தமிழ் தலித் எழுத்தாளர் துரைகுணா (35) புதுக்கோட்டை மாவட்டம் குழந்தரம்பட்டு கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வெள்ளிக்கிழமை காலை 5.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவரது வீட்டின் அருகில் வசிப்பவர்கள், துரை குணா தனது வீட்டில் காலையில் தூங்கி கொண்டிருந்ததாகவும், தூக்கத்தில் இருந்த அவரை போலீசார் தட்டி எழுப்பி, இழுத்து சென்று போலீஸ் வேனில் ஏற்றியதாகவும் கூறுகின்றனர்.
உடனடியாக, காலை 5 மணிக்கே எழும்பி வீட்டு வேலைகளை செய்ய வெளியே சென்ற அவரது மனைவி கோகிலாவிடம் (32) அக்கம்பக்கத்தினர் குணா கைது செய்யப்பட்ட விவரத்தினை கூறியுள்ளனர்.
“அவர் சட்டை போடுவதற்கு கூட போலீசார் அனுமதிக்கவில்லை. அவர் போலீசாரிடம் சட்டை போடுவதற்கு நேரம் கொடுங்கள் என கேட்ட பிறகும் போலீசார் அனுமதிக்காமல் இழுத்து சென்றதாக வீட்டின் அருகில் வசிப்போர் என்னிடம் கூறினர்.” என கூறுகிறார் கோகிலா. மேலும், கைது செய்யப்படும் போது எந்த வாரண்டும் காண்பிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
துரை குணா எழுதிய ‘ஊரார் வரைந்த ஓவியம்’ என்ற நாவல் தீண்டாமையை குறித்து எழுதப்பட்டிருந்தது. இது அப்பகுதியில் உள்ள உயர்சாதியினரை ஆத்திரமடைய செய்ததுடன், அவர் மீது பல வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.
இதனிடையே, இந்த கைது நடவடிக்கை புத்தகம் எழுதியதற்கான தண்டனை தான் என அவரது மனைவி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் கோகிலா கூறுகையில், தான் கரம்பக்குடி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றதாகவும், அங்கு ஆய்வாளராக இருந்த சகாயம் அன்பரசன் தனது கணவரை பார்க்க அனுமதி மறுத்ததாகவும் கூறினார். மேலும் கைது நடவடிக்கை ஒரு கொலை முயற்சி வழக்குக்காக என அந்த ஆய்வாளர் கூறியதாகவும் கூறினார் கோகிலா.
கூடவே, போலீசார் துரை குணா ஒருவரை கத்தியால் குத்திவிட்டதாகவும், காயம்பட்டவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகவும் கூறியுள்ளனர். ஆனால் பாதிக்கப்பட்டவரை பற்றியோ அல்லது அவர் எந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார் என்பதை பற்றியோ கூற மறுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, துரை அவரது நண்பர் ஒருவருடன் சேர்ந்து கடன் வைத்திருந்த ஒருவரை தாக்கியதாக கூறியுள்ளார்.
“ நான் அவரிடம், எனது கணவரிடம் ஒரு வார்த்தை பேச அனுமதி கொடுங்கள் என்று பலமுறை கெஞ்சினேன். அதை அவர் மறுத்த போது, கைதுக்கான வாரண்டை காண்பிக்க சொன்னேன். உடனே “ நீ அதிகம் பேசுகிறாய்.” “இங்கே இதெல்லாம் பேச கூடாது” என்றெல்லாம் மிரட்டினார். “ என கூறினார் கோகிலா.
மேலும் அவர் தனது கணவர் முழு நேரமாக எழுத துவங்கிய பின் தேவையில்லாமல் வெளியே போகமாட்டார் எனவும், பெரும்பாலும் 24 மணி நேரமும் அவர் வீட்டிலேயே இருக்க கூடியவர் என்றும் அவர் கூறினார். இந்த குற்றச்சாட்டை பொய்யாக அவர் மீது சுமத்துகின்றனர் எனவும் கோகிலா கூறினார்.
“இந்த கைது நடவடிக்கை, ஆய்வாளர் தன்னை தற்காத்து கொள்வதற்காக செய்வது தான் என தான் சந்தேகிக்கிறேன். கடந்த 2 வருடங்களாக நாங்கள் கொடுத்த புகார் மனுக்களை கண்டு கொள்ளாமல் இருந்தார்.” என கூறினார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம், துரை குணாவின் தந்தை தாக்கப்பட்டதை விசாரிக்க ஆய்வாளருக்கு உத்தரவிட்டிருந்தது. துரை குணாவின் குடும்பத்தினர், அவர் அந்த நூலை வெளியிட்ட ஜூலை 2014 முதல் மிரட்டல்களை சந்தித்து வருகின்றனர்.
துரை குணா எழுதிய ஊரார் வரைந்த ஓவியம் நாவலானது, சங்கர் என்ற தலித் விவசாய தொழிலாளி உயர்சாதியினரால் எதிர்கொள்ளும் தீண்டாமையை குறித்து கூறுகிறது. இந்த நாவல் அவர் எழுதியது முதல் துரை குணா, பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருவதுடன் தனது சொந்த சமூகத்தினரிடமும் எதிர்ப்பை சந்தித்து வருகிறார். இந்த நாவலை தொடர்பாக 8 வழக்குகள் இவர் மீது நிலுவையில் உள்ளது.
“எனது கணவர் அருகில் உள்ள காட்டுவிடுவி கிராமத்தை சேர்ந்தவர். அவரது குடும்பத்தினர் இந்த கிராமத்திற்கு குடிபெயர்ந்து 30 ஆண்டுகள் ஆகின்றன. இப்போதும் எங்களை வெளியாட்களை போன்று தான் பார்க்கிறார்கள். எங்கள் சொந்த சமூகத்தினர் கூட எங்களை நம்பவில்லை. அப்படியிருக்க மற்றவர்களிடமிருந்து எத்தகைய உதவியை நாங்கள் எதிர்பார்க்க முடியும் ? “ என கேட்கிறார் கோகிலா.