42 85
news மதுரை Wednesday, February 03, 2016 - 14:07

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் முக்கிய நுழைவாயிலின் எதிரில் அமைந்துள்ளது ஜான் பாயின் சிறிய பேனா கடை. அம்மன் சன்னதி தெருவை நோக்கி நடந்து சென்றால் கிழக்கு அவனி மூலை தெரு குறுக்கிடும். அதன் வலது பகுதியில் கடந்த 42 ஆண்டுகளாக பேனாக்களை விற்பதும்,பழுது நீக்குவதும், மை நிரப்பதுவும் என தனது சிறிய கடையில் பிசியாக இருக்கும் ஜான் பாயை நீங்கள் பார்க்க முடியும். “ஜான்சன் பென் சென்டர் “ என்ற பெயர்  தாங்கும் பெயர் பலகை போர்டு மட்டும் இல்லையென்றால், இந்த கடையின் வயதை எவராலும் கண்டு பிடித்து விட முடியாது.

ஜான் பாய் என அழைக்கப்படும் மெகபூப் ஜானுக்கு இப்போது 85 வயது ஆகிறது. அம்மன் கோயிலுக்கு வெளியே அமர்ந்து, 1974 ல் பேனா விற்பனையை துவங்கிய அவரது பயணம் இன்றும் அங்கேயே தொடருகிறது. கடந்த நான்கு பதிற்றாண்டுகளாக, தினந்தோறும் மீனாட்சி அம்மனை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டத்தை பார்த்தவாறு பேனா விற்பனை செய்யும் இவருக்கு, பேனாவை கடந்து வேறெதிலும் ஆர்வம் இல்லை.

“ எனது வாடிக்கையாளர்கள் தலைமுறைகளாக என்னிடம் வந்து செல்பவர்கள். ஜான் பாயின் பேனாக்கள் அதிர்ஷ்டம் மிகுந்தவை. அவர்களிடம் கேட்டால் அவர்களே சொல்வார்கள்” என புன்முறுவலுடன் கூறுகிறார்.

தனது சிறிய பேனா கடையை இங்கு துவங்குவதற்கு முன் ஜான் பாய் மும்பையில் உள்ள பேனா  கம்பெனி ஒன்றில் வேலை பார்த்துள்ளார். அதன் பின் மதுரைக்கு வந்துள்ளார்.

“ அதன் பிறகு, நான் சுயமாக ஒரு பேனா கடையை துவங்க விரும்பினேன். தொடர்ந்துள்ள வருடங்களில் நான் அதே தொழிலையே  தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றேன்.” என தனது இந்த தொழிலின் மீதுள்ள ஆர்வத்தை குறிப்பிடுகிறார் இவர்.

ஜான் பாயிக்கு 5 மொழிகள் தெரியும். என்னிடம் பேசி கொண்டிருக்கும் போதே அவர் ஆங்கிலம், தமிழ், இந்தி , மலையாளம்,உருது என ஒவ்வொரு மொழியாக மாறி மாறி பேசி தனது மொழித்திறனை காட்டி கொண்டார். எனக்கு மலையாளமும்,உருதுவும் தெரியாது என நான் கூறவே, அவர் குறைகூற இயலாத அளவிலான ஆங்கிலத்தில் தனது பேச்சை தொடர்ந்தார். சில நேரங்களில் இடை நிறுத்தி சில வார்த்தைகளை நினைவுக்கு கொண்டு வந்து பேசினாலும், அவரது உச்சரிப்பு தெளிவாக இருந்தது.

“ இந்த கடையை திறப்பதற்கு முன்னால் ஒரு மொழி பெயர்ப்பாளராக வேலை செய்து கொண்டிருந்தேன்” என தனது மொழி புலமையை பற்றி கூறினார்.

தற்போது கொள்ளு தாத்தாவாகிவிட்ட இவரது பூர்வீகம் தூத்துக்குடி. தனது  7 பிள்ளைகளையும் கடையிலிருந்து கிடைக்கும் வருமானத்தை கொண்டு தான் வளர்த்து வந்துள்ளார்.” இரண்டு மகன்கள், ஐந்து பெண்கள். அனைவரும் திருமணமாகி செட்டில் ஆகிவிட்டனர்” என அவர் கூறும் போது ஒரு பெருமித உணர்வையும், சாதனை ஒன்றை செய்து முடித்த திருப்தியையும் காண முடிந்தது.

பழைய ஹீரோ பேனா முதல் தற்காலத்திய செல்லோ, ரினோல்ட்ஸ் பேனாக்கள் வரை இவரது சிறிய கடையில் காண முடிகிறது. “ சில வருடங்களுக்கு முன்வரை நாங்கள் ஹீரோ பேனாக்களை வெளிப்படையாக விற்க முடியாது. அவை கடத்தல் பொருளாக இருந்தன.ஆனால் இப்போது அவற்றை என்னால் விற்க முடியும்.” என கூறினார்.

தற்போதைய காலகட்டத்தில் வியாபாரமுறைகள் பெருமளவில்  மாறிவிட்டது. சீன பொருட்களின் படையெடுப்பு பேனாக்களையும் விட்டு வைக்கவில்லை.” பல வகையான பொருட்கள் இன்று சந்தைக்கு வந்துவிட்டன. அதனால் என்னை நிலைநிறுத்தி கொள்ள முடியவில்லை. அவைகள் குறைந்த விலையில் கிடைப்பதால், இந்திய பிராண்டுகளை அவை விலைகளை கொண்டு அழித்துவிடுகின்றன.”

மேலும், பேனா மீது தனக்கிருக்கும் ஆர்வம் மட்டுமல்லாது, தனது உடல் நலத்தையும் நன்கு கவனித்து கொள்ள முடிகிறது என்பதால் இந்த தொழிலை தன்னால் தொடர்ந்து செய்ய முடியும் என உறுதியாக கூறுகிறார். “ ஆறு மணி நேரம் தூங்குகிறேன். தினமும் காலையில் உடற்பயிற்சி செய்கிறேன்” என கூறி கொண்டே தனது முழங்கையை  அவர் உயர்த்தி காட்டினார். தொடர்ந்து தான் தினமும் 5 முறை தவறாமல் தொழுகை செய்வதாகவும் கூறினார்.\

நவீன டிஜிட்டல் தொழில்நுட்ப காலம் அவரது தொழிலை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை.

“ தினசரி 50 வாடிக்கையாளர்கள் எனது கடைக்கு வருகிறார்கள். நேற்று ஓய்வு பெற்ற மஜிஸ்திரேட் ஒருவர் வந்தார்.அவர் செயின்ட்.மேரிஸ் பள்ளியில் படித்து கொண்டிருந்த போது எனது கடையில் பேனா வாங்க துவங்கினார். அதன் பிறகு அவர் சட்ட கல்லூரிக்கு போனார். வழக்கறிஞர்  தொழில் செய்தார். இப்போது மஜிஸ்திரேட்டாக வேலை பார்த்து ஓய்வு பெற்றுவிட்டார். அவர் என்னை பார்த்து நான் மட்டும் இந்த தொழிலிலிருந்து இன்னும் ஓய்வு பெறவில்லை ஆச்சரியத்துடன் கூறி செல்வார் “

அவரிடமிருக்கும் பழமையான பேனாவை பற்றி கேட்டபோது  அவைகள்  அனைத்தும் தனது வீட்டில் இருப்பதாக கூறினார். பின்னர் ஒரு 40 வருட பழைமையான ஹீரோ பேனாவை காட்டினார். அவர் 20 ரூபாய் தந்து எடுத்துகொள்ளும்படி கூறிய போது அது மிகவும் விலை குறைவு என கூறினேன். பின்னர் நான் விரும்பும் தொகையை கொடுத்து பேனாவை எடுத்து செல்ல கூறினார். நான் மீண்டுமொருமுறை அவரது பழைய பேனாக்களை பார்க்க வரவேண்டியதிருப்பதால் அவரிடமிருந்து விடைபெற்றேன்.

Translation by John Moses

Topic tags,
Become a TNM Member for just Rs 999!
You can also support us with a one-time payment.