தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் தொழிற்சங்கம் அமைப்பது குறித்த ஒரு மனுவை பரிசீலித்த தமிழக அரசு, அதற்கு அனுமதியளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின் இத்தகைய நடவடிக்கை, பலருக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை எரிச்சலடைய செய்துள்ளது.
அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்க ஒன்று என ஐ.டி கம்பெனிகளின் தொழிலாளர்களும், தொழிற்சங்கங்களும் வரவேற்றுள்ள நிலையில், கம்பெனிகளின் நிர்வாகத்தினர் தரப்பில் அதிக அளவில் வரவேற்பில்லை.
ஐ.டி நிறுவன ஊழியர்களின் குறைகளை போக்க வசதியாக அவர்களுக்கு சங்கம் அமைக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்று புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி என்ற தொழிற்சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை மனுவினை அளித்திருந்தனர்.
சமீபத்தில் 15௦௦ பொறியியல் பட்டதாரிகள் எல் அன்ட் டி நிறுவனத்தால் வேலைக்கு எடுக்கப்பட்டு, பின்னர் அந்த நியமனத்தை ரத்து செய்துள்ளதாக கூறி ஏமாற்றப்பட்டனர். இத்தகைய சூழலில் சங்கத்தின் தேவை எழுந்து வருவதாக ஐ.டி நிறுவனங்களின் ஊழியர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து, ஐ.டி.யூனியன் ஒன்றின் பொதுச்செயலாளர் கார்த்திக் சேகர் நியுஸ்மினிட்டிடம் கூறுகையில், “ சங்கமாக செயல்படுவதால் நாங்கள் கடந்த காலங்களில் சில நன்மைகளை பெற முடிந்தது. ஆனால் சங்கங்களுக்கு அங்கீகாரம் கொடுப்பதில்லை.” என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், தமிழ்நாடு அரசு சங்கத்தின் தேவையை தற்போது புரிந்து கொண்டாலும், நாஸ்காம் மற்றும் கம்பெனிகள் அதன் தேவையை இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்றார்.
மேலும், ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் ஐ.டி கம்பெனிகளில் தொழிற் சங்கங்களுக்கு அங்கீகாரம் அளித்திருப்பதுடன், ஊழியர்கள் தொடர்பான முக்கிய முடிவுகளை அந்த சங்கங்களுடன் கலந்து பேசியே கம்பெனிகள் முடிவு எடுப்பதாக சுட்டிக்காட்டினார்.
கடந்த பத்து வருடங்களாக தனது தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்து அவரிடம் கேட்ட போது, “ நாங்கள் சில குறிப்பிட்ட பிரச்சனைகளை கையிலெடுத்து அவற்றை தீர்ப்பதற்கான முயற்சியை மேற்கொள்ளும் போது, நிர்வாகத்தினர் தரப்பில் அதற்கு ஒத்துழைப்பதில்லை. அத்தகைய சூழல்களில், நாங்கள் கோர்ட்டின் உதவியை நாடுவது வழக்கம். சில நேரங்களில் யுஎன்ஐ எனப்படும் சர்வதேச அமைப்பிடம் தொடர்பு கொண்டு உதவி கோருவோம். அவர்களும் கம்பெனியின் தலைமை அலுவலகத்தில் பேசி பிரச்சினையை தீர்க்க உதவியுள்ளனர். யுஎன்ஐ என்பது ஐரோப்பாவில் இருக்கும் உலகளாவிய சங்கமாக உள்ளது. நாங்களும் அந்த அமைப்புடன் எங்களை இணைத்துள்ளோம்” என்றார்.
இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் குழு உறுப்பினரான மோகன்தாஸ் பாய் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் தொழிற்சங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். “ மென்பொருள் நிறுவன ஊழியர்களின் வாய்ப்புகள் நன்றாகவே உள்ளன. அவர்கள் அடிக்கடி தங்கள் வேலையை மாற்றி கொள்ளவும் செய்கின்றனர். அவர்கள் ஏதேனும் தொழிற்சங்கத்தில் இருப்பதாக இருந்தால், அவர்களுக்கு எவரும் வேலை தரமாட்டார்கள். எனவே, சங்கம் அமைப்பது ஒரு மோசமான ஆலோசனை. எதிர்காலம் எதுவும் இல்லாதவர்கள் தான் சங்கம் அமைப்பதை பற்றி சிந்திப்பார்கள்” என்றார் அவர்.
பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஊழியர் சங்கங்கள் தற்போது இல்லை. முன்னணி ஐ.டி கம்பெனி ஒன்றின் மனித வள பிரிவு மேலாளர் ஒருவர் கூறுகையில், தங்கள் கம்பெனியில் சங்கம் அமைப்பதற்கு பதில், ஒரு வணிக பார்ட்னரும், ஊழியர் பார்ட்னர் ஒருவரும் உள்ளனர் என்றும் அவர்கள் இருவருமே மனித வள பிரிவில் இணைந்து பணியாற்றுகின்றனர் என்றும் கூறினார். ஆனால், முடிவுகள் எடுக்கும் போது, அவர்கள் இருவரும் கம்பெனிக்கு ஆதரவாக நிற்பதுடன் ஊழியர்களை கம்பெனி முடிவுக்கு ஆதரவாக செயல்பட வைக்கின்றனர். மேலும் ஊழியர் சங்கம் அமைப்பது ஒரு நல்ல யோசனையாக இருக்கும் எனவும், அதன் மூலம் ஊழியர்களின் குறைகளை களைய முடியும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.
சென்னையை சேர்ந்த ஒரு ஐ.டி நிறுவன ஊழியர் ஒருவர் கூறுகையில், “ ஐ.டி கம்பெனிகளில் வேலை செய்யும் சூழல் மிகவும் போட்டி நிறைந்தது. எல்லா ஊழியர்களும் தங்கள் மேலாளரிடம் நன்மதிப்பை பெற முயல்கின்றனர். அப்படிப்பட்ட சூழலில் எவர் ஒருவரும் கம்பெனிக்கு எதிராக செயல்படவோ அல்லது சங்கம் சேரவோ விரும்புவதில்லை” என்றார்.
மேலும் அவர், “ கடந்த வருடம் டிசிஎஸ் மற்றும் ஐபிஎம்மில் பலரை வேலையை விட்டு நீக்கிய போது, சங்கங்கள் அமைக்கப்பட்டன. பொதுவாக, கம்பெனிகளில் எந்த சங்கங்களும் இருப்பதில்லை. கம்பெனிகள் தங்கள் ஊழியர்களை சரியான விதிமுறைகள் படி தான் பணிக்கமர்த்துகின்றனவா என்பதை கண்காணிக்க ஒரு அமைப்பு தேவை” என்றார் அவர் .