நான் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசு. அதற்காக போராடவும் தயார் : தீபா ஜெயக்குமார்.

இந்த திடீர் வருகை குறித்து நியூஸ் மினிட் சார்பில் கேட்ட போது, தான் திடீரென வரவில்லை எனக் கூறி மறுத்தார் தீபா.
  நான் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசு. அதற்காக  போராடவும் தயார் : தீபா ஜெயக்குமார்.
நான் ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசு. அதற்காக போராடவும் தயார் : தீபா ஜெயக்குமார்.
Written by:

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா இறப்பதற்கு முன் அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்களாக சிகிச்சையிலிருந்த போது, மருத்துவமனையின் வெளியே இருந்த ஊடகத்தினரால் அதிகம் கவனிக்கப்பட்டவர் தீபா ஜெயக்குமார். ஜெயலலிதாவின் அண்ணன் மகளான இவர், தனது அத்தையை பார்க்க பலமுறை முயன்றும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

தனது அத்தையான ஜெயலலிதாவை, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையின் போது பார்க்கவும், அதன் பின் அவர் இறந்த பின்னர் போயஸ் தோட்டத்தில் உள்ள வீட்டில் அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு செய்யவும், தன்னை அனுமதிக்கவில்லை என ஊடகத்தினரிடையே எந்தவித தயக்கவுமின்றி வெளிப்படையாகவே கூறி வந்தார் இவர்.

42 வயதான தீபா, இங்கிலாந்தில் உள்ள கார்டிப் பல்கலைகழகத்தில்  சர்வதேச ஊடகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தற்போது சென்னையில் உள்ள தி.நகரில் வசித்து வருகிறார்.

ஜெயலலிதாவின் உடல் அடக்கத்தின் போது, அவரது சகோதரர் தீபக் சசிகலாவுடன் சேர்ந்து இறுதிச் சடங்குகள் செய்த நிலையிலும் கூட, தீபா கடந்த சில வாரங்களாகவே சசிகலாவை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இது அவர்களது குடும்பத்தில் பிரிவினையை காட்டுகிறதா ?  ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கான வாரிசாக தன்னை  அவர் முன்னிறுத்துவதன் பின்னணி என்ன ?  தீபா, தனது அத்தையான ஜெயலலிதாவின் சாயலை ஒத்திருப்பதை பலர் கவனித்துள்ளனர். இந்நிலையில் அவரை அதிமுகவிற்கு  தலைமையேற்க ஊக்குவிக்கப்படுவதன் காரணம் என்ன?

இந்த கேள்விகள் குறித்து  நியூஸ் மினிட் சார்பில் அவரிடம் பேசினோம்.

சசிகலா கட்சியின் பொறுப்பை ஏற்றெடுப்பார் என்பதற்கான எல்லாவித அறிகுறிகளும் தென்படுகின்றன. இதனை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் ?

அதிமுக மக்களின் கட்சி. அது ஒரு ஜனநாயக முறைப்படியான அமைப்பு. எவரும் கட்சியின் பொறுப்பை எடுத்துக் கொண்டுவிட முடியாது. அவ்வாறு பொறுப்பை எடுப்பவர் கட்சியில் தேர்தலின் மூலமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். சசிகலாவோ அல்லது மற்றொருவரோ கூட தேர்தலில் வெற்றி பெறாமல் கட்சிப் பதவியை கைப்பற்றினால் அவர்கள் உண்மையான தலைவர்களாக ஒருபோதும் இருக்கமாட்டர்கள்.

உங்கள் சகோதரர் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலத்தில் சசிகலாவுடனேயே இருந்தார். உங்கள் இருவருக்குமிடையில் ஏதேனும் கருத்து வேறுபாடு உண்டா ?

அங்கு அவர் போவதற்கான காரணம் எனக்கு என்னவென தெரியவில்லை. எங்கள் இருவருக்குமிடையே எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் நாங்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவர்கள். அவர்கள் விவகாரத்தில் அவர் அமைதியாக இருந்து விடுவார். நான் அப்படியில்லை. அவர்கள் கூறுவதை செய்ய அவர் தயாராக இருப்பார். ஆனால் நான் அப்படியில்லை. நான் அவர்கள் கூறுவதை காது கொடுத்து கேட்பதில்லை. அவர்களிடையே அவரை பார்த்தது மிகவும் வருத்தமாக இருந்தது.

ஆனால் ஜெயலலிதாவின் உடலுக்கு மரியாதை செலுத்த நீங்கள் அனுமதிக்கப்பட்டீர்கள். அது எப்படி நடந்தது ?

நள்ளிரவில் நான் போயஸ் கார்டனுக்கு சென்றேன். அங்கு நான் 8 மணி நேரம் காத்திருந்தேன். எனது அத்தையை பார்க்க  நான் அவர்களிடம் கெஞ்சினேன்.  கடைசியாக ஒருமுறை அத்தையை பார்த்துவிட்டு நான் கடந்து சென்றுவிடுவேன் என அவர்களிடம் கூறினேன். ஆனாலும், அவர்கள் என்னை உள்ளே அனுமதிக்கவில்லை. பின்னர் நான் ராஜாஜி ஹாலுக்கு சென்றேன். அங்கேயும், என்னை தடுத்து, தள்ளிவிடப் பார்த்தார்கள். தொடர்ந்து நான், போராடி, பிரச்சினை செய்த பின்னர் தான் என்னால் உள்ளே போக முடிந்தது.

ஜெயலலிதாவை போன்ற உங்களது தோற்றம் சில மக்களுக்கு  அவரது நினைவை ஏற்படுத்துகிறது.  ஒரு டிவி சேனலிடம், அரசியலுக்கு வருவதை பற்றி பேசியுள்ளீர்கள்.

மக்கள் விரும்பினால் நான் அதற்கு எதிராக இருக்க போவதில்லை. அரசியலுக்கு வருவதல்ல எனது லட்சியம். ஆனால், அதற்கான தேவை இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. மெரினா கடற்கரையில் எனது அத்தைக்கு மரியாதை செலுத்த சென்ற போது, பல மக்களும் என்னிடம் வந்து பேசியது தான், என்னை அவ்வாறு சிந்திக்க வைத்தது.

ஆனால் அரசியலில் உங்களுக்கு எந்தவித அனுபவமும் இல்லை. நீங்கள் சந்தர்ப்பவாதி இல்லையே ?

இல்லை. உண்மையில் இல்லை. அரசியலில் நுழைவது எனது லட்சியம் இல்லை. அதனால் தான் மீண்டும் மீண்டும் கூறுகிறேன். மக்கள் விரும்பினால் மட்டுமே அந்த விருப்பத்தை தேர்வு செய்வேன். யாரும் கட்சியை வெறுமனே தனது பொறுப்பில் எடுத்துவிட முடியாது. யாரும், தன்னை ஒரு தலைவராக அறிவித்துக் கொள்ளவும் முடியாது. படிப்படியாக அவற்றிற்கென சில நடைமுறைகள் உள்ளன. அவையனைத்துமே, மக்களும், கட்சித் தொண்டர்களும் என்ன விரும்புகிறார்களோ அதனை பொறுத்தது.

எப்போது அவரை கடைசியாக பார்த்தீர்கள் ?

நான் அவரை கடந்த 2002 இல் சந்தித்தேன். அவருடைய பிறந்த நாள் வாழ்த்து செல்ல சென்றேன். பின்னர் அந்த நாள் முழுவதும் அங்கு அவருடன் செலவழித்தேன். அது மீண்டும் ஒன்று கூடியதைப் போன்று இருந்தது. நாங்கள் எங்கள் குடும்பத்தை பற்றியும், கடந்த காலத்தை பற்றியும், நாங்கள் பிரிந்த பின்னர் நடந்தவற்றை பற்றியும் பேசினோம். அவரது வளர்ப்பு மகன் மற்றும் அவரது மெகா திருமணத்தையொட்டி ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிலகாலம் குடும்பத்தில் பிளவு ஏற்பட்டிருந்தது. நான் அன்று சந்தித்த போது, பிளவினை உருவாக்கக் காரணமான குழப்பங்களுக்கு அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டேன். அவர், என்னிடம் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் கூறினார்.

தொடர்ந்து 2004 இல், அவரது பிறந்த நாளுக்கு சுருக்கமாக பேசிக்கொண்டோம். என்னிடம் போனில் பேசிய அவர், எனது வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டதுடன், பிஸியாக இருப்பதால் என்னிடம் பின்னர் பிறகு பேசுவதாக கூறினார். பின்னர், நான் பலமுறை அங்கு செல்ல முயற்சித்த போதும், என்னை உள்ளே செல்ல அவர்கள் அனுமதிக்கவில்லை.

ஆனால், 2007 க்கு பின் முழுவதுமாக தொடர்பு கொள்வது நின்றுவிட்டது. கடந்த 2014 இல் பெங்களூர் ஜெயிலில் இருந்த போது அவர் என்னை பார்க்க விரும்பினார். அங்கு கூட நான் ஜெயிலின் வெளியே நாள் முழுக்க காத்திருந்தேன். ஆனாலும் நான் அனுமதிக்கப்படவில்லை.

அவரை நெருங்குவதற்கு  உங்களை ஏன் தடுத்தார்கள் ?

 என்னக் காரணம் என எனக்கு தெரியவில்லை. அவர்கள் தான் விளக்க வேண்டும். 2002 இலோ அல்லது அதன் பின்னரோ நான் ஒரு போதும் சசிகலாவுடன் பேசியது கிடையாது. ஜெயலலிதாவின் உயிலைப் பற்றி நிறைய வதந்திகள் வந்து கொண்டிருக்கின்றன. தற்போதைய புரிதல் அப்படி ஒன்றும் இல்லை என்பது தான்.  அப்படி உண்மையில் உயில் எதுவும் இல்லாததால் ஒன்றை மட்டும் நாம் தெளிவாக புரிந்து கொள்ள முடியும். இவர்கள் எல்லாரையும் அவர் வெளியேற்ற விரும்பினார். அதனால் தான் அவர் சசிகலாவையும் அவரது ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் 2011 இல் வெளியேற்றினார். ஆனால் எப்படி திரும்ப வந்தார்கள் என எனக்கு தெரியவில்லை. எனது அத்தை அழுத்தங்களுக்கு அடிபணிபவர் அல்ல என எனக்கு தெரியும். தனது சொத்துக்களை ஒருபோதும்  நிர்பந்தங்களுக்கு விட்டு கொடுக்கமாட்டார். அப்படியும் ஒருவேளை உயில் இருந்தால், அதனை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். 

சொத்துக்கள் மீது எனக்கும் உரிமையுள்ளது. அவற்றை நான்  நிராகரித்து விட்டுக் கொடுக்க முடியாது.

நீங்கள் தற்போது முன் வந்திருப்பதற்கு காரணம் சொத்திற்காக வேண்டி தான் என்ற குற்றச்சாட்டு உங்கள் மீது எழலாம் இல்லையா ?

இந்தக் கேள்வியை எழுப்புகிறவர்களிடம் எல்லாம் எதிர் கேள்வியாக சொத்தானது சட்டப்பூர்வ வரிசுகளுக்கு தானே போகும் என எதிர் கேள்வி கேட்கிறேன். இந்த உண்மையில் எந்த மாற்றுக் கருத்தும் இருந்துவிட முடியாது. சட்டமும் அப்படித்தான் கூறுகிறது. இறந்து போன நபரின் கையில் 1000 ரூபாய் இருந்தால் கூட அவரது இரத்த உறவுகள் தான் அதனை மரபுரிமையாக பெற முடியும்.

இது ஒரு போராட்டமாக எழுந்தால், நானும் போராட தயாராகவே இருக்கிறேன். ஒருவேளை உயில் ஏதேனும் இருக்குமெனில், அந்த உயிலின் தகுதிகளை பரிசோதிக்க தயாராகவே இருக்கிறேன்.

உங்களை விமர்சிப்பவர்கள், நீங்கள் திடீரென திரும்பி வந்துள்ளதாகவும், திடீரென உங்கள் அத்தையின் மீது அக்கறை காட்டுவதாகவும் குற்றஞ்சாட்டுகிறார்களே.

 இதில் எந்தவித உண்மையும் இல்லை. எங்கள் ஒட்டுமொத்த குடும்பமும் போயஸ் கார்டனில் தான் வசித்து வந்தோம். எனது பெற்றோர்கள் 1972 இல் திருமணம் செய்து கொண்டனர். நான் அதே வீட்டில் 1974 இல் பிறந்தேன். நான் தீபாவளிக்கு முந்தின நாள் பிறந்த போது என்னை தீபா என முதலில் பெயர் சொல்லி அழைத்தவர்களில் எனது அத்தையும் ஒருவர். நாங்கள் 1978 இல் போயஸ் கார்டனிலிருந்து வெளியேறினோம். எனது பெற்றோர் வேலை நிமித்தமாக ஆங்காங்கே பயணம் செய்து கொண்டிருந்தார்கள். எல்லா குடும்பத்தினரும் அந்தரங்க உரிமையுடன் வாழ விரும்புவதை போல் எங்கள் தந்தையும் 4 பேர் கொண்ட குடும்பம் ஆனதும் போயஸ் கார்டனை விட்டு வெளியேறினார். 1987 இல் தனது சகோதரனான எனது தந்தையை பார்க்க அவர் வந்தார். குடும்பத்தினர் எல்லாரும் 1990 களின் துவக்கத்தில் ஒற்றுமையாக நெருக்கமாகத்தான் இருந்துவந்தோம். 1991 இல் அவர் முதலமைச்சராக பதவியேற்ற  பின்னர், அரசின் முதலாமாண்டு துவக்க விழாவையொட்டி ஒரு நாள் அத்தையுடன் எங்கள் குடும்பத்தினர் அனைவரும் செலவழித்தோம். ஆனால், ஒவ்வொருவரும் வேலைப் பளு உள்ளவர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அத்தையும் ரொம்பவே பிஸியாக இருந்தார். எனது தந்தை 1995 இல் மரணமடைந்த போது அவர் மிகவும் அதிர்ச்சியடைந்தார். இறுதி சடங்கிற்காக வந்த அவர், அவரால் செய்ய முடிந்தவற்றை செய்தார். அவரது மீதமிருந்த அஸ்தியை கொண்டு காஸிக்கு செல்வதற்கு எங்களுக்கு அவர் ஏற்பாடுகள் செய்து தந்தார். பிராமண சம்பிரதாயங்கள் அனைத்தையும் முழுமையாக நிறைவேற்ற அவர் எங்களை வற்புறுத்தினார். அதன் பிறகு அவர் எங்கள் குடும்பத்தில் அக்கறையும் செலுத்தினார்.

எனவே, நான் திடீரென திரும்ப வந்துள்ளேன் என கூறுவதற்கு அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. நாங்கள் எப்போதுமே அங்கே இருந்தோம். கடந்த சில காலங்களாக நாங்கள் வேண்டுமென்றே பிரித்து வைக்கப்பட்டோம்.

Related Stories

No stories found.
The News Minute
www.thenewsminute.com