தலித்துகளுக்கு மறுக்கப்படும் ‘தமிழ் மண்’

கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் நடந்துவரும் திமுக-அதிமுக ஆட்சிகள் தலித் மக்களுக்குச் செய்திருக்கும் ‘நன்மை’ அவர்களை நிலமற்றவர்களாக்கி இலவச அரிசியில் உயிர்பிழைக்கும் அவல நிலைக்குத் தள்ளியிருப்பதுதான்.
தலித்துகளுக்கு மறுக்கப்படும் ‘தமிழ் மண்’
தலித்துகளுக்கு மறுக்கப்படும் ‘தமிழ் மண்’
Written by:

By D Ravikumar

இந்திய நாட்டின் குடிமகன் (Citizen ) என்பதற்குள்ள சான்றுகளில் ஒன்று நிலம் வைத்துக்கொள்ளும் உரிமை. மற்றவர்களைப்போல தலித்துகளும் நிலம் வைத்துக்கொள்ளலாம் என அரசியலமைப்புச் சட்டம் கூறினாலும் அவர்கள் கையில் நிலம் சென்றுவிடாதபடி சாதிய சக்திகள் பல்வேறு தடைகளை உருவாக்கி வைத்துள்ளனர். தலித் ஒருவர் தன்னிடம் பணம் இருந்துவிட்டாலே நிலம் வாங்கிவிட முடியாது, கிராமப் புறங்களில் வசிக்கும் தலித்துகளிடம் கேட்டால் எப்படியெல்லாம் அவர்கள் நிலமற்றவர்களாக்கப்படுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

புதிதாக நிலம் வாங்குவதற்குத் தடைகள் ஏற்படுத்துவது மட்டுமின்றி ஏற்கனவே தலித்துகளிடம் இருக்கும் நிலத்தைப் பறிப்பதற்கும் பல்வேறு தந்திரங்கள் செய்யப்படுகின்றன. அதனால் தலித்துகள் மேலும் மேலும் நிலமற்றவர்களாக்கப்படுகிறார்கள். சாதியவாத சக்திகள் தமக்கிருக்கும் அரசியல் செல்வாக்கின்மூலம் ஆட்சி அதிகாரத்தை இந்த நிலப் பறிப்புக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர். இதைத் தமிழ்நாட்டில் தெளிவாகப் பார்க்க முடிகிறது.

மக்கள் தொகை கணக்கெடுப்பைப் போலவே இந்தியாவில் சாகுபடி செய்யப்படும் நிலத்தின் அளவையும் அதை சாகுபடி செய்பவர்களின் எண்ணிக்கையையும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்திய அரசு கணக்கெடுப்பு செய்துவருகிறது.அது விவசாயக் கணக்கெடுப்பு ( Agricultural Census ) என அழைக்கப்படுகிறது.2010-2011 க்கான கணக்கெடுப்பின் விவரங்கள் 2014 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டன. 2015-16 க்கான கணக்கெடுப்பு 2016 பிப்ரவரி மாதம் முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. (http://agcensus.nic.in/document/agcensus2010/agcen2010rep.htm ).

2010-11 க்கான கணக்கெடுப்பில் மாநில வாரியாக நிலம் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையும் அவர்களால் சாகுபடி செய்யப்படும் நிலத்தின் பரப்பளவும் கொடுக்கப்பட்டுள்ளன. எஸ்சி/எஸ்டி பிரிவினரில் நிலம் உள்ளவர்கள் எத்தனை பேர் ?, அவர்களால் பயிர் செய்யப்படும் நிலத்தின் பரப்பு என்ன ? என்பதைத் தனியே கொடுத்திருக்கிறார்கள். அதில் தமிழ்நாடு குறித்த புள்ளிவிவரம் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

தென் மாநிலங்களில் மகராஷ்டிரா,ஆந்திரப்பிரதேசம்,கர்னாடகா ஆகிய மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில்தான் நிலம் வைத்துள்ள தலித்துகளின் என்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது. அவர்களிடம் இருக்கும் நிலத்தின் பரப்பளவும் ஒப்பீட்டளவில் மிக மிகக் குறைவாக உள்ளது.

2014 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டிருக்கும்  அறிக்கையில் 2005-2006 மற்றும் 2010-2011 ஆகிய இரண்டு கணக்கெடுப்புகளின் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை ஒப்பிட்டுப் பார்க்கும்போது தலித்துகளிடம் உள்ள நிலத்தின் அளவு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதைப் பார்க்க முடிகிறது.

2005-06 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 8,84,000 தலித்துகளிடம் மொத்தமாக 5,03,000 ஹெக்டேர் நிலம் இருந்தது. 2010-11 ஆம் ஆண்டில் நிலம் வைத்திருக்கும் தலித்துகளின் எண்ணிக்கை 8,73,000 ஆகக் குறைந்தது. அவர்களால் சாகுபடி செய்யப்படும் நிலத்தின் அளவும் 4,92,000 ஹெக்டேராகக் குறைந்துவிட்டது. அதாவது 2005-06 க்கும் 2010-11 க்கும் இடைப்பட்ட ஐந்து ஆண்டுகளில் 11 ஆயிரம் தலித்துகள் நிலமற்றவர்களாக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்த 11 ஆயிரம் ஹெக்டேர் நிலம் பறிபோயிருக்கிறது.

தமிழ்நாட்டின் அளவுக்கே மக்கள் தொகை கொண்ட ஆந்திரா , மகராஷ்டிரா மற்றும்  கர்னாடகாவின் நிலையோடு ஒப்பிட்டால் தமிழ்நாட்டிலிருக்கும் தலித்துகள் எப்படி வஞ்சிக்கப்படுகின்றனர் என்பதைப் புரிந்துகொள்ளலாம். 2010-11 ஆம் ஆண்டில் ஆந்திரப்பிரதேசத்தில் 1,45,7000 தலித்துகள் நிலம் வைத்திருந்தனர், அவர்களிடம் 11,00,000ஹெக்டேர் நிலம் இருந்தது. அதாவது தமிழ்நாட்டில் இருப்பதைப்போல இருமடங்கு நிலம் ஆந்திர தலித்துகளிடம் இருக்கிறது. கர்னாடக நிலையும் அதே போன்றது தான். அங்கு 9,14,000 தலித்துகளிடம் 10,74,000 ஹெக்டேர் நிலம் இருக்கிறது. அதுவும் ஏறத்தாழ இரு மடங்குதான்.மகராஷ்டிராவிலோ தலித்துகளின் நிலை இன்னும் சிறப்பாக உள்ளது. அங்கு 10,29,000 தலித்துகள் நிலம் வைத்துள்ளனர். அவர்களிடம் 13,03,000 ஹெக்டேர் நிலம் இருக்கிறது. இது தமிழ்நாட்டு தலித்துகளிடம் இருக்கும் நிலத்தைப் போல இரண்டரை மடங்காகும்.   

கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் நடந்துவரும் திமுக-அதிமுக ஆட்சிகள் தலித் மக்களுக்குச் செய்திருக்கும் ‘நன்மை’ இதுதான். தலித்துகளை மேலும் மேலும் நிலமற்றவர்களாக்கி அவர்களை இலவச அரிசியிலும்,நூறுநாள் வேலையிலும் உயிர்பிழைக்கும் அவல நிலைக்குத் தள்ளியிருப்பதுதான் இந்த ஆட்சியாளர்களின் சாதனை. 

Related Stories

No stories found.
The News Minute
www.thenewsminute.com