இந்த தொகுதியில் எம்.எல்.ஏ ஆன பின், அம்மா நிறையவே செய்துள்ளனர் என கூறுகின்றனர் தொகுதிவாசிகள்.

 Image: Jayalalithaa/PTI
Tamil தேர்தல் 2016 Thursday, April 21, 2016 - 08:01

கடந்த வருடம் முதலமைச்சர் ஜெயலலிதா, ஆர்கே நகர் தொகுதி எம்.எல்.ஏ வாக ஆனது முதல் தங்களின்  வாழ்க்கைமுறை சற்று நல்ல முறையில் மாறியுள்ளதாக கூறுகின்றனர் தொகுதிவாசிகள்.

2015 வரை எம்.எல்.ஏ வாக இருந்த அதிமுகவை சேர்ந்த வெற்றிவேல், தனது கட்சியின் தலைவி ஜெயலலிதாவிற்காக தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு நடந்த இடைத்தேர்தலில் ஜெயலலிதா மிகப்பெரும்பான்மையான வாக்குகளை பெற்று ஜூன் 27,2015 அன்று எம்.எல்.ஏவாக பொறுப்பேற்றார்.

ஜெயலலிதா இந்த தொகுதி எம்.எல்.ஏவாக ஆனதிலிருந்து திடீரென நல்ல மாற்றங்கள் ஏற்பட துவங்கியதாக இந்த தொகுதிவாசிகள் கூறுகின்றனர். “புது சாலைகள் போடப்பட்டுள்ளன. தெருவிளக்குகள் மாற்றப்பட்டுள்ளன. கடந்த ஆறு மாதங்களில் நல்ல மாற்றத்தை நாங்கள் உணருகிறோம்” என்கிறார் 35 வயதான ரமேஷ். இவர் தற்போது ஒரு பிரிண்டிங் பிரஸில் வேலை செய்துவருகிறார்.

வெல்டிங் கடையில் வேலை பார்க்கும் ரமேஷின் நண்பர் சிவகுமாரும், ரமேஷின் இதே கருத்தையே ஆமோதிக்கிறார். “ ஆனால் வெற்றிவேல் எம்.எல்.ஏவாக இருந்த போது இந்த தொகுதி பக்கம் அவர் தலைகாட்ட கூட செய்யவில்லை” என்றார் அவர்.

ஆட்டோ டிரைவராக இருக்கும் வேணுகோபாலை பொறுத்தவரை அம்மா உணவகம் அவருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என கூறுகிறார். 5 ரூபாய்க்கு மதிய சாப்பாடு சாப்பிட முடிகிறது என நன்றியுடன் கூறுகிறார் அவர்.

உணவகம் ஒன்றை நடத்தி வரும் 48 வயதான தலைவனி ஜெயலலிதாவால் கிடைக்கபெற்ற பயன்களை நீளமாக பட்டியல் போடுகிறார். “ அம்மா எங்களுக்கு அம்மா உணவகம் அமைத்து தந்துள்ளார். கிரைண்டர் கொடுத்துள்ளார். வெள்ளபெருக்கு ஏற்பட்ட போது, ஒரு பாக்கெட்டில் உணவும், கூடவே அத்தியாவசிய பொருட்கள் எல்லாம் தந்தார். வெள்ளபெருக்கு ஏற்பட்ட நவம்பர் 2015 இல் அவர் எங்களை நேரில் பார்க்க வந்தார்.”  என கூறுகினார்.

ஆர்கே நகர் தொகுதிக்கு ஜெயலலிதா சுற்றுபயணம் செய்த போது, தனது இதயத்தில் ஆர்கே நகர் மக்களுக்கு சிறப்பு இடம் இருப்பதாக கூறினார். அவர்  180.41 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன்,193.26 கோடி மதிப்பிலான திட்டங்களையும் அறிவித்தார். கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது அரசு மக்களுக்கான பல நலத்திட்டங்களை செயற்படுத்தியதாக அவர் அப்போது கூறினார்.

சென்னை வெள்ளத்தில் ஆர்கே நகர் மோசமாக ஒன்றும் பாதித்துவிடவில்லை. மக்களுக்கான நிவாரண முகாம்கள் இங்கு முன்னரே அமைக்கப்பட்டன. “ வெள்ளபெருக்கு ஏற்பட்ட காலத்தில் அதிமுகவினர் எங்களுக்கு உணவு பொட்டலங்களும், தண்ணீர் கேன்களும் தந்தனர். கூடவே 5000 ரூபாய் நிவாரண நிதியாகவும் அளித்தனர் .” என்றார் 35 வயதான சண்முகம் என்ற காய்கறி கடைக்காரர்.ஜெயலலிதாவிற்கு முன்பிருந்த வெற்றிவேல் எம்.எல்.ஏ எதுவும் செய்யவில்லை என சண்முகமும் கூறினார்.

எப்படியிருப்பினும் இத்தொகுதியில் வசிக்கும் மக்கள் தினசரி வாழ்க்கையை எதிர்கொள்ள இன்னும் கடினமாக இருப்பதாக கூறுகின்றனர். குடிநீர் பிரச்சினை அவற்றில் முக்கியமான ஒன்று. இங்கு சப்ளை செய்யப்படும் குடிநீர், கழிவுநீர் கலந்து வருவதாக கூறுகிறார்கள். இதுகுறித்து 54 வயதான கடைக்காரர் கூறுகையில், “ முதலில் கொஞ்சநேரம் தண்ணீர் நல்ல தெளிவாக வருகிறது. அதன் பின்னர், கழிவு நீர் கலந்த வண்ணம் அந்த தண்ணீர் வருகிறது. “ என்றார்.

மெட்ரோ தண்ணீர் டேங்க் பற்றி கேட்டபோது, எப்போதாவது இரவு நேரங்களில் தண்ணீர் கொண்டுவரப்படுவதாக கூறுகிறார் முருகன்.

வேணுகோபால் என்ற ஆட்டோடிரைவர், இங்கு வரும் குடிதண்ணீர் ஆயில் கலந்து வருவதாக கூறுகிறார். எண்ணூரை சுற்றியுள்ள பகுதியில் ஆயில் பைப் ஒன்று செல்கிறது. அதில் கசியும் ஆயில் உள்ளூர் தண்ணீர் சப்ளை செய்யப்படும் குழாயில் கலந்துவிடுகிறது.

மெயின்ரோட்டின் மிக அருகிலேயே கண்ணுப்பிள்ளை தோட்டம் என சிறிய தெரு ஒன்று உள்ளது. ஆர்கே நகர் தொகுதிக்குட்பட்ட இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடிதண்ணீர் அவ்வளவு முக்கிய பிரச்சினையாக இல்லை. இந்த பகுதியில் போடப்பட்டுள்ள ரோடு இன்னும் தார் போடப்படாமலேயே உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இப்பகுதியில் வசிக்கும் மக்கள் இந்த ரோட்டினை தார் போட சொல்லி வலியுறுத்தி வருகின்றனர். “ கடந்த வருடம் அதிகாரிகள் வந்து, சிமென்ட் ரோடு போடப்போவதாக கூறினார்கள். ஆனால் நாங்கள் அதை ஏற்கவில்லை. தார் ரோடு போட்டால் தான் அதில் விழும் தண்ணீர் எளிதில் கசிந்து வெளியேறும் என்று கூறினோம்” என்கிறார் அந்த பகுதியை சேர்ந்த கன்னிகா.

“ கார்ப்பரேஷன் ஊழியர்கள், எந்த வேலை செய்தாலும் பணம் கேட்கிறார்கள். நாங்களோ ஏழைகள். எங்களால் எப்படி கொடுக்க முடியும் ? “ என கேட்கிறார் மற்றொரு வீட்டுபெண்ணான சரஸ்வதி.

மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டால் எங்கே எங்கள் கடைகள் போய்விடுமோ என்ற பயத்தில் கடைக்காரர்கள் உள்ளனர்.

“தொண்டையார்பேட்டை வரை மெட்ரோ பாதை தரைக்கடியில் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, அந்த பாதை எங்கள் கடைகள் இருக்கும் பகுதி வழியாக செல்கிறது. ஏன் அவர்களால் முழுமையாக தரைக்கடியில் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாது ? எங்கள் கடைகள் இருக்கும் வழியாக மெட்ரோ பாதை செல்வதை கண்டித்து நாங்கள் போராட்டம் நடத்தினோம். கடற்கரையிலிருந்து 500 மீட்டருக்கு உட்பட்ட பகுதி வழியாக மெட்ரோ ரயில் செல்கிறது. ஆனால் நீர்நிலைகளில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு எந்த பெரிய கட்டிடங்களும் கட்ட கூடாது என தடையுள்ளது.” என மணிகண்டன் என்ற கடைக்காரர் கூறினார்.

மெட்ரோ ரயில் பாதை கடைக்காரர்களை மட்டுமல்லாது பள்ளிகள், கோயில்கள் மற்றும் சார்ச்களையும் பாதிக்கிறது. “ இந்த மெட்ரோ திட்டத்தினால் பல கடைக்காரர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். பல ஆண்டுகள் பழைமையான கோயில்கள், பள்ளி கூடங்கள் மற்றும் சர்ச்களும் இதனால் பாதிப்புக்கு உள்ளாகின்றன.” என்றார் திமுகவை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் சிஎன் ரத்னம்.

அவர்கள் முதலமைச்சருக்கும், கவுன்சிலர்களுக்கும் இதுகுறித்து மனுக்கள் அனுப்பியுள்ளனர். ஆனால் இதுவரை எந்த பதிலும் வரவில்லை.” மெட்ரோ ரயில் பாதை எங்களை பாதிக்காமல் இருக்க, எங்களால் முடிந்த முயற்சிகளை நாங்கள் மேற்கொள்ளுவோம்.” என்று கூறினார் அப்பகுதியை சேர்ந்த ஜுபலிங்கம். 

 

News, views and interviews- Follow our election coverage.

Click TN Election Special

Click Kerala Election Special

Become a TNM Member for just Rs 999!
You can also support us with a one-time payment.