தனது 7 மாத சிறை வாழ்க்கைக்கு பின் கோகுல்ராஜ் கொலையின் முக்கிய குற்றவாளி யுவராஜிற்கு நேற்று ஜாமீன் கிடைத்துள்ளது.

 Image: Yuvaraj/ Puthaiya Thalaimurai
Tamil Friday, May 27, 2016 - 17:49
Written by  Pheba Mathew

நேற்றையதினம் கோகுல்ராஜ் கொலையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் யுவராஜிற்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து கடந்த 7 மாத ஜெயிலிலிருந்த யுவராஜ், ஜெயிலிலிருந்து வெளிவரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 11, 2015 இல் இந்த கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முக்கிய குற்றவாளியான யுவராஜ் போலீசின் முன் சரணடைந்தார். அதனை தொடர்ந்தே அவரது ஜெயில் வாழ்க்கை துவங்கியது.

இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வெளிவந்த உடனேயே, யுவராஜிற்கு ஜாமீன் கிடைத்ததற்கு ஏதேனும் தொடர்பு உள்ளதா ? என்ற கேள்வி பலரிடம் எழுந்துள்ளது.

இதுகுறித்து கோகுல் ராஜின் சகோதரர் கலைச்செல்வன் கூறுகையில், “ இவை அனைத்துமே பணத்தின் வலிமையாலும், செல்வாக்காலும் நடப்பவை. வேறு என்ன இதில் சொல்லுவதற்கு உள்ளது ? “ என சற்று ஏமாற்ற தொனியில் கூறினார் அவர்.

இருப்பினும், யுவராஜின் ஜாமீன் சமூக செயற்பாட்டாளர்களை ஆச்சரியப்படுத்தவில்லை. இது குறித்து மூத்த பத்திரிக்கையாளர் கவிதா முரளிதரன் அரசு கவுண்டர் சமூகத்தினரை விரோதித்து கொள்ள ஒருபோதும் விரும்பவில்லை என கூறினார். “ அவர்கள் திட்டமிட்டே தான் யுவராஜின் ஜாமீன் மனுவை தேர்தலுக்கு பின் கொண்டு வந்துள்ளனர்.” என கூறுகிறார் அவர். மேலும் இதுபோன்றே வழக்குகளில் ஜாமீன் வழங்குவது மோசமான ஒன்று எனவும் கூறினார். “ யுவராஜ், ஜெயிலில் இருந்தபடியே தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தவும், சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கவும் செய்திருக்க கூடும். ஆனால், தமிழகத்தில் உள்ள தலித் மக்களுக்கு இது ஒரு மோசமான குறியீடு” என்றார் அவர்.

2016 சட்டமன்ற தேர்தலில் கொங்கு பிரதேசங்களில் அதிமுக தனது வலிமையை நிரூபித்தது. கவுண்டர் சமுதாயத்தினர் இந்த பகுதியில் பாரம்பரியமாக அதிமுகவுக்கு வாக்களிப்பவர்களாக உள்ளனர். இந்த பகுதியில் உள்ள 55 சீட்களில் அதிமுக 46 சீட்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெவலப்மென்ட் ஸ்டடீஸின் இணை பேராசிரியரான லக்ஷ்மணன் இந்த முடிவில்  அரசியல் தலையீடு இருக்க கூடும் என்கிறார். “ தமிழகத்தில், அரசு இயந்திரங்கள் அனைத்துமே தலித்துகளுக்கு எதிரான ஜாதீய சக்திகளின் கையில் உள்ளது. எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஜாமீன் பெற இயலாத குற்றத்தை செய்த குற்றவாளி ஒருவர் எப்படி வழக்கில் ஜாமீனை பெற முடிந்தது ? “ என கேட்கிறார் அவர்.

மேலும் அவர், “ தலித்கள் விவகாரத்தில் ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் ஒரே மாதிரியாக நடந்து கொள்வது கவலையளிப்பதாக உள்ளது “ என அவர் கூறினார்.

கடந்த மூன்று வருடங்களில் 80 ஆணவ படுகொலைகள் பதிவாகியுள்ளதை கூறும் கவிதா முரளிதரன், நாளுக்கு நாள் தலித்துகளுக்கு எதிரான தாக்குதல் அதிகரித்து வருவதை குறிப்பிட்டு கூறினார்.

கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த பெண் ஒருவருடன் பேசி கொண்டிருந்ததாக கோகுல் ராஜ் என்ற தலித் இளைஞர் கொல்லப்பட்டதற்கு முக்கிய குற்றவாளியாக யுவராஜ் உள்ளார். தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் தலைவரான இவரது ஜாமீன் மனுவை, கடந்த ஜனவரியில் நாமக்கல் முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.