கடந்த இரண்டு நாட்களாக விக்னேஷின் செல்போன் மற்றும் அடையாள அட்டையை பறிமுதல் செய்து வைத்திருந்ததாக கூறினார் விக்னேஷின் அக்கா இலக்கியா

news Saturday, March 12, 2016 - 13:51

கோயம்பத்தூரை அடுத்த நிலம்பூரில், அமைந்துள்ளது கதிர் பொறியியல் கல்லூரி. இங்கு சிவில் என்ஜினீயரிங் பிரிவில் படிக்கும் விக்னேஷ் என்ற மூன்றாமாண்டு மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது உடல் கல்லூரியில் உள்ள ஹாஸ்டலில் வியாழனன்று இரவு 9 மணியில் கண்டெடுக்கப்பட்டது.

தற்கொலை செய்து கொண்ட மாணவர் விக்னேஷ், ஈரோட்டை சேர்ந்தவர். அவரது குடும்பத்தினர், கல்லூரி நிர்வாகம், மரணத்தை குறித்து தங்களுக்கு தெரிவிக்கவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து, விக்னேஷின் தாயார் சாந்தி கூறுகையில், “ நான் புதன்கிழமை இரவு, எனது மகனுக்கு போனில் அழைத்தேன். அப்போது வார்டன் போனை அட்டன்ட் செய்து, அவனுக்கு ஒரு தேர்வு எழுத கொடுத்திருப்பதாகவும், அதனால் எல்லா செல்போன்களும், கல்லூரி நிர்வாகத்தால் சேகரித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். நான் தொடர்ந்து இரவு முழுவதும் அவனுக்கு போன் அழைத்தேன். மறுநாள் காலை, நான் அவனுடைய நண்பன் ஒருவனுக்கு போனில் அழைத்த போது, அவன் எந்த தவறும் செய்யாமலேயே, அவனை கல்லூரி நிர்வாகத்தினர் கண்டித்தனர் என கூறினான். தொடர்ந்து, மதியம் 1:30 மணியளவில் எனது மகன் என்னை அழைத்தான். அப்போது, தான் மது குடித்துவிட்டு மற்றொரு மாணவனை அடித்ததாக அவர்கள் கூறியதாக கூறினான். அவன் அழுத வண்ணம், தான் எந்த தவறும் செய்யவில்லை என திரும்ப திரும்ப கூறினான்” என்றார்.

இதனிடையே, அந்த மாணவன் எழுதிய தற்கொலை கடிதத்தில், “ கல்லூரியின் கணக்காளர், புதன்கிழமையன்று நான் குடித்திருப்பதாக கூறி கல்லூரி முதல்வரிடம் அழைத்து சென்றார். அதனை தொடர்ந்து அவர்கள், என்னிடம் ஒரு கடிதம் எழுதி தந்தால் விடலாம் என கூறினார்கள். நான் மது குடிக்காமலேயே, அவர்கள் கூறியபடி எழுதி கொடுத்தேன்.”

விக்னேஷின் நண்பர்கள், அவரை கண்டுபிடித்து, கோயம்பத்தூர் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளனர். அங்கே விக்னேஷ் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

இதனிடையே, விக்னேஷின் அம்மா, கல்லூரி நிர்வாகத்தின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தான் உடலை வாங்க போவதில்லை என கூறியுள்ளார்.

இதுகுறித்து விக்னேஷின் சகோதரி இலக்கியா, செய்தியாளர்களிடம் பேசிய போது,” எனது தம்பி, எதோ செய்யாத தவறுக்கு தண்டிக்கப்பட்டுள்ளான். அதோடு, அவன் கல்லூரி நிர்வாகத்தால், தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டான். அவனது செல்போனையும், அடையாள அட்டையையும், அவர்கள் இரண்டு நாட்களாக பறிமுதல் செய்து வைத்துள்ளனர். அவனது அறையில் அவன் அடைத்து வைக்கப்பட்டுள்ளான். அவனது நண்பர்கள் அவன் மது அருந்தியதாக கூறி தண்டிக்கப்பட்டதாக கூறினர். ஆனால் அவன் ஒருபோதும் மது அருந்தியதில்லை.” என்றார்.

மேலும் அவர் போலீசார் இந்த விவகாரத்தை மூடி மறைக்க முயல்வதாக குற்றஞ்சாட்டினார்.

“ கல்லூரி நிர்வாகி முன்னாள் அதிமுக உறுப்பினர் என்பதால், போலீஸ் இவ்விவகாரத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. கல்லூரி நிர்வாகம் என்ன நடந்தது என கூறுவதோடு அல்லாமல், அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கும் வரை நாங்கள் உடலை பெற போவதில்லை.” என்றார் இலக்கியா.

மேலும் அவர், வியாழன் மாலை 3 மணியளவில் தனது தம்பி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும், 9 மணியளவில் கல்லூரி மாணவர்கள் கண்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்ததாகவும் கூறினார். ஆனால் தங்களுக்கு வெள்ளியன்று காலையில் தான் தகவலே தெரிவிக்கப்பட்டதாகவும் கூறினார்.

மேலும், தனது தம்பி கல்லூரி கட்டணத்தை அடைக்கவில்லை  என தவறாக, கல்லூரி நிர்வாகம் குற்றஞ்சாட்டியதாகவும், போதிய உணவு சரிவர அவருக்கு கொடுக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.

இதற்கிடையே, கல்லூரி மாணவர்கள் இந்த சம்பவத்தையொட்டி போராட்டம் நடத்தியதாகவும், கல்லூரியின் பொருட்களை அடித்து நொறுக்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும், போலீசார் கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக இதுவரை வழக்கு பதியவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றன.

கல்லூரி நிர்வாகத்தின் கருத்தினை அறியமுற்பட்டபோது, அங்கிருந்து எந்தவித பதிலும் வரவில்லை.

Become a TNM Member for just Rs 999!
You can also support us with a one-time payment.