தெற்காசியர்கள் தாங்கள் செல்லுமிடமெல்லாம், சாதியையும் கொண்டு செல்கிறார்கள். அதனால் உண்டாகும் பாகுபாட்டை அந்த பகுதிகளில் புதுவடிவத்தில் அமல்படுத்துகிறார்கள்.

Tamil Thursday, April 21, 2016 - 18:51

(Editor's Note: This is part of the Dalit History Month series)

இந்திய பல்கலைகழகங்களில் மாணவர்கள் ஜாதியை பற்றியும், அவற்றை ஒழிக்க என்ன வழி என்பதை குறித்தும் சூடாக விவாதித்து கொண்டிருக்கின்றனர். ஆனால் வெளிநாட்டில் உள்ள பல்கலைகழகம் ஒன்று அதனை இன்னொரு கோணத்தில் அணுகியுள்ளது.

எடின்பர்க் பல்கலைகழகத்தின் தெற்காசிய கல்வி மையம் சமீபத்தில் இரண்டு நாட்கள் கண்காட்சியை நடத்தியது. தலித் அடையாளம் குறித்தும், அந்த அடையாளத்தின் பெயரில் நடைபெறும் சாதி பாகுபாடுகள் குறித்துமான கடந்த கால ஆவணங்களையும், அத்துடன் நூற்றுக்கும் மேற்பட்ட புகைப்படங்களையும் அந்த கண்காட்சியில் வைத்தது.

கடந்த 1990 ஆம் ஆண்டு, தமிழகத்தில் உள்ள ஒரு கிராமத்தில் செருப்பு அணியும் விழா நடந்துள்ளது. அதில்  கலந்து கொள்ளுவதற்கான அழைப்பிதழ் ஒன்றும் ஏப்ரல் 15.16 தேதிகளில் நடந்த அந்த கண்க்காட்சியில் மிகவும் அபூர்வமாக பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.

1920-30 காலகட்டங்களில் உள்ள பல்வேறு ஆவணங்கள் அந்த கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டன. குறிப்பாக  அயோத்தி தாசரின் உரைகள் அடங்கிய கைப்பிரதிகளின் நகல்கள், ரெட்டைமலை சீனிவாசனின் பூனா ஒப்பந்தத்தை குறித்த ஒரு குறிப்பு,அம்பேத்கார் மற்றும் வரலாற்றாளர் டு போய்ஸ் மற்றும்  ஆப்பிரிக்க-அமெரிக்க அறிஞர்களிடையே நடந்த கடித பரிமாற்றம், கடந்த கால தலித் இயக்கங்களின் சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரதிகள் ஆகியன அந்த கண்காட்சியில் இடம்பெற்றிருந்த பிற முக்கிய ஆவணங்கள்.

அந்த காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்ட 90 சதவீதம் ஆவணங்களும், அந்த பல்கலைகழகத்தின் பி.எச்டி பட்டதாரியான கார்த்திகேயன் மூலம் திரட்டப்பட்டவை. தற்போது அவர் தமிழகத்தில் நிலவும் ஜாதி அமைப்பு முறைகளை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.அவரது நேர்காணலின் சில பகுதிகள் :

இந்த புகைப்பட தொகுப்புகளை நீங்கள் எப்படி பெற்றீர்கள் ? இவற்றை சேகரிக்க உங்களுக்கு எவ்வளவு காலம் தேவைப்பட்டது ?

நான் இந்த கைப்பிரதிகளையும், ஆவணங்களையும் கடந்த 10 வருடங்களாக சேகரித்து கொண்டிருக்கிறேன். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சமூக இயக்கங்களும், தலித் கட்சிகளும், அவர்கள் கூறுவதை கைப்பிரதிகளாக மாற்றி அவர்கள் நடத்தும் கூட்டங்களில் பிரசுரிப்பார்கள். அப்படிப்பட்ட கூட்டங்களில் நான் கலந்து கொள்ளும் போதெல்லாம் அவற்றை பெற்று, நான் சேகரித்து வந்தேன்.

கூடவே, இது போன்ற அமைப்புகளில் இருக்கும் எனது நண்பர்களை தொடர்பு கொண்டு அவர்கள் கையில் இருக்கும் ஆவணங்களை என்னிடம் பகிர்ந்து கொள்ள கேட்டு கொண்டேன். கோயம்பத்தூர் மற்றும் மதுரையை சேர்ந்த எனது இரு நண்பர்கள், அவர்கள் கையில் இருந்து மிக பெரிய தொகுப்புகளை எனக்கு தந்துதவினர்.

முதல்கட்டத்தில் இந்த ஆவணங்களை சேகரிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது எப்படி ? முனைவர் பட்ட ஆய்வு மட்டுமல்லாது அதற்கு அப்பாலும் வேறு காரணங்கள் ஏதேனும் உண்டா ?

1990 இலிருந்து தமிழக அரசியலில் முக்கியமான மாற்றங்கள் நிகழ துவங்கின. தலித் சிறுத்தைகள், புதிய தமிழகம் போன்ற தலித் அமைப்புகள் அரசியலில் எழுச்சியுடன் நுழைந்தன. அதற்கு முன்னர் பல இயக்கங்கள் இருந்தாலும், இந்த இயக்கங்கள் அதிக அளவில் பொதுமக்களை திரட்டி அரசியல் அதிகாரத்திற்காக களமிறங்கின. பொது தளத்தில் இவர்களது அரசியல் முக்கியமானதாக பொறிக்கப்பட்டதுடன், கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்ட வழக்கமான நடைமுறைகளையும் அரசியல் ரீதியாக எதிர்த்தனர்.ஒரு இளைஞனாக நானும் அவர்களது அரசியலால் ஈர்க்கப்பட்டு அவர்களை பின்தொடர்ந்தேன். எனது முனைவர் பட்டத்திற்கு சம்பந்தமில்லாத திராவிட இயக்க வரலாறுகளை குறித்த ஆவணங்களையும் நான் நிறையவே சேகரித்துள்ளேன்.

சர்வதேசம் அமைப்புகளில் ஜாதிபாகுபாடுகள் குறித்த விவாதங்கள் எழும்போது அதனை  இந்திய அரசு, ஒரு உள்நாட்டு விவகாரமாகவே கருதுகிறது அல்லது இதுபற்றி எந்த விவாதமும் வந்துவிடாமல் இருக்க, தொழில்நுட்ப ஓட்டைகள் எதுவும் இருக்கிறதா என கண்டுபிடிக்க முற்படுகிறது. நிறவெறிக்கும், சாதி பாகுபாட்டிற்கும் இடையே புலனாகாத அளவில் இருக்கும் தொடர்பை உங்களால் விவரிக்க முடியுமா ?

சர்வதேச அமைப்புகளில் ஜாதி குறித்த விவாதம் வலுவாக எழுப்பப்பட வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். எப்படி நிறவெறி மனிதத்தன்மைக்கு எதிரான கொடுங்குற்றச்செயலாக கருதப்படுகிறதோ அதே போன்றே சாதி பாகுபாடுகளும் மிக மோசமானதாகவே உள்ளது. அதனை பற்றி உலக அளவில் பேசியாக வேண்டும். இங்கிலாந்து மற்றும் வடஅமெரிக்க நாடுகளுக்கு புலம் பெயரும் தெற்காசியர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் வளர்ந்து வருகிறது. அவர்கள் எங்கெல்லாம் போகிறார்களோ அங்கெல்லாம் ஜாதியையும் கொண்டு செல்வதுடன், அந்த சாதி பாகுபாட்டை வேறு வடிவில் அமல்படுத்துகிறார்கள். அவற்றை ஒரு சவாலாக எதிர்கொள்ள வேண்டிய தேவையும் இன்று எழுந்துள்ளது. எனவே நிறவெறிக்கு எதிரான இயக்கத்தை போன்றே சர்வதேச அளவில், ஜாதிக்கு எதிரான இயக்கத்தை சர்வதேச அளவில் முன்னெடுத்து செல்ல வேண்டியுள்ளது. அது விரைவிலேயே நிகழ போகிறது. இந்திய அரசு இவ்விவகாரத்தில், தன்னிடமிருக்கும் பிரச்சினையை கண்டும் காணாமல் இருந்து விடுகிறது.

சாதி பாகுபாடுகள் மற்றும் தீண்டாமைகளை புகைப்பட ஆவணங்கள் மூலம் கண்களால் காண முடியும். புதுவடிவிலான சாதி பாகுபாடுகளுக்கு உங்களால் உதாரணம் கூற முடியுமா ? அவற்றை புகைப்படம் போல ஆவணப்படுத்த முடியுமா ?

விலக்கி வைத்தல், சில போது இடங்களுக்கு செல்வதற்கான கட்டுப்பாடுகள், கோயில்களில் சம உரிமை போன்ற ஜாதிய பாகுபாடுகள் எல்லாம் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே நேரம், வேலை செய்யப்படும் தளங்களில் பார்க்கப்படும் பாகுபாடு, அவமானப்படுத்துதல், போன்ற நகர்ப்புறங்களில் நிலவும் நுண்ணிய ஜாதி பாகுபாடுகளை கண்டுபிடிப்பது சற்று கடினம். வேலை இடங்களில் காலி இடங்களை நிரப்பாமை, கல்வி நிறுவனங்களில் போதிய வாய்ப்பினை வழங்காமை, இடஒதுக்கீடு முறைகளை பின்பற்றாமை போன்றவற்றை அறிக்கையாக ஆவணப்படுத்திவிட முடியும். அவற்றை பொதுமக்கள் கையில் கிடைக்கவும் செய்துவிட முடியும்.

இந்த கண்காட்சி எப்படி ஒருங்கிணைக்கப்பட்டது என உங்களால் கூற முடியுமா ? இது போன்று வேறு எங்கேனும் நடத்தப்பட உள்ளதா ?

இதன் அடிப்படை நோக்கமே ஜாதி குறித்த கேள்வியை சர்வதேசியமயமாக்குவது தான். விளிம்புநிலை ஜாதியினரிடையே, தங்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளுக்கு எதிரான உணர்வு , அவர்கள் இரத்தத்திலும், கண்ணீரிலும், வியர்வையிலும் ஊறி போயுள்ளது. சாதி எனும் அரக்கனால் அவர்கள் சந்தித்துள்ள இழப்புகள் எண்ணமுடியாதவை. அதற்கு எதிராக அவர்கள் நடத்திய போராட்டங்கள் கூட வரலாற்றில் புறக்கணிக்கப்பட்டுள்ளன. தேசியவாத வரலாற்றியலில்  மட்டுமல்லாமல் அதற்கு மாற்றாக கருதப்படும் மார்க்சிய வரலாறுகளிலும்  ஜாதி குறித்த கேள்விகள் இடம் பெறவில்லை. திராவிட ஆவணங்கள் கூட தலித்களுக்கு போதிய இடத்தினை வழங்கவில்லை. எனவே இருக்கும் அனைத்து வகையான ஆவண வளங்களையும் ஒன்று திரட்டி, பொருத்தமான தனி  வரலாற்றை எழுத வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதற்கான ஒரு சிறு முயற்சியே இது. நாங்கள் இது போன்ற கண்காட்சிகளை இன்னும் பல  போது இடங்களில் நடத்தவே திட்டமிட்டுள்ளோம். விரைவிலேயே இவற்றை பயன்படுத்தி பொதுவான தகவல் திரட்டையும் உருவாக்குவோம்.

 

Become a TNM Member for just Rs 999!
You can also support us with a one-time payment.