
வானம் மேகமூட்டம் நிறைந்து காணப்பட்ட மதிய வேளையில் சென்னை மருத்துவக்கல்லூரியின் பிணவறை அருகே கொல்லப்பட்ட சுவாதியின் உறவினர்கள் சோகமுடன் கூடி நின்றனர். பட்டபகலில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து 24 வயதேயான இன்போசிஸ் நிறுவன பெண் ஊழியர் சுவாதி வெட்டி கொல்லப்பட்டிருந்தார். தங்கள் குடும்ப உறுப்பினரான சுவாதி கொல்லப்படும் போது யாரும் தடுக்கவில்லையே என்ற ஆதங்கம் அவர்களிடையே நிறைந்திருந்தது.
இதற்கிடையே, இந்த படுகொலைக்கான காரணம் என்னவென்ற பல புரளிகளும் உலா வர துவங்கிவிட்டன. சுவாதியின் உறவினர் ஒருவர் இதுகுறித்து டிவி நிருபர் ஒருவரிடம், இந்த கொலைக்கான காரணம் என்ன என்று கேள்வியை இறந்து போன பெண்ணின் மீது சுமத்தாமல், சம்பவம் நடந்த இடத்தில் போதிய போலீசார் இல்லாதது ஏன் என கேளுங்கள் என்று கூறினார். மென்மையான சுபாவம் கொண்ட தங்கள் குடும்ப பெண்ணை நினைவுகூர்ந்த அவர்கள், ரயில்வே போலீசின் அக்கறையின்மைக்கு எச்சரிக்கை மணியாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறுகின்றனர்.
பெயர் வெளியிட விரும்பாத சுவாதியின் தோழி ஒருவர் கூறுகையில், “ நான் சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன் வேகமாக ரயில்வே ஸ்டேஷனுக்கு ஓடி வந்தேன். அப்போது காலை 9.30 மணி இருக்கும்.சுவாதியின் உடல் காலை 6.30 முதல் அங்கேயே கிடந்து கொண்டிருந்தது. ரயில்வே போலீசார் மிகவும் மெதுவாகவே வேலை செய்கின்றனர். எங்குமே இரத்தம் நிறைந்து காணப்பட்டது. ஒரு உடலை எப்படி கவனிப்பாரற்று போட முடியும் என எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. மேலும் எங்கள் தோழியை அந்த நிலையில் காணும் போது உண்மையில் வேதனை அதிகரித்தது.” என்றார்.
சுவாதி தனது பொறியியல் பட்டப்படிப்பை தனலட்சுமி பொறியியல் கல்லூரியில் படித்து முடித்து கடந்த 2014 இல் வெளியேறியவர். அதனை தொடர்ந்து இன்போசிஸில் 2015 இல் வேலைக்கு சேர்ந்தார்.
சுவாதி, ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்து, வளர்ந்த மென்மையான, நல்ல குணசாலியான பெண் என அவரது தோழிகளும், உறவினர்களும் கூறுகின்றனர். “ சுவாதி எவரிடமும் பகைத்து கொள்பவர் அல்ல. அவர் போராடிய அந்த நிலையிலும் கூட, எந்த எதிர்ப்பையும் காட்டியிருக்கமாட்டார். தனது வேலையும் , தனக்கு நெருக்கமான நண்பர்களின் வட்டத்துடனும் தன்னை நிறுத்திக் கொள்பவர்.” என கூறிய சுவாதியின் தோழி ஒருவர், இந்த கொலையின் பின்னில் எழும் புரளிகளுக்கு முடிவு கட்டு வகையில், “ அவர், ஆண்களுடன் கூடி பழகுபவரல்ல “ என்றும் கூறினார்.
இந்த கொலை நடப்பதற்கும் சில நிமிடங்களுக்கு முன்னர் தான், சுவாதியின் தந்தை அவரை ரயில் நிலையத்தில் கொண்டு வந்து விட்டு சென்றுள்ளார்.சுவாதியை, தினசரி காலையில் அவர் தான் கொண்டு வந்து விடுவது வழக்கம். “ இந்த நகரம் பாதுகாப்பான நகரம் என கூறிக்கொண்டாலும், பட்டப்பகலில் படுகொலைசெய்யப்பட்டு எங்கள் தோழி உயிரிழந்த சம்பவம் எங்களுக்கு கோபத்தையே உருவாக்குகிறது. குறித்த நேரத்தில் போலீஸ் உதவியும், கேமராக்கள் பொருத்தப்பட்டும் இருந்திருந்தால் சம்பவம் வேறு வகையில் நடந்திருக்கும். ஆனால், யாருக்கு வேண்டுமானாலும் இந்த நிலை ஏற்படலாம்.” என கூறிய சுவாதியின் தோழி, மேலும் கூறுகையில் “ சுவாதியின் தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து கேள்வி எழுப்புவதற்கு பதில், போலீசிடமிருந்து பாதுகாப்பில் ஏன் அலட்சியம் என்ற கேள்விக்கான விடையை நாம் பெற்றாக வேண்டும்.” என கூறினார் அவர்.