கடந்த மூன்று ஆண்டுகளில் 81 ஆணவ கொலைகள் தமிழகத்தில் நடந்துள்ளன

Vernacular Tamil Nadu Friday, March 18, 2016 - 12:12

சங்கர் படுகொலை செய்யப்பட்டு மூன்று நாட்கள் கழிந்துள்ள நிலையில், தேசிய எஸ்சி ஆணையத்தின் குழு ஒன்று, புதன்கிழமையன்று விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க சிபாரிசு செய்வதாக உறுதியளித்துள்ளனர்.

இந்த குழுவானது, விசாரணை அறிக்கையை, டெல்லியில் உள்ள தேசிய எஸ்சி ஆணையத்தின் தலைமையகத்திற்கு அனுப்பி, தக்க நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்ளும். இருப்பினும், இந்த ஆணையத்தின் உத்தரவுகள் நடைமுறைபடுத்துவதற்கான வாய்ப்புகள் மிகவும் அரிது என, சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

திராவிட சமூக நீதி இயக்கங்கள், தீவிரமாக செயல்பட்டு வந்துள்ள தமிழகத்தில், உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் கூட மாநில எஸ்சி  ஆணையம் இல்லாதது வெட்கப்பட வேண்டிய விஷயம் என தலித் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக பல தலித் கொலைகள் தமிழகத்தில் நடந்துள்ள நிலையில், சங்கர் கொலையும் அவற்றில் ஒன்றாக உருவாகியுள்ளது. இதற்கு முன், கோகுல்ராஜ் மற்றும் இளவரசன் சம்பவங்கள் நடந்துள்ளன.

கடந்த ஜூலை 2015 இல், கோகுல்ராஜ் கொலை நடந்த போதே, தேசிய எஸ்சி  நல ஆணையம், தலித்கள் மீதான வன்முறையை தடுக்க சில பரிந்துரைகளை தமிழக அரசிற்கு அளித்திருந்தது.ஆனாலும் சூழல்கள் மாறியதாக இல்லை.

“ தலித்களுக்கு எதிரான வன்முறை நடக்கும் மாநிலங்களில், தமிழ்நாடு முதல் 5 இடங்களில் இருக்கும் மாநிலங்களில் ஒன்று. காவல்துறை நிர்வாகம், இந்த வன்முறைகளை தடுக்க தக்க முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என ஆணையம் அந்த பரிந்துரைகளில் தமிழக அரசிடம் கூறியிருந்தது.

மேலும் அது, “ தமிழகத்தில் தலித்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளுக்கு, குற்றவாளிகள் தண்டிக்கப்படும் விகிதம் வெறும் 10 சதவீதமாகவே உள்ளது. இது தேசிய அளவிலான சராசரி 30 சதவீதத்தை விட குறைவாகவே உள்ளது. தமிழக அரசு, குற்றவாளிகளுக்கு, தகுந்த தண்டனை கிடைத்து, தண்டனைக்கான விகிதம் கூடுவதற்கு, போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்தில், எஸ்சி  ஆணையம் இல்லாத போதும், ஆதிதிராவிடர் நலத்துறை என்ற அரசு துறை உள்ளது. தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில தலைவர் சம்பத் நியூஸ் மினிட்டிடம் கூறுகையில்,” ஆதி திராவிடர் நலத்துறையின் செயல்பாடு மிகவும் மோசமாக உள்ளது. இந்த மாநிலத்தில், தனியாக ஒரு எஸ்சி  ஆணையம் இல்லை.” என்றார்.

“ எஸ்சி  ஆணையம், மத்திய அரசால் உருவாக்கப்பட்ட பழமையான ஆணையம். தமிழ்நாட்டில் இப்படி ஒரு ஆணையத்தை உருவாக்க அரசு தயங்கிகொண்டிருக்கிறது. ஆனால் மற்ற ஆணையங்களை எல்லாம் அரசு உருவாக்கி வைத்துள்ளது. “ என கூறுகிறார் விடுதலை சிறுத்தைகளின் பொதுசெயலாளர் டி.ரவிக்குமார். இவர் இந்த பிரச்சினையை எம்.எல்.ஏ வாக இருக்கும் போது சட்டமன்றத்தில் எழுப்பவும் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியை பொறுத்தவரை, சுயமாக செயல்பட கூடிய, ஒரு எஸ்சி  ஆணையம் தமிழகத்திற்கு வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளது. “ அதற்கு சுயமான அதிகாரங்களுடன், நீதித்துறை அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும்.இது எங்கள் கோரிக்கை. நாங்கள் அதற்காக போராடி கொண்டிருக்கிறோம். “ என்றார் சம்பத்.

தினசரி, தலித்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது என கூறும் சம்பத், எங்கள் கணக்கெடுப்பு படி 87 வகையான தீண்டாமைகளில் 28 வகையான தீண்டாமை இன்றும் தமிழகத்தில் நிலவி வருகிறது எனவும் கிட்டத்தட்ட எல்லா கிராமங்களிலும் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன என்றும்  கூறுகிறார் அவர்.

மேலும், ஆணவ கொலைகள் மாநிலத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளன.” கடந்த மூன்று ஆண்டுகளில் 81 ஆணவ கொலைகள் தமிழகம் முழுவதும் நடந்துள்ளன.கடந்த சில மாதங்களில் மட்டும் கோகுல்ராஜ், இளவரசன் மற்றும் சங்கர் கொலைகள் நடந்துள்ளன.” என்றார் சம்பத்.

கடந்த 2014 இல் சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசிடம் எஸ்சி  ஆணையத்தை உருவாக்கும்படி கூறியது. ஆனால் தமிழக அரசு அதனை பின்பற்றவில்லை.

தேசிய எஸ்சி ஆணைய கணக்குப்படி, தமிழகத்தில் 20 சதவீதம் எஸ்சி மக்கள் வசித்து வருகின்றனர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தென்சென்னை மாவட்ட தலைவர் லெனின் ராஜா இந்த அளவு மக்கள் தொகை எண்ணிக்கைக்கு நிச்சயம், மாநில எஸ்சி  ஆணையம் தேவை என்கிறார். “ தொடர்ந்து பலகட்ட விவாதங்களுக்கு பின்னரும் கூட இப்படி ஒரு ஆணையத்தை உருவாக்க தமிழக அரசு தயாராக இல்லை. சட்டமன்றத்தில் இதை பற்றி பேசும் போதெல்லாம் அவர்கள் நலத்திட்டங்களை பற்றி பேசுகிறார்கள். ஆனால் தமிழகத்தில் நிலவும் ஆணவ கொலைகளை பற்றி பிரச்சினை எழுப்பும்போது, நிதியமைச்சர், பன்னீர்செல்வம் ஆணவ கொலைகள் தமிழகத்தில் இல்லை என கூறுகிறார்.

“தேசிய எஸ்சி ஆணையம் நிறைவேற்றப்படாத காலியிடங்களையும் சுட்டி காட்டுகிறது. இடஒதுக்கீட்டு முறையில் நிரப்பபடாத காலியிடங்களை பற்றி கேட்டால், எஸ்எஸ்டி பிரிவில் தகுதியான எவரும் இல்லாததால் அந்த பணியிடங்களை நிரப்பாமல் போட்டிருப்பதாக கூறுகின்றனர்.” என்கிறார் லெனின். மேலும் அவர் “ இது போன்ற விஷயங்களை கண்காணித்து தக்க நடவடிக்கை எடுக்க, ஆணையம் தேவை. அந்த ஆணையத்திற்கு இந்த பிரச்சினைகளில் தலையிட்டு, குற்றவாளிகளை தண்டிக்கும் அதிகாரமும் கொடுக்கப்பட வேண்டும்” என்றார்

Show us some love and support our journalism by becoming a TNM Member - Click here.