சென்னை ட்ரக்கிங் கிளப்பை சேர்ந்த தொண்டர்கள், அடையார் ஆற்றின் கரையில், வெள்ளபெருக்கால் உருவான குப்பைகளை அகற்றி சுத்தம் செய்து வருகின்றனர்.

 Image: Chennai Trekking Club volunteers
news Wednesday, March 02, 2016 - 19:57
Written by  Pheba Mathew

மார்ச் 2 காலை. கோட்டூர்புரத்தை அடுத்த சூர்யா நகரின் அடையாறு ஆற்றங்கரையில் 30 க்கும் அதிகமான இளைஞர்கள் திரண்டிருந்தனர். சென்னை ட்ரெக்கிங் கிளப்பின் தொண்டர்களான அவர்கள், நகரை சுத்தப்படுத்தும் திட்டத்துடன், கைகளில் ஆரஞ்சு நிற கை உறைகளும், வெள்ளை நிற வேஸ்ட் துணிகளுடன் நின்றிருந்தனர். அப்பகுதியை சுற்றியுள்ள, எளிதில் மக்காத குப்பைகளை அப்புறப்படுத்துவதுதான் அவர்கள் திட்டம்.

இந்த தூய்மையாக்கல் திட்டம் குறித்து சென்னை ட்ரெக்கிங் கிளப்பின் நிறுவனர் பீட்டர் வான் கெய்த் (44) கூறிய போது.” நாங்கள் 14 வது தடவையாக இந்த நகர பகுதியில் தூய்மைபடுத்தும் பணியை செய்கிறோம். இந்த ஆற்றின் கரையோரம் காணப்படும் குப்பைகள் எல்லாம் இங்கே இருப்பவர்களால் குவிக்கப்பட்டவை அல்ல. மாறாக வெள்ளபெருக்கத்தின் போது வந்து குவிந்தவை. இங்கு கடினமான படிவங்களாக குப்பைகள் ஏற்கனவே இருந்தன. நாங்கள் அதனை இரண்டு வாரமாக சுத்தம் செய்து நீக்கிவிட்டோம்.” என்றார்.

ஆற்றின் மற்றொரு கரையோரம் குப்பை குவியல்கள் இப்போதும் நிறைந்து காணப்பட்டன. அவை ஆற்று நீரை கறுப்பு நிறமாக மாற்றி கொண்டிருந்தது.” நாங்கள் ஆற்றின் மறு கரைக்கு போகலாம் என்றால், தூய்மைபடுத்த வேண்டிய நிலம் மிகவும் செங்குத்தானதாக உள்ளது. சட்டவிரோதமாக கழிவுகள் வந்து கலப்பதால் ஆற்று நீர் கறுப்பாக உள்ளது.” என கூறினார் பீட்டர்.

ஆற்றின் சரிவுகளில் காணப்பட்ட குப்பைகளில், துணிகளும், உடைந்த கண்ணாடி துண்டுகளும், பிளாஸ்டிக் பைகளும் உட்பட பிற வீட்டு உபயோக குப்பைகளாக நிறைந்து காணப்பட்டன. பீட்டரும் அவரது குழுவினரும், இதுபோன்ற அனைத்து மட்காத குப்பைகளையும் சேகரித்து, சென்னை மாநகராட்சி வண்டியில் ஏற்றி பள்ளிக்கரணையில் உள்ள கிடங்குக்கு அனுப்புகின்றனர்.

சென்னை ட்ரெக்கிங் கிளப், இரண்டு மாதங்களுக்கு முன் தனது தூய்மை பணியை செய்ய துவங்கியது.”  நாங்கள் நிவாரண பணிகளை கடலூர், பழவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் துவங்கினோம். பல குடிசை வீடுகளும் மோசமான நிலையில் இருந்ததுடன் கழிவு நீர் வீடுகளின் உள்ளே நுழைந்தன. பழவேற்காட்டிலும், கடலூரிலும் அப்படிப்பட்டவர்களுக்கு நாங்கள் உதவினோம். அதன்பின்னர் அடையார் மற்றும் கூவம் ஆற்று கரையோரம் நாங்கள் தூய்மை பணியை துவங்கினோம்.” என தொடர்ந்தார் பீட்டர்.

கிளப் உறுப்பினர்களிடையே சுற்றுசூழல் பாதுகாப்பிற்காக  தூய்மை பணிகளை செய்ய வேண்டும் என்ற உணர்வு வந்தது  என கூறுகிறார் பீட்டர். “ சென்னை ட்ரெக்கிங் கிளப், ட்ரெக்கிங் பயணங்களை அழகிய இயற்கை காட்சிகள் நிறைந்த பகுதிகளான காடுகளுக்கும், மலை தொடர்களுக்கும், ஆறுகள், ஏரிகளுக்கும் நடத்தி கொண்டிருக்கிறது. இயற்கையை நாங்கள் எங்கள் இதயத்துடன் சேர்த்து அரவணைக்கிறோம். அதனால் தான் நாங்கள் இப்படிப்பட்ட ஒரு பணியை இங்கு துவங்கியுள்ளோம். இதன்மூலம் ஆயிரக்கணக்கான மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், இயற்கையை பாதுக்காக்க வேண்டும் என்ற உணர்வையும் ஏற்படுத்துகிறோம்.”

சென்னையை பொறுத்தவரை, கழிவுகளை அப்புறப்படுத்துவது மிக கடினமான ஒன்றாக மாறி வருவதால், விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஒரு அவசர தேவை என பீட்டர் கருதுகிறார்.” ஒவ்வொரு நாளும் 6000 டன்கள் குப்பைகள் இந்த சென்னையில் உருவாகின்றன. நமது வாழ்வாதாரங்களான ஆறுகளிலும், நீர்நிலைகளிலும், கடல்களிலும் இவை போய் சேருகின்றன.நாட்டிலேயே அதிக அளவில் குப்பைகள் உருவாகுவது சென்னையில் தான். அவற்றை பிரிப்பதற்கான எந்த முறையும் இல்லை. அவைகள் எல்லாம் பள்ளிக்கரணையில் கொண்டு போய் குவித்து வைக்கப்படுகின்றன. அவற்றை சரியாக பிரித்தால், 90% குப்பைகளையும்  நமது வீட்டிலேயே மறுசுழற்சி செய்து கொள்ள முடியும்.”

இதில் கலந்து கொண்டுள்ள தொண்டர்கள், பல காரணங்களால் இப்படிப்பட்ட முயற்சியை துவங்குவதற்கு உதவி புரிந்துள்ளனர். இதில் கலந்து கொண்ட டாக்டர் ரூபா கூறுகையில் “ நான் இந்த முயற்சியில் இணைந்ததே பொதுமக்களுக்கு தங்கள் பகுதியை சுத்தமாக வைத்திருக்க உதவுவதற்காகத்தான். ஆனால் இதன் மூலம் நான் பலவகையில் மாறியுள்ளேன். நான் இப்போது வீட்டிற்கு போனால் எனது வீட்டை தூய்மையாக வைப்பதுடன், அவற்றை பிரித்தும் வைத்து விடுகிறேன்.” என்றார்.

பொறியாளரான பெனிஸ் கூறுகையில் தான் விவசாய குடும்ப பின்னணியிலிருந்து வருவதாகவும், ஏற்கனவே மரம் நடும் நிகழ்வுகளில் கலந்து கொண்டதாகவும் குறிப்பிடுகிறார். அதோடு இது பொதுமக்களின் சமூக பொறுப்பும் என கூறுகிறார்.

மோகனை பொறுத்தவரை, இது போன்ற இடங்களை தூய்மை செய்வதன் மூலம் தனது நேரத்தை பயனுள்ள முறையில் செலவழிப்பதுடன், புதிய நண்பர்களும் கிடைக்கிறார்கள் என்பது தான்.

இதற்கு முன்னர், இந்த குழுவினர் சித்ரா நகர், பள்ளிக்கரணை, திருவான்மியூர் உட்பட சில பூங்காக்களிலும் தூய்மை பணிகளை செய்துள்ளனர்.

8 ஆண்டுகளுக்கு முன் பீட்டர் வான் கெய்த், இந்த சென்னை ட்ரக்கிங் கிளப்பை துவங்கினார். “ நான் விளையாட்டில் மிகவும் தீவிரமான நபர். எனக்கு ஒரு களம் தேவைப்பட்டது. அதற்காக ஒரு வெப்சைட்டை துவங்கி அதில் அனுபவ கதைகளையும், எனது பயணத்தில் எடுக்கப்பட்ட படங்களையும் வெளியிட்டேன். சில நேரங்களில், சைக்கிள் மிதித்தல் , ஓடுதல், மலையேறுதல் ஆகியவற்றில் என்னுடன் வந்து கலந்து கொள்வார்கள்.” இப்போது சென்னை ட்ரெக்கிங் கிளப்பில் 27000 க்கும் அதிகமானோர் உள்ளனர்.

இதனுடன், ட்ரக்கிங் கிளப் மரம் நடுதல், வருடாந்திர கடற்கரை தூய்மை பணி, இயற்கையை பற்றிய பயிற்சி நிகழ்ச்சிகள், கரிம வேளாண்மை மற்றும் வரலாற்று தலங்களை புதுப்பித்தல் போன்ற பணிகளை செய்கிறது. கூடவே வார விடுமுறை நாட்களில் மலையேற்ற நிகழ்வுகளை நடத்துவதுடன், நீச்சல் வகுப்புகள், ட்ரையத்லான் மற்றும் மாராத்தான் போன்றவற்றிற்கும் ஏற்பாடு செய்கின்றனர்.

 

Topic tags,