
‘பெங்களூர் டேய்ஸ்’ ரசிகர்களின் ரசனையை நன்கு புரிந்து கொண்டு எடுக்கப்பட்ட ஒரு மலையாள சினிமா. அது கேரளாவில் மட்டுமல்லாது நாட்டின் பிற பகுதிகளிலும் சிறப்பாக ஓடி பிரம்மாண்டமான வெற்றியை பெற்றது.
அந்த சினிமா தற்போது ‘பெங்களூர் நாட்கள்’ என்ற பெயரில் தமிழில் மறுவடிவம் பெற்று வருகிறது. அதன் ட்ரெய்லர் வெளியாகியுள்ள நிலையில், இந்த படத்தை பற்றிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் படம் அமையுமா என்பது பிப்ரவரி 5 அன்று அது வெளியாகவுள்ள தினத்தில் தெரிந்து விடும்.
“ ஒரு சினிமாவின் வெற்றியே அதன் இறுதி உள்ளடக்கத்தையும் அதனை ரசிகர்கள் எவ்வாறு எடுத்து கொள்கிறார்கள் என்பதிலும் தான் இருக்கிறது. தற்போதைய நிலையில் இந்த சினிமா நன்றாக உள்ளது. ஆனால் வெளியிடப்பட்ட பின் அது எப்படி இருக்கிறது என்பதை வைத்து தான் அதனை பற்றி ஒரு முடிவுக்கு வர முடியும். ஏற்கனவே தமிழில் ரீ மேக் செய்யப்பட்ட மலையாள சினிமாக்கள் சிறப்பானவையாக இருந்தன. பாபநாசம் சினிமா அதற்கு சிறந்த உதாரணம். அது மலையாள சினிமாவான திரிஷ்யத்திலிருந்து தமிழுக்கு ரீமேக் செய்யப்பட்டது “ என்கிறார் பத்திரிக்கையாளர் ஸ்ரீதர் பிள்ளை.
Image: Arya/ Facebook.com
பஸ்ட் போஸ்ட் இணையத்தின் தகவல்படி, 2015 மேய் மாதம் 30 ஆம் தேதி மலையாளத்தில் வெளிவந்த பெங்களூர் டேய்ஸ், கேரளாவில் 98 திரைகளிலும் ,பெருநகரங்களில் 105 திரைகளிலும் ஓடி 10 கோடிக்கும் அதிகமான வசூலை ஒரே வாரத்தில் அள்ளி எடுத்துள்ளது.
பெங்களூர் டேய்ஸ் இங்கிலாந்தில் ஒரே மாதத்தில் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்தததாக கூறுகிறார் திரை விமர்சகர் தரன் ஆதர்ஷ்.
9 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த சினிமாவின் ஒட்டுமொத்த வசூல் என பார்த்தால் 50 கோடி ரூபாயையும் தாண்டும்.
Image: FilmGala/ Facebook.com
நஸ்ரியா நசீம், நிவின் பாலி, டல்கர் சாலமன், பகத் பாஸ்ஸில் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய நாயகர்களாக நடித்திருந்தனர். குழந்தை பருவத்திலேயே ஒன்றாகவும், மிக நெருக்கமாகவும் வாழ்ந்த மூன்று உறவுக்காரர்களை பற்றியும், அவர்கள் தங்களது கனவு பிரதேசமான பெங்களூருவுக்கு இடம்பெயர்வதை பற்றியும் இந்த கதை கூறுகிறது.
தமிழில் உருவாகும் பெங்களூர் நாட்கள் சினிமாவில் நடிகர்கள் ராணா டகுப்பதி, ஸ்ரீ திவ்யா, ஆர்யா, பாபி சிம்ஹா, பார்வதி, சமந்தா, லக்ஷ்மி பாய் ஆகியோர் முக்கிய நாயகர்களாக நடித்துள்ளனர். பிவிபி சினிமா மற்றும் தில் ராஜூ ஆகியோர் இணைந்த இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை பெற்றுள்ளனர்.
மலையாளத்தில் வெளிவந்த பெங்களூர் டேய்ஸ் அஞ்சலி மேனன் இயக்கத்தில், அன்வர் ரஷீத் மற்றும் சோபியா பால் தயாரிப்பில் வெளிவந்தது.
ப்ரேமம், பெங்களூர் டேய்ஸ் போன்ற பல மலையாள திரைப்படங்களை தமிழ் ரசிகர்கள் பலர் சப்டைட்டில் உதவியுடன் ஏற்கனவே பார்த்துள்ளனர். இதனால் இந்த படங்கள் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளன. இந்த படங்கள் மீண்டும் ரீமேக் செய்யப்பட்டு திரையரங்குகளில் வருமாயின் மிகுந்த ஆவலுடன் அவற்றை வரவேற்க ரசிகர்கள் தயாராகவே உள்ளனர்.
பெங்களூர் நாட்கள் படத்தின் ட்ரெய்லர் வெளிவந்த பின் ரசிகர்களிடையே அதன் வரவேற்பு இன்று வரை நன்றாகவே உள்ளது. ஆனால் இதே வரவேற்பு, திரையரங்குகளில் படத்தை முழுமையாக பார்க்கும் போதும் கூட நீடிக்குமெனில் அடுத்தடுத்து பல படங்கள் இது போன்று ரீமேக்குகள் செய்யப்பட்டு வெளிவரக்கூடும் என கணிக்கலாம்.
Image: Kalakkal Cinema/Facebook.com