
உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் லாட்டரி அடிச்சா நீங்க எங்க போவீங்க ? கேரளா மாநிலத்தில் ஒரு வாலிபர் நேராக லாட்டரி சீட்டுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றுள்ளார்.
கோழிக்கோடு மாவட்டம் சேவயூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு மேற்கு வங்க வாலிபர் ஒருவர் கையில் ஒரு துண்டு பேப்பருடன் வந்து நிற்பதை போலீசார் கவனித்தனர். என்னவென்று கேட்க தனது பெயர் மோப்ஜில் ரஹ்மான் ஷேக் எனவும், தனக்கு 22 வயது ஆகிறது எனவும் கூறியுள்ளார். கூடவே, தனக்கு ஒரு கோடி லாட்டரி அடித்திருப்பதாக போலீசாரிடம் கூற, போலீசார் சற்றே குழம்பி போயினர்.
லாட்டரி அடிச்சிட்டு ஓகே. எதற்காக போலீஸ் ஸ்டேஷன் வரவேண்டும் என போலீசார் கேட்க, அந்த வாலிபர் தனது உயிருக்கும், வென்ற லாட்டரி டிக்கெட்டுக்கும் பாதுகாப்பு வேண்டும் என்று கூறினார்.
அதனை தொடர்ந்து, போலீசார் வெள்ளிமூடு பாரத ஸ்டேட் வங்கி கிளைக்கு அவரை அழைத்து சென்று, புதிதாக ஒரு கணக்கை துவங்கி, அங்கேயே அந்த டிக்கெட்டையும் கொடுக்க உதவியுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்திலுள்ள, உத்தர் லட்சுமிபூர் தான் மோப்ஜில்லுக்கு சொந்த ஊர். அங்கிருந்து கேரளாவுக்கு கடந்த மார்ச் 4 ஆம் தேதி ரயிலில் ஏறி வேலை தேடுவதற்காக வந்துள்ளார். மார்ச் 5 ஆம் தேதி கோழிக்கோட்டில் உள்ள ஒரு லாட்டரி டிக்கெட் வியாபாரியிடம் டிக்கெட் வாங்கியுள்ளார்.
போலீசாரிடம் இதுகுறித்து கேட்டபோது, எவரும் மோப்ஜில்லை ஏமாற்ற கூடாது என்பதற்காக, தாங்கள் உதவியதாகவும், இது எங்கள் கடமை என்றும் கூறினர்.
வங்கி மேலாளர், இந்த பணம் அவரது கணக்கில் வந்து சேர சில நாட்கள் பிடிக்கும் என கூறியதாக கூறினார். அவரது குடும்பத்தினர், மிகவும் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
இருப்பினும், அந்த லாட்டரிக்கான தொகை, அவருக்கு கிடைப்பது, அவர் கேரளாவில் இருந்து தான் அதை வாங்கினார் என்பதை நிரூபிப்பதை பொறுத்தே உள்ளது. இதற்காக அவர் மேற்கு வங்கத்திலிருந்து கேரளா வந்ததற்கான ரயில் டிக்கெட் அல்லது, அவருக்கு டிக்கட் விற்ற லாட்டரி ஏஜென்டின் உறுதி சான்றிதழும் வழங்க வேண்டும்.