீபத்திய பிரச்சினைகள் என கூறுகின்றனர். ”கட்சியில்,தன்னை வலுமிக்கவராக மாற்றி கொள்ள முயன்றார். ஜெயலலிதா, ஜெயிலிலிருந்து வெளி வந்த பின்னரும், முதலமைச்சராக மீண்டும் பதவியேற்ற பின்னரும் கூட அதற்கான முயற்சிகளை தொடர்ந்தார்.” என தென் மாவட்டத்திலிருந்த தலைவர் ஒருவர் கூறினார்.

“கடந்த வருடம் நடந்த உள்கட்சி தேர்தலில் ஓபிஎசை  ஒரு மண்டலத்திற்கு  பொறுப்பாக போட்டார்கள். ஆனால், அந்த மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில், உள்ள உள்ளூர் தலைவர்களிடம் அவர் இறுக்கமாக நடந்து கொண்டதாக தெரிகிறது. ஏற்கனவே அவருக்கென கணிசமான செல்வாக்கை வேறு சில பகுதிகளில் உருவாக்கியுள்ளார். ஆனால், இது வெறும் கோஷ்டி உருவாக்கும் பிரச்சினை அல்ல. அவர் எடுத்த முடிவுகளும் ‘டீல்’களையும் ஜெயலலிதா ரசிக்கவில்லை என்று கட்சிக்குள்ளேயே பேச்சு இருக்கிறது. தவிர, சசிகலாவுக்கும் அவர்மேல் வருத்தம்’ என்கிறது அதிமுக வட்டாரம்.

அனைவரையும் ஒரு குழுவாக சேர்க்கும் ஓபிஎஸ்எஸின் முயற்சிகள், போயஸ் கார்டனுக்கு ஒரு அபாய எச்சரிக்கையாக தெரிந்துள்ளது. எப்படியிருப்பினும், ஜெயலலிதா தனது நெருங்கியவர்களிடமிருந்து, தூர விலகி இருப்பது இது முதல் முறையல்ல.

கடந்த 2011 இல், சசிகலாவின் உறவினர்,அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டில் 30 ஆண்டுகளாக ஜெயலாலிதாவின் கூட இருந்த சசிகலா வீட்டை விட்டு வெளியேறும்படி கேட்டு கொள்ளப்பட்டார். அதனை தொடர்ந்து, சசிகலா மன்னிப்பு கேட்ட பின், மீண்டும் கட்சியிலும், வீட்டிலும் சேர்த்து கொள்ளப்பட்டார். அதன் பின், முன்னர் இருந்ததை விட கூடுதலாக அதிகாரமிக்கவராக இருக்கிறார்.

சசிகலாவை போன்றே, ஓபிஎஸ்எஸும், மீண்டும் தனது இடத்தை பற்றி பிடிப்பாரா ? அல்லது நம்பிக்கைக்குரிய லெப்டினன்ட்டாக வலம் வந்த ஓபிஎஸ்எஸின் நாட்கள் முடிந்ததா ? அதிமுக வட்டாரத்தின் தகவலை நம்புவதாக இருந்தால், ஓபிஎஸ், 2016 சட்டமன்ற தேர்தலில், பெரிய பிரச்சினையாக உருவெடுக்கமாட்டார்.

Become a TNM Member for just Rs 999!
You can also support us with a one-time payment.