எம்.ஜி.ஆர் முதல்வர் - கருணாநிதி கட்சி தலைவர். திமுக - அதிமுக இணைவதற்கு நடந்த டீல்

திமுக என கட்சி பெயரும், அதிமுகவின் அண்ணா படம் பொறித்த கொடியை கட்சி கொடியாக ஏற்பது எனவும் இரு தலைவர்களும் முடிவு எடுத்திருந்தனர்.
எம்.ஜி.ஆர் முதல்வர் - கருணாநிதி கட்சி தலைவர். திமுக - அதிமுக இணைவதற்கு நடந்த டீல்
எம்.ஜி.ஆர் முதல்வர் - கருணாநிதி கட்சி தலைவர். திமுக - அதிமுக இணைவதற்கு நடந்த டீல்
Written by:

முன்னாள் மத்திய அமைச்சர் பிஜு பட்நாயக்கின் மெகா திட்டம் வெற்றி பெற்றிருந்தால் தமிழக அரசியல் வரலாறு மாறியிருக்க கூடும். இன்று கனவாகி போன ஒன்றை நனவாக்க அவர் முயற்சி எடுத்தார். இன்று பரம அரசியல் எதிரிகளாக தமிழகத்தில் பார்க்கப்படும் அதிமுக மற்றும் திமுகவை இணைக்கும் முயற்சி தான் அது.

1979 ஆம் ஆண்டு. செப்டம்பர் மாதம். இந்தியா மீண்டும் ஒரு அரசியல் ஸ்திரமற்ற நிலையை நோக்கி போய்கொண்டிருந்தது. அவசர நிலை பிரகடனம் திரும்ப பெறப்பட்டு இரண்டு ஆண்டுகளே ஆகியிருந்த சமயம் அது. இந்திரா காங்கிரஸ், சரண்சிங் அரசிற்கு கொடுத்து வந்த ஆதரவினை 24 நாட்களில் திரும்ப பெற்றதால், சரண்சிங் காபந்து அரசின் பிரதமராக அப்போது இருந்து கொண்டிருந்தார். அதற்கும் சில வாரங்கள் முன்பு தான், இந்தியாவின் முதல் காங்கிரஸ் கட்சியை சேராத பிரதமர் மொரார்ஜி தேசாய், அவர் சார்ந்திருந்த கட்சியான ஜனதா கட்சி கூட்டணியில் கடும் பிளவுகள் ஏற்பட்டதால், தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்.

தமிழகத்தில், அதிமுக தேர்தலில் வென்று, முதன்முதலாக எம்.ஜி.ராமச்சந்திரன்  முதலமைச்சர் பொறுப்பை ஏற்று இரண்டு ஆண்டுகளே ஆகியிருந்தன. சரண்சிங் அரசிற்கு அவரது கட்சியான அதிமுக ஆதரவினை கொடுத்திருந்தது. இந்தியா மற்றொரு பொது தேர்தலை சந்திக்க வேண்டிய சூழலில் இருந்த போது, எம்.ஜி.ஆர் இந்திராகாந்தியுடன் பேச விரும்பினார். அதற்காக செப்டம்பர் 6 அன்று, இந்திராகாந்தியும், எம்.ஜி.ஆரும் சந்தித்து பேச திட்டமிட்டிருந்தனர். ஆனால் அந்த சந்திப்பு நிகழவில்லை. இதனையடுத்து தான் பிஜூ பட்நாயக் களமாட துவங்கினார்.

பிஜு பட்நாயக், ஜனதா கட்சியின் தலைவர்களுள் ஒருவராக இருந்தார். மொரார்ஜி தேசாயின் அமைச்சரவையில் இரும்பு எக்கு துறை அமைச்சராக இருந்தார். அதன் பின்னர் சரண்சிங் அமைச்சரவையிலும் அதே துறையில் அமைச்சராக தொடர்ந்தார். முன்னாள் ஒரிசா முதல்வரான அவர், திமுக தலைவர் கருணாநிதியுடன் பல கொள்கைகளில் ஒத்த கருத்து உள்ளவர். குறிப்பாக, 1970 களில் தேசிய அளவில் மாநிலங்களுக்கு சுயாட்சி வேண்டும் என்ற திமுகவின் கொள்கையை ஆதரித்தவர். செப்டம்பர் 12, 1979 அன்று திமுகவையும், அதிமுகவையும் இணைக்க வைக்கும் ஆலோசனையுடன், சென்னையிலுள்ள கருணாநிதியின் வீட்டில் அவரை சந்தித்தார் பிஜு பட்நாயக். இந்த ஆலோசனையை கேட்ட திமுக தலைவர்கள், இந்த யோசனை யாருடையது என ஆச்சரியத்துடன் கேட்டனர்.

இந்த யோசனை எம்.ஜி.ஆரிடமிருந்து வந்ததாகவும், அவர் இரு கட்சிகளையும் இணைக்க விரும்புவதாகவும், கருணாநிதியின் நிபந்தனைகள் என்ன என்பதை அவர் அறிய விரும்புகிறார் எனவும் பிஜு பட்நாயக் அவர்களிடம் விளக்கினார். கருணாநிதி தரப்பில் திமுக என கட்சியின் பெயரை தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் எனவும், அண்ணாவின் படம் பொறித்த அதிமுகவின் கட்சி கொடியே திமுகவின் கொடியாக ஏற்று கொள்ளலாம் எனவும் கூறியதுடன், எம்.ஜி.ஆர் தொடர்ந்து முதல்வராக இருந்து கொள்ளட்டும், ஆனால் இணைந்த கட்சியின் தலைவராக கருணாநிதி செயல்படுவார் எனவும் நிபந்தனையாக கூறப்பட்டது. இந்த நிபந்தனையை கேட்ட, பட்நாயக் திமுக தலைவர் கருணாநிதியை கட்டி தழுவியதுடன், அவர் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத நிபந்தனைகளை விதிக்க கூடும் என நினைத்ததாக கூறினார்.

இந்த சந்திப்பு நிகழ்ந்த மறுநாள், பட்நாயக் திமுக தலைவர் கருணாநிதியையும், எம்.ஜி.ஆரையும் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் கூடி சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார். திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகனும், அதிமுகவின் நெடுஞ்செழியன் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோரும் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் வந்து அமர்ந்திருக்க, அதே விருந்தினர் மாளிகையின் மற்றொரு அறையில் கருணாநிதியும், எம்.ஜி.ஆரும் நேருக்கு நேர் அமர்ந்திருந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இருதரப்பு நிபந்தனைகளும் பரஸ்பரம் ஏற்று கொள்ளப்பட்ட நிலையில், இரு தலைவர்களும், அவரவர் கட்சியை சேர்ந்தவர்களை கொண்ட ஒரு அவசர  நிர்வாக குழுவை அமைத்து, இணைப்பு குறித்த தீர்மானத்தை நிறைவேற்ற முடிவு செய்தனர்.

ஆனால், இதன் மறுநாள் வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் நிலைமை தலைகீழானது. எம்.ஜி.ஆர் இணைப்பு குறித்து ஒரு வார்த்தையும் பேசவில்லை. எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள் திமுகவை கடுமையாக தாக்கி பேசினர். இரு கட்சிகளையும் இணைக்க வேண்டும் என்ற முன்மொழிவு கிட்டத்தட்ட கிடப்பில் போடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது.

இந்த ரகசிய கூட்டம் நடந்து 30 ஆண்டுகளுக்கு பின்,  சென்னையில் நடந்த ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் திமுக தலைவர் கருணாநிதி, எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் தான் இந்த இணைப்புக்கு எதிரான வேலைகளை செய்ததாக குறிப்பிட்டார். “நேருக்கு நேர் சந்திப்புக்கு பின், எம்.ஜி.ஆர் வேலூரில் நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு கலந்து கொள்வதற்காக சென்றார். ஆனால் போகும் வழியில் காரில் என்ன நடந்தது என தெரியவில்லை” என்று குறிப்பிட்டு பேசினார் அவர். எம்.ஜி.ஆருடன் இருந்த சில விருப்பமில்லாதவர்கள் தான், எம்.ஜி.ஆரை இணைக்கும் முடிவிலிருந்து பின்வாங்க செய்தனர் என கூறினார்.

இதோடு, இரு திராவிட கட்சிகளும் ஒன்று சேரும் முயற்சி தோல்வியில் முடிந்ததுடன், அதற்கான வாய்ப்பும் முழுவதும் இல்லாமல் போனது. பட்நாயக்கை பொறுத்தவரை இது ஒரு தோல்வியடைந்த முயற்சி. அது இந்திரா காங்கிரஸ் மீண்டும் எழுச்சி பெற்று வர காரணமாகவும் அமைந்தது.          

News, views and interviews- Follow our election coverage.

Click Kerala Election Special                                                                                                              

Related Stories

No stories found.
The News Minute
www.thenewsminute.com